தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் திடீரென விலகியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுன்ற உறுப்பினர் சி.சிறீதரனைத் தொடர்புகொண்டு வினவியபோது தான் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து வெளியேறியமை உண்மை எனத் தெரிவித்தார்.
அதற்கான காரணத்தை அவரிடம் வினவியபோது,
“நான் கடந்த 5 வருடங்களாகக் குறித்த பதவியில் இருந்துள்ளேன். அதுமட்டுமல்லாது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமாக இல்லாமையாலும் அவர்கள் ஊடகங்களில் கொறடா என்கின்ற பதவியை வைத்து சிறீதரன் பணம் சம்பாதிப்பது போல் ஒரு மாயயை உருவாக்கி வருகின்றார்கள். ஆகவே, அவ்வாறானதொரு பதவி எனக்குத் தேவை இல்லை என்று அப் பதவியில் இருந்து வெளியேறி உள்ளேன். குறித்த விடயம் தொடர்பில் இன்று கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளேன்” – என்றார்.