இலங்கை அரசிற்கு அபிவிருத்தி உதவி அன்பளிப்பு நிதியாக இவ்வருடம் வழங்குவதென உறுதியளிக்கப்பட்டு அமெரிக்க அரசின் நிதி நிறுவனம் வழங்கவிருந்த 89 பில்லியன் ரூபாய்கள் அன்பளிப்புத் தொகை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கையின் கொழும்பு நகரத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பொது அலுவல்கள் பிரிவின் முகாமையாளரால் ஊடக நிறுவனங்களுக்கு அனுபபிவைக்கப்பட்ட கடிதத்தின் பிரதி இங்கு காணப்படுகின்றது.
மேற்படி அன்பளிப்பு நிதியாக 89 மில்லியன் ரூபாய்களை வழங்கவிருந்த அமெரிக்காவின் அரசு சார்ந்த American Millennium Challenge Corporation என்னும் நிறுவனத்தின் முகாமைச் சபை, அமெரிக்க அரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அறிவிறுத்தலுக்கு அமைய இந்த நிதி அன்பளிப்பை நிறுத்தியுள்ளது.
இந்த நிதி இரத்து செய்யப்பட்ட விவகாரம் இலங்கை ஜனாதிபதியையும் பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
மேற்படி நிதி அன்பளிப்பு இரத்து செய்யப்பட்டமைக்கு காரணங்களாக பின்வருவன தெரிவிக்கப்பட்டுள்ளதை இங்கு உள்ள கடிதத்தில் காணக்கூடியதாக உள்ளது.
அமெரிக்காவிடமிருந்து உதவி பெறும் நாடுகளின் ஆர்வம், மற்றும் பங்கேற்பு, வெளிப்படைத் தன்மை மற்றும் கடனற்ற நிதியுதவி பெறுவதற்கான பொறுப்புக் கூறல் என்பன மேற்படி அமெரிக்க நிறுவனத்தின் எதிர்பார்ப்புகள் ஆகும்.
ஆனால் இலங்கை இவ்வாறான நிபந்தனைகளையோ அன்றி அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்களையோ பூர்த்தி செய்யவில்லை என்றே இங்கு புலனாகின்றது.
முக்கியாமாகச் சொல்வதானால், அண்மைக்காலங்களில சீனாவோடு இலங்கை அரசு கொண்டுள்ள மிக நெருக்கமான உறவு மற்றும் சீனாவின் விருப்பத்திற்கேற்ப பல அரச உடமைகள் அந்த நாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளமை என்பது குறித்து அமெரிக்கா அறிந்து வைத்துள்ளது என்றே கருதப்படுகின்றது