நகரசபைகளுக்கு நிதியுதவி அளிக்கவும், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரவுசெலவுகளில் இப்போதைய செலவுகளினால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையின் தாக்கம் நெருக்கடிகளை ஏற்படுத்தாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்குமென ஒன்ராறியோ அரசாங்கம் மேலதிகமாக 695 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இந்நிதி முதலீடுடானது, கடந்த கோடை காலத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய – மானில அரசுகளின் ‘பாதுகாப்புடன் மீள ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தின்’ முதற்கட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுடன், கோவிட்-19 காலகட்டத்தில் நகரசபைகளுக்கும் அவற்றுடன் இணைந்து இயங்கும் சக கட்டமைப்புகளுக்கும் முக்கியமான சேவைகளை வழங்கவும் உதவும்.
மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரொறன்ரோ நகரசபை மொத்தமாக 398, 275 டொலர் நிதியினைப் பெறுகிறது. முக்கியமான சேவைகள் இயங்குவதற்குத் தேவையான செலவுகளை ஈடுசெய்யவும், ரொறன்ரோ நகரசபையின் செலவுகள் 2021ஆம் ஆண்டுக்குக் கடத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ஏற்படாதிருக்கவும் வழங்கப்படும் இந்நிதியானது, தேவைகளுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், போக்குவரத்துக்கான நிதியத்தின் அடுத்த கட்டங்கள் குறித்து ஒன்ராறியோ அரசு இன்று நகரசபைகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது. இதன்படி, நகரசபையின் போக்குவரத்துக் கட்டமைப்புகளுக்காக ஒன்ராறியோ மானில அரசு 1.3 பில்லியன் டொலர்களை ஒதுக்குகிறது. இது மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 700 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டை விட மேலதிகமானதாகும் என்பதுடன், இந்நிதியானது மேலதிகமாகத் தேவைப்படும் துறைகளுக்கு, அவற்றின் தேவைகளின் அடிப்படையில் வழங்கப்படும். இந்த நிதி குறித்த மேலதிக விவரங்களை வருகின்ற ஜனவரி மாதத்தில் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்
ஸ்காபரோ – றூஜ் பார்க்