“உலகின் பலநாடுகளிலிருந்தும் கனடாவிற்கு வந்து குடியேறியவர்களினால் தான், கனடிய பொருளாதார மற்றும் சமூக அடித்தளம் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கனடா தேசத்தின் வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். மேலும் முக்கியமாக, தற்போதைய கோவிட்-19 நோய்த்தொற்று நிறைந்ததும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயும் உள்ள இக்காலத்தில், வெளிநாடுகளிலிருந்து குடிவரவாளர்களாக வந்தவர்களே இங்கு விவசாயம் சார்ந்த உணவு விநியோகம், அத்தியாவசிய சுகாதார உபகரணங்களை விநியோகம் செய்யும் பணிகள், மற்றும் வேறு பல துறைகளில் எமது தேசத்திற்கு பல வழிகளிலும் உதவியாக உள்ளார்கள்”
இவ்வாறு சர்வதேச குடிவரவாளர்களின் தினக் கொண்டாடடத்தை முன்னிட்டு சிறப்புச் செய்திகளை அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள The Honourable Marco E. L. Mendicino, Minister of Immigration, Refugees and Citizenship, the Honourable François-Philippe Champagne, Minister of Foreign Affairs, and the Honourable Karina Gould, Minister of International Development, ஆகியோர் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஒட்டாவா மாநகரிலிருந்து வெளியாகியுள்ள இந்த அறிக்கைகள் தமிழ் பேசும் ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” கடந்த 200 ஆண்டுகளாக, வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்கு குடிவரவாளர்களாக வந்தவர்கள் இந்த நாட்டுக்கு மனித உரிமைகளைகள் தொடர்பான விடயங்களையும் ஏனைய பல நன்மைகளையும் தங்கள் நாட்டிலிருந்து எமது கனடா தேசத்திற்கு கொண்டுவந்துள்ளார்கள்.
அத்துடன், கனடாவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் இங்கு அனுபவிக்கும் சிரமங்களையும் நாம் உணர்கின்றோம். எனவே இந்த முக்கியமான நாளில் அவர்களின் தாங்கும் சக்தியையும் பொறுமையையும் மதிக்கும் வகையில் இன்றைய நாளை கொண்டாடுகின்றோம்
இந்த நாட்டுக்கு வரும் குடிவரவாளர்கள், அகதிக் கோரிக்கையாளர்கள், அகதிகள், மற்றும் சர்வதேச ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் நாம் ஒரே கண்கொண்டே பார்க்கின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.