-நக்கீரன்
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் காற்பந்து விளையாட்டின் மூலம் மலேசியாவிற்கு பல பெருமைகளைத் தேடித் தந்தவர் டத்தோ ஆர்.ஆறுமுகம். 196 பன்னாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு சாதனை படைத்தவர் இவர்.
நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநிலத்தில் கோலக் கிள்ளானின் பிறந்த இவர், காற்பந்து அரங்கில் தன் கால்களின்வழி புறிந்த இலாவகத்தால் ‘மலேசிய காற்பந்து உலகின் காவலர்’ என்று புகழப்பட்டார்.
ஆசியப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் மலேசியாவை முன்னிலைப் படுத்திய இந்தத் ‘திடல் மறவனின்’ பங்களிப்பையும் கடமையுணர்வையும் பாராட்டி இளம் வயதிலேயே இவருக்கு மலேசிய அரசு டத்தோ விருது வழங்கி பாராட்டியது. பன்னாட்டு அளவிலும் தேசிய மட்டத்திலும் புகழ்பெற்ற இளைஞராக இருந்தாலும் அனைவரிடத்திலும் பணிவாக நடந்து கொண்ட ஆறுமுகம், இயற்கையிலேயே எளிமையான தன்மையையும் பணிவான குணத்தையும் கொண்டவர்.
1953-இல் பிறந்த டத்தோ ஆறுமுகம், 1971ஆம் ஆண்டில் 18 வயதை எட்டிய நிலையிலேயே சிலாங்கூர் காற்பந்து கழகத்தைப் பிரதிநிதித்து பர்ன்லி கோப்பைப் போட்டியில் (Burnley Cup Youth Tournament) கலந்து கொண்டார். அதுதான் அவருடைய முதல் பங்கெடுப்பு. அதன் பின்னர் அடுத்தடுத்து பல தேசிய போட்டிகளில் பங்கு பெற்று புகழின் உச்சத்தை அடைந்த ஆறுமுகம்,
1972 லிருந்து 1988 வரையில் சிலாங்கூர் காற்பந்துக் கழகத்தின் விளயாட்டு வீரராக பவனி வந்ததுடன் மலேசிய கோப்பைப் போட்டிகளின்வழி அதிக வெற்றியையும் குவித்தார்; 1973-இல் தேசிய காற்பந்து குழுவில் இணைக்கப் பட்டார்.
தென்கொரியத் தலைநகரம் சியோலில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்த ஆறுமுகம் உள்நாட்டில் பங்காற்றிய மெர்டேக்கா காற்பந்து போட்டி மிகவும் பிரபலமானது. அந்த காலக்கட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெற்ற அப்போட்டியில் ஆசிய நாடுகள் கலந்து கொண்டன.
உலகத் தரம் வாய்ந்த அந்தப் போட்டியில் 1973, 1974, 1976, 1979 ஆம் ஆண்டுகளில் மலேசியா வாகை சூடியதில் ஆறுமுகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது; அதைப்போல, தென்கிழக்குஆசிய விளையாட்டு என்னும் சீ போட்டிகளிலும் 1973, 1975, 1977, 1979, 1981, 1983. 1985 ஆம் ஆண்டுகளில் மலேசியாவைப் பிரதிநித்து ஆறுமுகம் அரங்கம் கண்டதும் குறிப்பிடத்தக்கது.
1974 தெஹ்ரான் ஆசிய விளையாட்டுகளில் மலேசியா வெண்கலப் பதக்கம் பெறுவதில் ஆர். ஆறுமுகம் தீவிரமான முனைப்பு காட்டினார். 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் மலேசியா தேர்வு பெறுவதற்கு இவர் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார்.
1986 ஆம் ஆண்டு காற்பந்து உலகில் இருந்து விலகிக் கொண்ட சிலந்தி வீரன் ஆறுமுகம் பெருவாரியான மலேசியர்ளின் அன்பைப் பெற்றவர்; மலேசிய விளையாட்டு வீரர்களின் நாயகனாக வலம் வந்த டத்தோ ஆறுமுகம் ஏராளமான இளைஞர்களை தொழில்முறை விளையாட்டாளர்களாக உருமாற்றினார்.
அப்படிப்பட்ட துடிப்புமிக்க இளைஞரான இவர், 1988 டிசம்பர் 18-ஆம் நாளில் எதிர்கொண்ட விபத்தின் விளைவாக 35ஆவது வயதில் அகால மரணம் அடைந்தார். அவருடைய மரணம், மலேசிய விளையாட்டு உலகைஅதிர்ச்சி அடையச் செய்தது. அவருடைய இறுதிச் சடங்கில் இனம், மொழி, சமய பாகுபாடு இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மலேசியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செய்தனர்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24