டிசம்பர் மாதம் 13ம் திகதி, கனடாவாழ் மக்களுக்குக் குறிப்பாக தீட்சை பெற்றுக்கொண்ட மக்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சுவாமி நித்தியானந்த பரமஹம்சர் அவர்கள் கனடாவிலுள்ள தன்னுடைய பக்தர்கள், தொண்டர்கள் ஆகியோர்களைச் சந்தித்து உரையாற்றியிருக்கின்றார்.இது தொடர்பாக செய்தியாளர்களுக்குத் தெரிவித்த கனடா கைலாசம் அமைப்பினர், சுவாமி நித்தியானந்த பரமஹம்சர் அவர்கள் மேலும் பல ஆச்சரியமான விடயங்களையும் தங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளதாவும் அறியப்படுகின்றது.
இது பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
கனடாவின் ரொறன்ரோ மாநகரில் கைலாயம் அமைப்பதற்கான பணியினை விரைவில் முன்னெடுக்கும்படியும், அதற்காக கனடிய அரசுடன் தொடர்புகளை முன்னெடுக்கும்படி சுவாமி அவர்கள் கேட்டுள்ளார். அத்துடன் இலங்கை யாழ்ப்பாணத்தில் தீயிட்டு அழிக்கப்பட்ட யாழ் பொது நூலகத்தின் நினைவாக ஒரு மாபெரும் நூல்நிலையமொன்றை அமைப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையானபோது பல மில்லியன் கணக்கான நூல்களம், ஓலைச் சுவடிகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. அதை ஈடுகட்டத்தான் இந்த நூலகம் அமையவுள்ளதெனவும், அது அமையவிருக்கின்ற இடம் கனடாவில் அதிகமான இந்துக்கள் வாழுகின்ற மார்க்கம் பகுதி எனவும் குறிப்பிட்டிருந்தார். அமையவிருக்கின்ற நூலகத்திற்காக பத்தாயிரம் தமிழ்நூல்களும். ஒருலட்சம் இந்து மதம் சம்பந்தமான நூல்களும் தயாராகவிருக்கின்றன எனவும் தெரிவித்திருக்கின்றார். அந்த நூல் நிலையத்தை அண்மித்து ரொறன்ரோ கைலாயமானது அமையும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
அவர் ஏற்கனவே பிரளைய காலத்தில் எவ்வாறு வாழவேண்டும் என்பதைப் பல முறை வலியுறுத்தியிருக்கின்றார். அத்துடன் தன்னுடைய பக்தர்கள் பிரளைய காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீகப் பயிற்சிகள், தியானம், யோகாசனம் என்பவற்றை வடிவமைத்துக் கொடுத்திருந்தார் என்பது உலகறிந்த உண்மை.
13ம் திகதி. சுவாமி அவர்கள் பிரளையமானது முடிந்து விட்டதென்றும் அறிவித்திருக்கின்றார். அதைத்தொடர்ந்து கனடாவில் பல வேறு பணிகளை எந்தவிதமான தயக்கமுமில்லாது ஆரம்பிக்கும்படியும் கூறியிருக்கின்றார். தயக்கமில்லாது மட்டுமல்ல, அவற்றினை முன்னெடுப்பதற்கான பொறுப்பினை எடுக்கும்போது அந்தப் பொறுப்பெடுப்பவர்களது வாழ்க்கை வழமடையும் என்ற சத்தியத்தையும் விளக்கியிருக்கின்றார். பொறுப்புக்களை எடுக்கும்போது அவர்களது வாழ்க்கை அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படுவதுடன் அதற்கான சக்தியும் தானாகவே அவர்களை வந்தடையும் எனவும் அழகாக விபரித்திருக்கின்றார்.
மேலும், சுவாமி அவர்கள் இந்துசமயத்தை புனரமைப்பதை முக்கியமான நோக்கமாகக்கொண்டு அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றார். அத்துடன் இந்து சமயத்தின் மேன்மையை மிகவும் ஆதாரபூர்வமாக தெரிவித்திருக்கின்றார். கல்தோன்றி மண்தோன்றாத காலத்தில் வாழ்ந்த மூத்த தமிழ்க்குடி எனவும்;, அது சிறந்த கலாச்சார விழுமியங்களை கொண்டிருந்ததெனவும், அப்படிப்பட்ட ஆதிசைவை மரபானது தானும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைத்திருந்த காலமொன்றிருந்ததென்றும், அந்த ஆதிசைவ வாழ்வியல் ஒரு அறிவியல் எனவும் கூறினார். மன்னர்காலத்தில் ,மன்னர்கள் ஆதிசைவ வாழ்வியல் முறைகளை உலகெங்கும் பரப்பியிருக்கின்றார்கள் எனவும் அதற்கான சரித்திரத்தை அறியவேண்டுமானால் 20,000 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று வரலாற்றைப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்ததுடன் குமரிக்கண்டத்தைப் பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை. குமரிக்கண்டமானது இப்போது இருக்கின்ற ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா, மடகாஸ்கர், இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்ததெனவும் அதற்கான ஆதாரம் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரிகளை அழகாக எடுத்தியம்பி சான்றுபகன்றுள்ளார்.
இந்த ஆதிசைவ வாழ்வியல் விஞ்ஞானமானது வேத ஆகமங்கள் மூலமாக உலகிற்கு அருளப்பட்டது எனவும், ஆதிசிவன் இவற்றை அருளியதுடன் பல ரிஷிகள், ஞானிகள,; அவதாரங்கள் என புவியில் இறக்கி, இந்த அறிவியலை மக்களுக்குப் போதித்து அவர்களை கடைப்பிடிக்கவும் செய்திருக்கின்றார் என்ற உண்மையை உணர்த்தியிருக்கிறார். அது மட்டுமல்ல, நமது முன்னோர்கள் இந்த சிறந்த அறிவியலை உணர்ந்து, அனுபவித்து, வாழ்க்கையில் வெளிப்படுத்தியும் மேன்மையான வாழ்க்கையை, மனிதனாக வாழாமல், சிவத்தன்மையில் சிவனாகவே வாழ்ந்திருக்கின்றார்கள் என மூத்த தமிழ்க் குடியின் பெருமையைத் தெரிவித்திரு;கின்றார்.
இப்படி வாழ்ந்த நம்முடைய தமிழினம் இன்று தனது காலச்சாரத்தை இழந்து. தன்னுடைய நாகரீகத்தை இழந்து, தனது அறிவியலை இழந்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த இக்கட்டான நிலையில்தான் நாம் கடைப்பிடித்த ஞான அறிவியலின் மிச்ச சொச்சமாக பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் அவதரித்துள்ளார்.
எந்த ஆகமத்தைக் கொண்டு நம் முன்னோர்கள் செழிப்போடு வாழ்ந்தார்களோ, அதே அறிவியலை இப்பொழுது ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் புதுப்பித்து தனது சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் வழங்கிவருகின்றார். அவற்றை அறிவுரையாக மட்டுமல்லாது வாழ்வியல் முறைகளை வகுத்தளித்து அந்த ஞான அறிவியலை உயிரோடு வைத்திருக்கின்றார். இப்படி தனி ஒரு ஆளாக நின்று இத்தனையையும் சாதித்த ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் இதன் அடுத்த கட்டமாக இந்த விஞ்ஞான ஆதி சைவ அறிவியலை பாதுகாப்பதற்கும், மற்றைய மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக திருக்கைலாயம் என்ற சாம்ராட்சியத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றார்.