இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது’ என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லை. அவ்வாறு இருந்தால் ஒருவரின் பெயரையாவது, அவ்வாறு கூறுபவர்கள் வெளியிடவேண்டும்’ என உதயகம்மன்பில அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் ஊடகவியலார்ளர்கள், நுவரெலியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வினவியப்போதே வே.இராதாகிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களை பல தடவைகள் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாமும் அது பற்றி கதைத்துள்ளோம். நல்லாட்சியின்போது தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அப்படியானால் இருந்த கைதிகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் இருக்கின்றனரா அல்லது இல்லாமல் செய்யப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது.
அதேவேளை, மாகாணசபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும். அத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடவேண்டும் என்பதே பங்காளிக்கட்சியாக இருக்கும் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடாகும். இது பற்றி கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும்.
மாகாணசபை முறைமை தொடரவேண்டும். அவ்வாறு இல்லாமல் அதனை இரத்து செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டால் அது பாரிய நெருக்கடி நிலைமையை உருவாக்கிவிடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.