யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம், மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டினால் கடந்த 2ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அந்தச் சமர்ப்பணத்தின்போது, அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனையடுத்து மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.