(மலேசிய மடல்)
-நக்கீரன்
கோலாலம்பூர், டிச.17:
கொரோனா ஆட்கொல்லி கிருமியின் தாக்கம் இடம்பெற்றுள்ள இந்த வேளையிலும் தேசிய நிதி கூட்டுறவு சங்கம் நிறுவியுள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறிவாரியத்தின் தமிழ்ப் பணி தொய்வின்றி தொடர்கிறது.
ஆண்டுதோறும் வழக்கம்போல விருந்துடன் ஏற்பாடு செய்யப்படும் கூட்டுறவு சங்க இலக்கியப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி, இந்த ஆண்டு நடைபெற முடியாமல் போனாலும், போட்டியில் பங்குபற்றியவர்களில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பரிசுத் தொகை பணவோலை மூலம் அளிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கத் தலைவரும் மொழி-இலக்கிய அறவாரியத் தலைவருமான டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கூட்டுறவு சங்கம் இடையறாது ஆற்றிவரும் தமிழ்ப் பணியை மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வியல் பிரிவு(இந்திய ஆய்வியல் துறை) பாராட்டுவதாக அதன் தலைவர் முனைவர் சு.மணிமாறன் தெரிவித்துள்ளார்.
ஓர் இனத்திற்கு அரணாக இருப்பது அந்த இனத்தின் மொழிதான். எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் மேன்மைக்கும் கூரிய சிந்தனை மேம்பாட்டிற்கும் துணைநல்குவது நிச்சயமாக அதன் தாய்மொழிதான். அந்த வகையில் மலேசியவாழ் தமிழர்களின் மொழி வளர்ச்சிக்கும் தமிழிலக்கிய மறுமலர்ச்சிக்கும் தொடர்ந்து பாடாற்றி வரும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியம் ஆற்றிவரும் பங்களிப்பு காலத்தால் போற்றத்தக்கது என்று மணிமாறன் பாராட்டியுள்ளார்.
மருத்துவத் துறையின் கட்டுக்கு அடங்காமல் உலக மக்களை அச்சுறுத்தியும் விழ்த்தியும் வரும் கொடிய ஆட்கொல்லிக் கிருமியான கொரோனா, பன்னாட்டு அளவில் எத்தனையோ நடைமுறைகளை முடக்கியும் மாற்றியும் அமைத்துள்ளது. இத்தகைய சூழலிலும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், சளைக்காமல் தமிழ் – இலக்கியப் பணியை நிறைவேற்றி வருகிறது.
இளம் எழுத்தாளர்களையும் மாணவர்களையும் ஊக்குவிப்பதற்காக தமிழிலக்கியப் போட்டியை கடந்த 28 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்திவரும் கூட்டுறவு சங்கம், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின்வழி இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கென தனி நிதியத்தையும் கூட்டுறவு சங்கம் உருவாக்கி உள்ளது.
இதற்கெல்லாம் தகுதி வாய்ந்த தலைமைதான் காரணம். நல்ல இடத்தில் அல்லது நல்லவரிடத்தில் நாணயம் இருந்தால், அதனால் நான்கு பேருக்கு நன்மை விளையும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்ததும் இதன் அடிப்படையில்தான். டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் கல்விப் பணிக்கு இந்திய ஆய்வியல் துறையின் சார்பில் மீண்டும் பாராட்டு தெரிவிப்பதாக முனைவர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா பருவத்தில் நிகழ்ச்சி நடத்த முடியாதென்பதால், 2020-ஆம் ஆண்டு இலக்கியப் போட்டி வெற்றியாளர்களுக்குரிய பரிசுத் தொகையை நேரடியாக அனுப்புவதென்று அறவாரியத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. கூட்டுறவு சங்கத்தின் தமிழ் அறவாரியம் இந்தப் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்தார்.
இருந்தாலும், கிள்ளான் பள்ளத்தாக்கில் வாழ்கின்ற இலக்கியவாணர்-களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் விருந்துடன் கூடிய ஓர் இலக்கிய மாலைப் பொழுதை தவற விட்டதில் வருத்தம்தான்.
இவ்வாண்டு டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரிய இலக்கியப் போட்டியின் சிறுகதைப் பிரிவில் மின்னல் பண்பலை வானொலியில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் சமூக-மொழி ஆர்வலருமான வெ.ஆறுமுகம் முதல் பரிசை வென்று 2,500 வெள்ளியைத் தட்டிச் சென்றுள்ளார்.
பொதுவாக மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ஆண்டிறுதியில் கிடைக்கும் ஆறுதல் ஊக்கத் தொகைதான். அந்த வகையில், “பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு முதல் பரிசு கிடைத்திருப்பதால், ஆண்டிறுதியில் ஊக்கத் தொகை கிடைத்ததைப் போல உணர்கிறேன்; கூட்டுறவு சங்கத்திற்கு நன்றி” என்று தெரிவித்த ஆறுமுகம், இந்தப் பரிசு மேலும் எழுதும் எண்ணத்தை என்னிடம் தூண்டியுள்ளது என்றும் சொன்னார்.
அவரைப் போல மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்ற மா. அ. சந்திரன், “பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, ஆண்டுதோறும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை கூட்டுறவு சங்கம் ஊட்டி வருகிறது. நானும் அடிக்கடி கூட்டுறவு சங்கத்திடம் இருந்து பரிசுப் பணத்தை பெற்றுக் கொண்டுதான் வருகிறேன்” என்றார்.
புதுக்கவிதைப் பிரிவில் முதல் பரிசு வென்றவரும் சுங்கைப் பட்டாணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளருமான உதயகுமார் கந்தசாமி, “என்னுடைய கல்விப் பயணத்தில் நெருக்கடியான காலக்கட்டங்களில் கூட்டுறவு சங்க இலக்கியப் போட்டிகளில் கிடைத்த பரிசுப் பணத்தைக் கொண்டுதான் கட்டணம் செலுத்தி இருக்கிறேன். அத்துடன் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளித்துவரும் கூட்டுறவு சங்கம் என் வாழ்க்கைப் பாதையில் இரண்டறக் கலந்தது” என்றார்.
இந்த வகையில் அனுபவம் மிக்க எழுத்தாளர்களுடன் இளம் எழுத்தாளர்களையும் மாணவர்களையும் எழுத்துலகில் இழுத்துவிடும் கூட்டுறவு சங்கத்தின் தமிழ், தமிழிலக்கியப் பணி காலத்தால் போற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.