லோகேந்திரலிங்கம்- கனடா
கோடைவிலகி இலையுதிர் காலம் தோன்றவே, அதனை வரவேற்கவேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள், வீதியின் இருமருங்கும் வளர்ந்திருந்த மரங்களிலிருந்து விழுந்த இலைகள் காற்றின் வீச்சுக்கு அள்ளுப்பட்டுப் போக, எஞ்சியவை கரைக்கு வந்து ஒதுங்கிய மீன் குஞ்சுகளைப் போல தரையெங்கும் ஊசலாடிக்கொண்டிருந்தன..
சற்று குளிரான கால நிலை என்பதால் வெளியில் நடந்து செல்பவர்கள் அரைக்குளிரைத் தாங்கக்கூடிய ஜாக்கட்களை அணிந்து சென்றார்கள். நகரசபை சுத்திகரிப்பு லாரி ஒன்று, ஒரு வீட்டின் முன்பாக வைக்கப்பட்டிருந்த ‘பிளாஸ்ரிக்டைகூடை’ ஒன்றில் நிறைந்து வழிந்த குப்பைகளை தனது இயந்திரக் கைகளால் தூக்கி பக்குவமாக உள்ளே வீசியது.
வாகனத்தைச் மெதுவாகச் செலுத்தியபடி வீதியால் சென்று கொண்டிருந்த நேசன் ஆரம்ப பாடசாலை அமைந்திருக்கும் சந்தியைக் கடப்பதற்கு முன்பாக சிவப்பு நிற வீதிச் ‘சிக்னல்’ ஒளிர்ந்தது. அதனால் தனது நிசானை ‘பிறேக்’ போட்டு நிறுத்திக் கொண்டு வலப் புறமாகப் பார்வையைச் செலுத்தினான்.
சில விநாடிகள் அவனது கைகளுக்கும் கால்களுக்கும் ஓய்வு கிடைத்தன. ஆனால் மனம் மடடும் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது.. நோய்த் தொற்று தொடர்பான பயம் நேசனையும் பற்றியிருந்தது உண்மைதான்.
அந்தப் பாடசாலைக்குத் தான் நேசனின் இரண்டு பெண் பிள்ளைகளும் சென்று வருகின்றார்கள். வாரத்தில் ஐந்து நாட்களும் இங்கு வந்து அவர்களை வீட்டுக்கு அழைத்துப் போகும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது.
சாதாரண நாட்கள் என்றால் இந்த நேரத்தில் பெற்றோர் அல்லது உறவினர்கள் கூடி நின்று ஒருவர் இருவராக உரையாடிக் கொண்டிருப்பார்கள். ஆசிரியர்கள் சிலர் வெளியே வந்து வெளியில் விளையாடும் பிள்ளைகளைக் கவனிக்கும் பணியைச் செய்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. உலகத்தையே கலக்கி நிற்கும் ‘கொரோனா’ இப்போது அவர்களில் பலரை வீட்டிலிருந்து கற்கவும் கற்பிக்கவும் கட்டாயப்படுத்திவிட்டது.
பாடசாலைக்கு வரும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. ஆனாலும் அரசாங்கத்தின் ஏற்பாட்டின்படி, விருப்பமுள்ள மாணவர்கள் பாடசாலைக்கு நேரடியாக சமூகமளித்து. தமது கற்றலை தொடரலாம் என்ற ஒழுங்கின் பிரகாரம், அந்தப் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. அதன் அறிகுறியாக மாணவர்களும் ஆசிரியர்கள் சிலரும் வெளியே மைதானத்தில் தேகப்பயிற்சி செய்த வண்ணம் நின்றார்கள்.
நேசனின் வாகனத்தின் பின்னால் நின்ற கார்ச் சாரதி ஒங்கி எழுப்பிய “ஹார்ன்’ சத்தத்தால் பாடசாலைப் பக்கமிருந்த பார்வையை வீதிச் சிக்னல் பக்கம் திருப்பினான். எதிரே சிவப்பிவிருந்து பச்சைக்குத் திரும்பியிருந்த ‘சிக்னல்’ விளக்கு நேசனைப் பார்த்துச் சிரித்தது.
பின்னால் வாகனச் சாரதிக்கு கைகளால் சைகை காட்டி மன்னிப்புக் கேட்டுவிட்டு தனது வாகனத்தை மீண்டும் செலுத்தத் தொடங்கினான்.
சற்றுத் தூரம் கடந்த பின்னர் தான் அவனுக்கு “ஒன்றை மறந்துவிட்டாயே” என்று மனம் சொல்லியது.
கடந்து வந்த பாடசாலைச் சந்தியில் மஞ்சள் நிறத்திலான சீருடை அணிந்தபடி தனது பணியைச் செய்து கொண்டிருந்த அந்த வீதிப் பாதுகாப்புப் பெண்ணான ஜேனிக்கு, வழமை போல கையசைக்க மறந்து விட்டோமே என்று கவலைப்பட்டான்.
பாடசாலையில் கற்றுவரும் பிள்ளைகளை, அவர்கள் வீதியைக் கடந்து செல்லும் போது வேகமாகச் செல்லும் வாகனங்களிடமிருந்து ‘பாதுகாக்கும்’ பணியைத் தான் ஜெனி ஏற்றிருந்தாள். ஆனாலும் பெற்றோர்கள் வீதியைக் கடந்து செல்லும் போதும் கூட தனது கவனத்தைச் செலுத்தும் அந்தப் பெண்ணின் கடமையுணர்வு நேசனைக் கவர்ந்திருந்தது.
அதற்காகவே அவன் பாடசாலை செல்லும் போதெல்லாம் அவளருகில் சென்று சுகம் விசாரிப்பதும் வருடத்தில் ஒரு நாள் வரும் ‘கிறிஸ்மஸ்’ விடுமுறைக்கு முன் வரும் கடைசி பாடசாலை நாளில் ‘கிவ்ட் கார்ட்’ ஒன்றை வாங்கி பிள்ளைகளின் கரங்களால் அவளுக்கு வழங்குவதையும், வழக்கமாகக் கொண்டிருந்தான் நேசன்
சரியாக நான்கு மாதங்களுக்குப் பின்னர் முதன் முதலாக அவளை பார்க்க நேர்ந்தும், வழமையாக செய்யும் ஒன்றை தவறவிட்டது நேசனுக்கு சற்று கவலையாக இருந்தது.
‘”சரி திரும்பி வீட்டுக்குப் போகும் போது வாகனத்தை நிறுத்தி கதைத்து விட்டுப் போகலாம்” என்று தன்னைக் தேற்றிக்கொண்டான்.
பின்னால் வந்து கொண்டிருந்த கார்ச் சாரதி மீண்டும் அவனை விடுவதாக இல்லை. மிகவும் வேகமாக நேசனின் வாகனத்தை ‘ஓவர்டேக்’ செய்தபடி அவனுக்கு ‘நடுவிரலை’ க் காட்டிவிட்ட திருப்தியோடு சென்று மறைந்தான்.
சாதாரண நாட்களாக இருந்திருந்தால், நேசன் அந்த சாரதியை விட்டிருக்க மாட்டான். இவ்வாறான மரியாதைக் குறைவான காரியங்களைச் செய்பவர்கள் அல்லது தூசண வார்த்தைகளால் திட்டிச் செல்கின்றவர்கள் போன்றவர்களை பல தடவைகள் துரத்திச் சென்றிருக்கின்றான். பலர் வேகமாக ஓடி மறைந்திடுவிடுவார்கள். சிலர் இன்னுமொரு தடவை முன்னர் செய்த ‘அதையே’ செய்து விட்டுப் போவார்கள். அதற்குள் நேசனுக்கு ‘பொத்துக் கொண்டு வந்த கோபம்’ மறைந்து விடும். ஆனால் இன்று அவன் அவ்வாறு அந்த வாகனத்தை துரத்திக் கொண்டு போகவில்லை.
உலகமே ‘ஆட்டம்’ கண்டுவிட்டது. மனதில் ஒரு பயம். எதிர்காலம் எப்படியிருக்கப்போகின்றது. குடும்பம், உறவுகள், நண்பர்கள் அயலவர்கள் என மகிழ்ச்சியான இந்த வாழ்க்கையை, அச்சுறுத்தும் கொரோனா அழித்து விடுமா என்றெல்லாம் நேசன் நினைத்து கவலைப்படுவதுண்டு.
அவ்வாறு நினைக்கும் போதெல்லாம் தனது மனைவியை பாசத்தோடு பார்ப்பான். குழந்தைகள் அருகில் நின்றால், அள்ளி அணைத்து முத்தம் கொடுப்பான். வீட்டில் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் அம்மாவின்; கண்ணாடி அணிந்த முகத்தை அன்போடு கவனிப்பான்…
செய்ய வேண்டிய சில வேலைகளை எழுதிக் கொண்டு வந்த சிறு துண்டை சட்டைப் பைக்குளிலிருந்து வெளியே எடுத்துப் பார்த்தான். முதலில் சைனீஸ் கடைக்குச் சென்று பிள்ளைகளுக்கு பழங்கள் மற்றும் நூடில்ஸ் கோழி இறைச்சி ஆகியவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்ற நினனப்பில் வாகனத்தை எல்ஸ்மெயர் வீதிக்குத் திருப்பினான்.
வாகனத்திலிருந்து இறங்கியபோது உள் கண்ணாடியில் தொங்கிக் கொண்டிருந்த ‘மாஸ்க்’ நேசனின் மூக்கையும் வாயையும் சேர்த்து மறைத்துக் கொண்டது. சைனீஸ் கடைக்குள் புகுந்து கொள்வதற்கு முன்பாக அங்கு வைக்கப்பட்டிருந்த சு;த்தப்படுத்தும் திரவத்தை எடுத்து கைகளில் நன்கு தடவிக் கொண்டான்.
கடைக்குள்ளே அனைவருமே ஒவ்வொரு நிறத்திலும் டிசைனிலும் ‘மாஸ்க்’ அணிந்த வண்ணம் பொருட்களை எடுத்து ‘சொப்பிங் பாஸ்கட்’டில் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
நேசன் பதினைந்து நிமிடங்களில் தனது ‘சொப்பிங்’ கை முடித்துக் கொண்டான். மீண்டும் தனது ‘நிசானில்’ ஏறியபோது பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டான்.
கடந்த நான்கு மாதங்களாக தனது நிறுவன வேலைகளை வீட்டிலிருந்தே செய்கின்றான். மனைவி ஒரு அறையிலும் பிள்ளைகள் ஒரு அறையிலும், இவன் ஒரு அறையிலுமாக அவர்களது வீடு ஒரு அலுவலகமாகவும் பாடசாலையாகவும் மாறியிருந்தது.
உலகின் கழுத்தைப் ‘கொரோனா’ பிடித்துக் கொண்டது போல மக்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கு அஞ்சுவதாக இல்லை. அரசாங்கங்கள் விடுக்கும் அறிவித்தல்களை அது அவர்கள் ‘கடமை’ என்று எண்ணிக்கொண்டு தங்கள் எண்ணப்படி அல்லவா மக்கள் நடந்து கொள்கின்றார்கள். தொடர்ந்து கொண்டிருக்கும் மரணங்கள் வெறும் எண்ணிக்கை என்று எண்ணுபவர்கள் ஏன் அவற்றை உயிர்கள் என்று மதிப்பதில்லை.
வழமையாக காரில் ஏறியவுடன் உடனேயே ‘மாஸ்க்’ கை முகத்திலிருநது அகற்றிவிடும் நேசன், இன்று அவ்வாறு செய்யவில்லை.
நேசனுக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொம்பியூட்டரின் முன்னால் அமர்ந்து மீண்டும் தனது அலுவலக வேலையைத் தொடருவதற்காக. எனினும் பாடசாலைக்குச் சென்று அந்தப் பெண்மணியை சுகம் விசாரித்து விட்டுச் செல்வோம் என்ற அந்த முடிவை மாற்ற விரும்பவில்லை.
வழமைபோல, பாடசாலையின் வேலிக்கு வெளியே வீதிக் கரையோரமாக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த பெண் நிற்கும் இடத்தை கவனித்தான்.
கையில் சிவப்பு நிற ‘ஸ்டொப்’ என்று அச்சிடப்பட்ட வட்டமான பலகை ஒன்றை கைகளில் வைத்துக்கொண்டு அவள் வீதி ஓரமாக நின்கின்றாள், .
சற்று தூரம் நடந்த பின், ‘ஹாய் ஹவ் ஆர் யூ? என்று கேட்டவண்ணம் அவளுக்கு அருகில் செல்லாமல் தூரத்தே நின்றான் நேசன்.
“ ‘ஐ ஏம் குட்’ என்று சொல்லிவிட்டு,அவள் சாதாரணமாக நின்றாள், தான் வழமையாகப் சந்தித்துப் பேசும் ஜெனி அல்ல இவள் என்று சில வினாடிகளுக்குள் நேசன் புரிந்து கொண்டான். அதே நேரத்தில் அவளும், நேசனுக்கு அருகில் சென்று அமைதியாகக் கூறினாள்.
“மன்னிக்க வேண்டும். நீ ஜெனியைத் தான் தேடி வந்துள்ளாய் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவள் இனிமேல் வரமாட்டாள்.”
ஒரு வினாடி மௌனத்திற்குப் பின்னர் தொடர்ந்து பேசினாள்.
“ஜெனி. இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுகயீனம் காரணமாக இறந்து விட்டாள்.. ஆனாபடியால் தான் நான் வேலை செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. அவளுக்காக நாங்கள் பிராத்தனை செய்வோம்”
நேசனை அதிர்ச்சியும் கவலையும் ஏமாற்றமும் ஒரே நேரத்தில் வந்து தாக்கின. பேச்சற்றவனாக சில நிமிடங்கள் நின்றான்.
ஜெனியின் சிரித்த முகமும் அழகான ஆங்கில உச்சரிப்பும் நேசனுக்கு எப்போது உற்சாகத்தைத் தருவன.
வேறு நாடுகளிலிருந்து வந்து குடியேறிய பெற்றோரையும் அவர்களது பிள்ளைகளையும் அன்பாக சுகம் விசாரித்து மகிழும் பக்குமான பண்பு கொண்ட பெண் அல்லவா அவள்
.
‘நீங்கள் எல்லாம் உங்கள் நாட்டை விட்டு வந்தது எவ்வளவு நல்ல விடயம் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. இந்த நாடு உங்களை நல்லாப் பார்த்துக் கொள்ளும்.”
ஜெனி தன்னொடு உரையாடுகின்ற போதெல்லாம் தனது குடும்பத்தையும் உறவினர்களையும், அது மட்டுமல்லாது ஊரில் யார் யார் உறவினர்கள் இருக்கின்றார்கள்? அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்று அக்கறையோடு விசாரித்த அந்த நாட்கள் நேசனின் நினைவில் வந்தன.
“எவ்வளவு பரந்த உள்ள ஜெனிக்கு” அவன் உதடுகள் அவளை மெச்சின.
தனது வீதிப் பாதுகாப்பு பணியைச் செய்து கொண்டிருந்த அந்த புதிய பெண், ஒரிரு மாணவர்கள் வீதியைக் கடந்த செல்ல காத்திருந்தபடியால் அவர்களை நோக்கிச் சென்றாள்
தனது வாகனத்தை நோக்கி நடந்தான் நேசன். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது. தான் அன்பு செலுத்தும் ஒரு சகோதரியைப் பறிகொடுத்தது போன்று அவனது இதயம் துடித்தது.
வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு கடையில் வாங்கிய சாமான்களை கைகளில் எடுத்தபடி சென்று மெதுவாக கதவைத் திறந்தான்.
வழக்கம் போல சாமான்களை அவனிடமிருந்து பெற்றுச் செல்வதற்காக வாசலுக்கு வந்த மனைவி நேசனின் முகத்தில் தென்பட்ட மாற்றத்தைக் கவனித்து விட்டு அவனிடம் கேட்டாள்.
“என்னப்பா ஒரு மாதிரி இருக்கிறியள்?”
“பள்ளிக் கூடத்தில பிள்ளைகள்; றோட்டை கடக்கிறதுக்கு துணையாப் போற ஜெனி செத்துத்திட்டாவாவாம். இப்ப வேறு ஒரு ஆள் வந்திருக்கின்றா”
மீண்டும் அவனை மீறி வழிந்த கண்ணீரை நேசன் நிறுத்த முயற்சிக்கவில்லை. “அந்த கண்ணீர் அபிசேகம் அற்புதமான பெண்மணி ஜெனியின் ஆத்மாவிற்காக” என்று நினைத்துக் கொண்டானோ?
மனைவியும் பிள்ளைகள் இருவரும் அமைதியாக அவனையே பார்த்த வண்ணம் நின்றார்கள்.
(நன்றி:- ‘ஞானம்’ இலக்கிய மாத இதழ்-இலங்கை)