இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ தற்போதைய கோவிட்-19 நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கப்போகின்றார் என்பது தெளிவாக இல்லாத நிலையில், அங்கு கொரோனா மரணங்கள் அதிகரித்த வண்ணம் செல்வதை உலகமே அவதானித்து வருகின்றது.
ஆனால் ஜனாதிபதி கோட்டாபாய அவர்கள், இந்த மாத தொடக்கத்தில் நடந்த இலங்கை பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய போது, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் “நன்மை பயக்கும் விளைவுகளை” சாதகமாக்கிக்கொள்ளுமாறு பெருவணிகங்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த இணையவழி நிகழ்வை நாட்டின் முதன்மையான வணிக அமைப்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
சுதந்திர தின விழாவில் இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ டிசம்பர் 1 நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்புரையாற்றினார். இந்தியா மற்றும் இலங்கையின் “தன்னம்பிக்கை நோக்கங்கள்” என்று அழைக்கப்படும் இந்தியாவின் “கூட்டியக்கம் மற்றும் குறைநிரப்பு” தன்மை பற்றி அவர் பேசினார். இவை, இரு அரசாங்கங்களும் தங்கள் பெரும்-வணிக சார்பு செயற்திட்டங்களை மூடி மறைக்கப் பயன்படுத்தும் சங்கேத மொழி ஆகும்.
சீதாராமன் முக்கிய புள்ளியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம், சமீபத்திய மாதங்களில் சந்தை சார்பு செயற்திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது. இவற்றில், ஒவ்வொரு தொழிற்துறையிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது, சிறு விவசாயிகளின் இழப்பில் தனியார்மயமாக்கல் மற்றும் விவசாய சீர்திருத்தங்களை துரிதப்படுத்துவது ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கைகள், இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வெகுஜன போராட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளன.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, புது தில்லியும், ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றும், கொடிய வைரஸுடன் “புதிய வழமை” என்பதை ஏற்றுக்கொண்டு வாழக்கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த கொள்கைகளால் இந்தியாவில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9.8 மில்லியனாக உயர்ந்துள்ளதுடன், 141,000 இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்.
தனது உரையில், ஜனாதிபதி இராஜபக்ஷ, இந்தியாவை இலங்கையின் ஒரு “நெருங்கிய நண்பர் மற்றும் பங்காளர்” என்று அறிவித்ததோடு, மேலும் சர்வதேச நிதி மூலதனத்தை “டிஜிட்டலில் ஒருங்கிணைந்த ஒற்றைவழி தடைநீக்கல் முறைமை” மூலம் ஊதிப் பெருக்கச் செய்வதற்கான அதன் முயற்சிகளையும் பாரட்டினார் -வேறுவிதமாகக் கூறினால், முந்தைய முதலீட்டு சட்டங்களையும் விதிமுறைகளையும் கைவிட்டு முன்நகர்வதாகும்.
இலங்கையில் இதேபோன்ற மாற்றங்களைச் செய்து வரும் இராஜபக்ஷ, தனது அரசாங்கம் “ஒருபுறம் வைரஸைக் கட்டுப்படுத்துவதோடு, மறுபுறம் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை உறுதி செய்வதற்குமான இரட்டை கட்டாயங்களை” சமநிலைப்படுத்துவதாக மாநாட்டில் கூறினார். சில வழிகளில், “இந்த புதிய வழமையானது நன்மை பயக்கும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இது பல புதிய வேலை நடைமுறைகளை பின்பற்ற நிர்ப்பந்தித்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
இராஜபக்ஷவின் முழு உரையும், உண்மையில், நெருக்கடியின் “நன்மை பயக்கும் விளைவுகளை” அறுவடை செய்ய பெரும் வணிகத்தினருக்கு வலியுறுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டது -உதாரணமாக, தொழிலாளர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்துவதும், இலாபத்தை அதிகரிப்பதுமாகும். பெரிய நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் மோசமான சூழ்நிலையை சமூக நிலைமைகள்.கையாள்வது பற்றி அவரது உரையில் ஒரு வார்த்தை கூட கிடையாது.
அரசாங்கம், தொற்றுநோய் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையில் சமநிலைப்படுத்த முயல்வது குறித்த ஜனாதிபதியின் கூற்று போலியானதாகும். ஏப்ரல் மாத இறுதியில் இருந்து, கொழும்பு அரசாங்கம் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப வலியுறுத்தி வருகிறது. இது கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் புதிய எழுச்சியை உருவாக்கியுள்ளது.
நேற்றைய புள்ளிவிவரங்களின்படி, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாத தொடக்கத்தில் சுமார் 3 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதுடன் 144 பேர் மரணித்துள்ளனர். அரசாங்கம் நிலைமை முறையாக நிர்வகிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டு, குறைந்த பரிசோதனைகளையே நடத்தும் நிலைமைகளின் கீழும் இந்த உயர்ந்த எண்ணிக்கை காணப்படுகிறது.
மாநாட்டில் இராஜபக்ஷ மேற்கோள் காட்டிய “புதிய வழமை” வாய்ப்புகளில் ஒன்று, “செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களால் கூட பணிகளை மேற்கொள்ள முடியும்,” என்பதாகும். அரசாங்கம், “புதிய வணிக மாதிரிகளை வலுவாக ஊக்குவிக்கிறது” என்றும், “இந்த உற்பத்தித்திறனை மேம்படுத்தும் மாற்றத்திற்கு ஒத்துழைக்க” புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி “அவசியம்” என்றும் அவர் அறிவித்தார்.
அதன் பெருநிறுவன சங்கேத மொழியை அகற்றினால், பெருமளவில் தொழிலாளர்களை குறைப்பதும் மற்றும் சுரண்டலை அதிகரிப்பதுமே இதன் அர்த்தமாகும்.
ஏப்ரல் பிற்பகுதியில் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தபோது -சமூக இடைவெளியை ஒரு சாக்குப் போக்காகப் பயன்படுத்திக்கொண்டு- இராஜபக்ஷ, அரச மற்றும் தனியார் நிறுவனங்களை “தேவையான எண்ணிக்கையிலான ஊழியர்களை” மட்டுமே திரும்ப அழைக்குமாறு உத்தரவிட்டார். இது, அதே உற்பத்தித்திறனைப் பேணிக்கொண்டு, தொழில்கள் மற்றும் ஊதியங்களைக் குறைப்பதற்காக முதலாளிகளுக்கு விடுக்கும் ஒரு தெளிவான சமிக்ஞையாக இருந்தது.
சில தொழிற்சாலைகளில், “தற்காலிகமாக வேலைநிறுத்தம் செய்யப்பட்ட” நிரந்தர தொழிலாளர்களின் மாத ஊதியம் 14,500 ரூபாயாக (78 அமெரிக்க டாலர்) குறைக்கப்பட்ட அதே நேரம், ஏனைய பதவிகள் நீக்கப்பட்டன. இது முத்தரப்பு செயலணி என்று அழைக்கப்படும் அரசாங்க அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளை தவறாமல் சந்திக்கும் தொழிற்சங்கங்களின் முழு ஆதரவோடு இந்த வெட்டுக்கள் திணிக்கப்பட்டன.
இராஜபக்ஷ தனது உரையின் போது, இலங்கையின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்கள் ஊதிப் பெருகுவதைப் பற்றி பதற்றத்துடன் குறிப்பிட்டார். “நிலுவையில் உள்ள கடனின் பெரும் பகுதியை திருப்பிச் செலுத்துவது கவலைக்குரிய விடயமாக உள்ளது… கடன்களை நாங்கள் அதிகமாக நம்பியிருப்பது முடிவுக்கு வர வேண்டும்,” என்று அவர் கூறினார். “நமது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதும் உள்ளூர் முதலீட்டை ஊக்குவிப்பதுமே” தீர்வாகும் என அவர் தொடர்ந்து தெரிவித்தார்.
கடன் சேவை கொடுப்பனவுகள் செலுத்திய பின்னர் இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் இந்த ஆண்டு சுமார் 6 பில்லியன் டொலர்களாக குறைந்துவிட்டன. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த கொடுப்பனவுகள் ஆண்டுதோறும் 4.5 பில்லியன் டொலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் கடன், அடுத்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதத்தை தாண்டக்கூடும்.
செப்டம்பரில், மூடி தரப்படுத்தலானது இலங்கையின் கடன் மதிப்பீட்டை தவணை தவறலுக்கு ஒரு புள்ளி மேலே உள்ள Caa1 இற்கு தரமிறக்கியது. கடந்த வாரம், மற்றொரு மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச், நாட்டின் மதிப்பீட்டை CCC இற்கு குறைத்தது. அரசாங்கம் தனது கடன் தவணைகளை நிறைவேற்றும் என்று இராஜபக்ஷ கூறியுள்ள போதிலும், உண்மையில், நாடு தவணை தவறலின் விளிம்பில் உள்ளது.
“அதிக நேரடி முதலீடுகளை ஈர்ப்பதன்” மூலம் வெளிநாட்டு இருப்புக்களை உயர்த்துவதற்கான இராஜபக்ஷவின் முயற்சி, இந்த முதலீட்டாளர்களை முழுமையாகப் பாதுகாப்பதற்கான புதிய சட்டங்களை உருவாக்குவதை உள்ளடக்கி இருக்கும். அவர் விரிவாக விளக்கவில்லை என்றாலும், இந்த நடவடிக்கைகள் குறைந்த வணிக வரிகளையும், இலங்கையின் வளங்களையும் தொழிலாள வர்க்கத்தையும் தடையின்றி சுரண்டுவதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரதானமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற வளர்ச்சியடையாத நாடுகளைப் போலவே, இதன் அர்த்தம் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் பிற உற்பத்தி செலவுகளைக் குறைப்பதற்கான கழுத்தை நெரிக்கும் கூட்டுத்தாபன போட்டியை தீவிரப்படுத்துவதாகும்.
பெரும் வணிகங்களுக்கு மலிவான கடன்களை வழங்குவதற்காக வணிக வங்கிகளுக்கு 178 பில்லியன் ரூபாயை விடுவிக்குமாறு இராஜபக்ஷ அரசாங்கம் இதற்கு முன்னர் மத்திய வங்கிக்கு உத்தரவிட்டது. அதன் 2021 பாதீட்டில், தனிநபர் மற்றும் பெருநிறுவன வரி குறைப்பு, அத்துடன் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு விலக்கு மற்றும் வரி விடுமுறைகள் உள்ளிட்ட பெரும் வரி சலுகைகளை அது அறிவித்தது. இது அரசாங்க துறையை மேலும் சரிக்கவும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மேலும் தனியார்மயமாக்குவதாகவும் அறிவித்தது.
இலங்கை திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகலே, மூலோபாயமற்ற அரச நிறுவனங்களை விற்றுத் தள்ளவும், ஏனையவற்றை கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடவும் உடனடித் திட்டங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மாநாட்டில் கூறினார். இதில் அரசுக்கு சொந்தமான கிரன்ட் ஹையட், கிரன்ட் ஓரியண்டல் ஹோட்டல், ஹோட்டல் டெவலப்பர்ஸ், சீனோர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் ஆகியவை அடங்கும்.
சில வாரங்களுக்கு முன்பு, துறைமுகத்தில் பரவி வரும் தொற்றுநோயிலிருந்து சரியான பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுவதற்கு எதிராக சவால் செய்யத் தொடங்கியதை அடுத்து, 15,000 துறைமுக ஊழியர்களுக்கு இராஜபக்ஷ அத்தியாவசிய சேவை ஆணையை விதித்தார். அந்த அடக்குமுறை நடவடிக்கையானது, கொவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது அதிகரித்து வரும் சிக்கன நடவடிக்கை தாக்குதல்களுக்கு எதிராக தலைதூக்கும் அனைத்து எதிர்ப்பையும் நசுக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் என, கூட்டுத்தாபன தலைவர்களுக்கு விடுக்கும் ஒரு நேரடி சமிக்ஞையாகும்.
எதிர்க்கட்சி நாடாளுமன்றக் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றவற்றின் வாய்மொழி தோரணைகள் ஒரு புறம் இருக்க, இந்த அமைப்புகள், உழைக்கும் மக்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களையும், பிரதான நிறுவனங்களை பலப்படுத்துவது மற்றும் சர்வாதிகார வழிமுறைகளை நோக்கி மேற்கொள்ளும் நகர்வுகளையும் ஆதரிக்கின்றன. பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது, பெரும் வணிகத்திற்கான பிணை எடுப்பு நிதி ஒதுக்கீடு மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் மீதான அத்தியாவசிய சேவை உத்தரவையும் அவர்கள் ஆதரித்தனர். கடந்த வாரம், அவர்கள் அனைவரும் பாதீட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு செலவு ஒதுக்கீட்டை நிறைவேற்றினர்.
இலங்கை வர்த்தக சபை மாநாட்டிற்கு இராஜபக்ஷவின் “ஆலோசனை”, தொழிலாள வர்க்கம் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும், அவர்களோடு தொங்கிக்கொள்ளும் தொழிற்சங்கங்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகளிடம் இருந்தும் பிரிந்து, ஒரு சோசலிச மற்றும் அனைத்துலகவாத அடிப்படையில் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.