இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து சட்டவிரோதமாக மீனபிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை அவர்களது படகிலேயே எதிர்வரும் ஜனவரி-04 வரை தடுத்து வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யாழ. நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்களை கடந்த தினம் இரவு இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்திருந்தனர்.
இது தொடர்பில் வடமாகாண கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் சார்பில் பி அறிக்கை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் நடைபெற்ற குறித்த வழக்கில், எல்லைதாண்டிய இந்திய மீனவர்கள் நால்வரையும் அவர்களது படகிலேயே ஜனவரி-04ம் திகதி வரை தடுத்து வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களிடம் எதிர்வரும் 30ம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான உயிரியல் மாதிரிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் தரப்பினர் மேற்கொள்ளுமாறும், படகில் பிடிக்கப்பட் நிலையில் பழுதடைந்து போயுள்ள மீன்களை அழிக்குமாறும் அவ் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.