“இலங்கையின் தலைநகராம் கொழும்பிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ மாதாந்த சஞ்சிகையில் தமது படைப்புக்கள் பிரசுரிக்கப்படுவதை எழுத்தாளர்களும் கட்டுரையாளர்களும் கவிஞர்களும் பெருமையாகக் கருதும் ஒரு காலம் தற்போது உருவாகியுள்ளது என்றால் அது மிகையாகாது. காரணம், இந்த சஞ்சிகையில் இன மதம் வேறுபாடு பாராமல் அனைத்து எழுத்தாளர்களுக்கும் களம் கொடுக்கப்படுகின்றது.
மேலும் பெரும்பான்மை மொழியான சிங்களத்தில் எழுதப்பட்ட அரிதான சிறுகதைகள் மற்றும் கவிதைகள், கட்டுரைகள் ஆகியன தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக தற்போதைய நெருக்கடியான கொரோனாக் காலத்திலும் இந்த இதழ் மாதம் தவறாமல் வெளியிடப்படுவதும், அந்த இதழ் பற்றிய விமர்சனக் கூட்டங்கள் இணையவழி ஊடாக நடத்தப்படுவதும், அவற்றில் உலகெங்கும் பரந்து வாழும் எழுத்தாளர்களும் வாசகர்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் போற்றுதற்குரிய”
இவ்வாறு கூறினார் கொழும்பில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ‘வகவம்’ என்று அழைக்கப்படும் ‘வலம்புரி கவிதா வட்டத்தின்’ தலைவரும் கவிஞருமான என். நஜ்முல் உசைன் அவர்கள்.
‘ ஞானம்’ சஞ்சிகையின் 247 வது இதழ் தொடர்பாக, இணையவழி ஊடாக நடத்தப்பெற்ற கலந்துரையாடலில் இதழில் வெளியான கவிதைகள் தொடர்பாக விமர்சன உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த சனிக்கிழமை 19ம் திகதி நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலை ‘ஞானம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு தி. ஞானசேகரன் ஆரம்பித்து வைத்தார். மேற்படி கலந்துரையாடலில், கனடா, அவுஸ்த்திரேலியா, ஜேர்மனி, இங்கிலாந்து, இலங்கை, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து எழுத்தாளர்களும் வாசகர்களும் கவிஞர்களும் கலந்து கொண்டார்கள்
முதலில், கனடா வாழ், ‘சிந்தனைப் பூக்கள்’பத்மநாதன் அவர்கள் இதழில் வெளியாகிய கட்டுரை பற்றிய தனது பார்வையை மிகவும் தெளிவாகவும் ஆர்வத்தோடும் எடுத்துரைத்தார். கடடுரைகளில் குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கு அப்பால் பல ஆழமான விடயங்களையும் தேடி எடுத்து அனைவரும் திருப்தியடையும் வண்ண்ம் தனது உரையை சமர்ப்பித்தார்.
அடுத்து பிரபல எழுத்தாளரும் மின் பொறியியலாளருமான திருமதி மைதிலி தயாபரன் அவர்கள் இதழில் வெளியாகியுள்ள சிறுகதைகள் பற்றிய தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். அவற்றுள் இலங்கையிலிருந்து மட்டுமல்ல, பலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும் சிறுகதைகளை எழுதியிருந்த எழுத்தாளர்களையும் ஏனையோர்களையும் விதந்துரைத்து சிறுகதைகள் அனைத்தும் வாசகர்களின் பாராட்டைப் பெறும் வகையில் படைக்கப்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார்.
அடுத்த இங்கிலாந்து வாழ் எழுத்தாளரும், பரிசுகள் பல பெற்றவருமான வன்னியூர் இரா. உதயணன் அவர்கள், ‘ஞானம்’இதழ் 247 இல் இடம்பெற்றுள்ள் ஏனைய பொதுவான அம்சங்கள் மற்றும் குறிப்புக்கள் ஆகியவை தொடர்பாக தனது கருத்துக்களைச் சொல்லி சஞ்சிகை ஆசிரியரையும் அவரது வெளியீட்டுக் குழுவினரையும் பாராட்டினார்.
தொடர்ந்து பார்வையாளர்கள் பலர் முன்வந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அவற்றுள் பல விவாதத்திற்குரிய விடயங்கள் இடம்பெற்று பின்னர் கருத்துப் பகிர்தலின் மூலம் அவற்றுக்கான விளக்கங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
முக்கியமாக இந்த இணையவழி கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், இரவு பகல் என வேறுபட்ட நேர மாற்றங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் அனைவரும் இறுதிவரை உற்சாகமாகக் கலந்து கொண்டு இறுதிவரை காத்திருந்து விடைபெற்றனர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
(கனடாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)