வரும் ஜெனிவாகூட்டத்தொடரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஒரு பொது உடன்பாட்டை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு சுமந்திரன் ஒரு நகர்வை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. இதன்படி சுமந்திரன் ஒரு கொன்செப்ட்பேப்பரை உருவாக்கி அதனை விக்னேஸ்வரனிடமும் கஜேந்திரகுமாரிடமும் பரிசீலனைக்கு வழங்கியிருப்பதாக அப்பத்திரிகை கூறியிருக்கிறது. அந்தக் பேப்பரில் என்ன இருக்கிறது என்பதனை பின்னர் பார்க்கலாம். ஆனால் இப்படி ஒரு பொது உடன்பாட்டைஎட்டுவதற்கான தேவை சுமந்திரனுக்கு ஏன் ஏற்பட்டது?
பின்வருமாறு சந்தேகிக்கப்படுகிறது. முதலாவது காரணம் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் வரலாம் என்று ஓர் எதிர்பார்ப்பின்பின்னணியில் அந்த நெருக்கடிகளை வெற்றிகரமாக கையாண்டு ஐநா மற்றும் மேற்கு நாடுகளின் உதவியோடு ஒரு புதிய தீர்மானத்தை நிறைவேற்ற கூட்டமைப்பு முயற்சிக்கிறது. இப்புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விவகாரங்கள் தொடர்பில் மூன்று கட்சிகளுக்கும் இடையே ஒரு பொது உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று கூட்டமைப்பு சிந்திக்கிறது.
இரண்டாவது காரணம் – கொழும்பிலுள்ள சில மேற்கு நாடுகளின் தூதுவர்களுடன் சுமந்திரன் பேசியிருக்கிறார். அதன்படி வரும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்கலாமா என்று ஐநா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் சிந்திபதாகத் தெரிகிறது. சுமந்திரன் அக்கருத்தைப் பிரதிபலிக்கிறார். எனவேஅக்கருத்துக்கு ஆதரவாக ஏனைய கட்சிகளை வளைக்கமுயல்கிறார்.
மூன்றாவது காரணம்-ஏற்கனவேமாவையாழ்ப்பாணத்தில் கட்சிகளை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார். அந்தக் கூட்டு இன்று வரையிலும் உடையவில்லை. எனினும் அந்தக் கூட்டை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றஆசை மாவைக்குண்டு அதில் அவருக்கு மாகாணசபையை நோக்கிய உள்நோக்கங்கள் இருக்கக்கூடும். எனினும் சாத்தியமான ஒரு கூட்டைக் கட்டி எழுப்புவதே மாவைசிவ ஞானம் போன்றவர்களின் ஆசையாக தெரிகிறது. இந்நிலையில் மாவையின் கூட்டுக்குப் போட்டியாக ஒரு புதிய கூட்டை உருவாக்கி மாவையின் முயற்சிகளின் முக்கியத்துவத்தை குறைப்பதே சுமந்திரனின் நோக்கம் என்ற ஒரு சந்தேகம்.
இந்த மூன்றுசந்தேகங்களையும் இனி விரிவாகப் பார்க்கலாம். அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் அரசாங்கம் நிலை மாறுகால நீதிக்கான ஜெனிவா தீர்மானத்தில் இருந்து விலகியதை உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு கூட்டத்தொடரில் அரசாங்கம் உத்தியோக பூர்வ முடிவை அறிவித்து விட்டது. ஆனால் அவ்வாறு அறிவித்த பின்னரும் கடந்த ஓராண்டு காலமாக நிலைமாறு கால நீதியின் கீழ் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய கட்டமைப்புக் களைகலைக்காமல் அப்படியே ராஜபக்சக்கள் தொடர்ந்தும் பேணி வருகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ; இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம்; சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான அலுவலகம் ஆகிய மூன்று கட்டமைப்புகளையும் அவர்கள் தொடர்ந்தும் பேணி வருகிறார்கள். மேற்படி அலுவலகங்கள் முன்னம் இயங்கிய இடத்தில் இப்பொழுது இயங்கவில்லை. அவை நீதி அமைச்சு இயங்கும் கட்டடத்துக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. எனினும் அக்கட்டமைப்புகளுக் குரிய கொடுப்பனவுகள் இன்று வரையிலும் நிறுத்தப்படவில்லை.
அதிலும் முக்கியமாக சில வாரங்களுக்கு முன்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களுகான அலுவலகம் ஒரு முதல் நிலை அறிக்கையைவெளியிட்டது. அதில் இதுவரையிலும் தனக்குத்தரப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் 14315 பேர் காணாமல் போயிருப்பதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 21053 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்திருப்பதாகவும் அந்த முறைப்பாடுகளை ஒழுங்கு முறையாக பரிசீலித்து இப்பொழுது அந்த முதல்நிலை அறிக்கையின் படி மொத்தம் 14315 காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை தமிழ் ஊடகங்களில் பெருமளவுக்கு விவாதப் பொருளாக மாறவில்லை.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின் நடந்த வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு முன்னைய ஆண்டை விட அதிக தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் ஆட்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் உள்ளதா? என்ற சந்தேகம் உண்டு.
எனவே மேற்கூறியவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரசாங்கம் நிலைமாறுகால நீதிக்குரிய கட்டமைப்புக்களை அவை பலவீனமானவை என்றபோதிலும் அவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதிலும் தொடர்ந்தும் இயங்கவிடுவதன் மூலம் வெளி உலகத்துக்கும் ஐநாவுக்கும் எப்படிப்பட்ட ஒரு செய்தியை கொடுக்க முயற்சிக்கின்றது?
நாங்கள் 30/1 தீர்மானத்தின் கீழ் பொறுப்புக் கூறத்தயாரில்லை.ஆனால்ராஜபக்சேபாணியிலான ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை உள்நாட்டு வரையறைகளுக்குள் முன்னெடுக்கத் தயாராக இருக்கிறோம் என்பதே அந்தச் செய்தியா? மகிந்தராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அவர் அப்படிப்பட்ட பொறி முறைகளைஉருவாக்கினார். கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவின் மூலம் அவர் பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை முன்னெடுப்பதுப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்பினார். அதே பாணியில் இந்த முறை அவருடைய சகோதரரும் ஒரு கட்டமைப்பை; ஒரு பொறிமுறையை உருவாக்க யோசிக்கிறாரா?
ஆனால் 30/1 தீர்மானத்துக்குஐநா ஏற்கனவே இரண்டு தடவை கால அவகாசம் வழங்கி விட்டது. அதில் இரண்டாவது கால அவகாசம் வரும் மார்ச் மாதத்தோடு முடிகிறது. அது தொடர்பான எழுத்து மூல அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வரும் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பார். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களை கலைக்காமல் பேணும் அரசாங்கம் நிச்சயமாக முற்று முழுதாக ஐநாவுக்கான பொறுப்புக்கூறும் கடப்பாட்டில் இருந்து விலகும் ஒரு முடிவை எடுக்கப் போவதில்லை என்று ஐ.நாவின்முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்துக்கு இணை அனுசனை வழங்கிய நாடுகள் நம்புகின்றனவா?
ராஜபக்சாக்கள் தமது தனிச் சிங்களவாக்காளர்களுக்கும் படைத்தரப்புக்கும் அச்சம் ஏற்படாத விதத்தில் ஒரு கட்டமைப்பை சிந்திக்கக் கூடும். அதற்குரிய ஒரு பொறிமுறையை அவர்கள் சிந்திக்கக்கூடும். இந்தப் பொறிமுறையானது ராஜபக்ச பாணியிலான ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையாக அமையலாம். அந்தப் பொறிமுறைக்குத் தேவையான ஒரு புதிய தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்ற முயற்சிக்கலாம். அல்லது ஏற்கனவே உள்ள தீர்மானத்தில் ஏதும் திருத்தங்களைச் செய்ய யோசிக்கலாம். எல்லாவற்றுக்கும் வரும் மார்ச் வரை பொறுத்திருக்க வேண்டும்.
இந்த இடையீட்டுக்குள்தான் சுமந்திரன் ஜெனிவாவை எதிர் கொள்வதற்கான ஒரு கூட்டுத் தயாரிப்பு குறித்து சிந்திப்பதாக தெரிகிறது. இது விடயத்தில் கஜேந்திரகுமார் தமிழர்களின் விவகாரத்தை ஜெனிவாவுக்குள் முடக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரிகிறது. விக்னேஸ்வரனும் ஜெனிவாவிற்கு வெளியே விவகாரத்தை கொண்டு போகவேண்டும் என்று கருதுவதாகத் தெரிகிறது. இந்நிலையில் திரும்பவும் ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு சாதகமான ஒரு சுதாகரிப்பைச் செய்வதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கின்றதா?
இது விடயத்தில் அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒரு நகர்வை யேகஜேந்திரகுமார் ஏற்றுக் கொள்ளலாம் என்று தெரிகிறது. விக்னேஸ்வரனும் ஜெனிவாவுக்கு வெளியே போக வேண்டும் என்று கருதுவதாகத் தெரிகிறது. எனவே ஜெனிவாவை ஒரு பொதுக்கட்டமைப்பின் மூலம் கையாள்வது என்ற விடயத்தில் மூன்று கட்சிகளையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்க மேலும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது.
இதை இந்த மூன்று கட்சியைச் சேர்ந்தவர்களும் தாங்களாக முன் வந்து செய்வார்கள் என்று தோன்றவில்லை. சுமந்திரனின் நகர்வு எனைய கட்சிகளால் சந்தேகத்தோடு தான் பார்க்கப்படும். தவிர அவருடைய கட்சிக்குள்ளேயே மாவை சிவஞானம் போன்றவர்கள் அது தாம் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் ஒரு கட்டமைப்புக்கு எதிரானதா என்று சந்தேகிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
எனவே இது விடயத்தில் அனுசரணை செய்யக்கூடிய ஒரு குழு அவசியம். தாயகத்திலும் புலம் பெயர்ந்த பரப்பிலும் இருக்கக் கூடிய ஈடுபாடு உடையவர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இது தொடர்பில் ஒரு அனுசரணை செய்யும் கட்டமைப்பை உருவாக்கி இணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டால் தான் பயன் பொருத்தமான விளைவு ஏற்படும். இல்லையென்றால் இப்போது உள்ள கட்சிகளை ஒரு புள்ளியில் சந்திக்க வைப்பது கடினம்.
ஆனால் துயரம் என்னவென்றால் அவ்வாறு அனுசரணைப் பணிகளை முன்னெடுக்கக் கூடிய சக்திகள் அனைத்தும் ஏற்கனவே விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த ஐந்தாண்டுகளாக முயன்று தோற்றுப்போய் விட்டார்கள். அதனால் அவர்கள் மத்தியில் சலிப்பும் சோர்வும் காணப்படுகிறது என்பதே உண்மைநிலை. இந்நிலையில் கட்சிகளுக்கிடையே விவகாரமையக் கூட்டுக்களை உருவாக்கப் போகும் அனுசரணையாளர்கள் யார் ?