அம்பாறை மாவட்டம் குறிப்பாக கல்முனைப் பிராந்தியம் கொரோனா வைரஸினால் மிகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுவருகிறது.
வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளமையால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தினந்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் முழு மாவட்டத்தையும் முடக்கி, மக்களைக் காப்பாற்றுங்கள்’ என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்
‘கொரோனா வைரஸின் முதலாவது அலைக்கு முழுநாட்டையும் முடக்கி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தீர்கள். ஆனால், இன்று நிலைமை மோசமாகின்றது. கல்முனைப் பிராந்தியத்தில் தினந்தோறும் திகிலூட்டும் செய்திகளே வெளிவருகின்றன. இதனால் மக்கள் மரண பயத்தில் உறைந்துள்ளனர்.
‘இங்கு பாடசாலைகள் திறந்திருக்கின்றன. ஆனால், மாணவர் இல்லை. பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பத் தயங்குகின்றனர். அப்படியெனின், எதற்காக பாடசாலைகள் திறக்கப்படுகின்றன?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, அம்பாறை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில், கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்குவது தொடர்பான எவ்விதத் தீர்மானவும் இதுவரை எடுக்கப்படவில்லையெனவும், பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளதோடு, 100க்கு மேற்பட்டோருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.