வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் அச்செழு அம்மன் வீதிக்கான புனரமைப்பு அனுமதியையும் வீதிப் புனரமைப்பு பதாகை வைப்பதற்கான அனுமதியையும் கோரி வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுப் பொறியியலாளரினால் தவிசாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரதேச சபையின் அனுமதியின்றி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரின் பிரத்தியேக ஆளணியினரால் வீதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. இந் நிலையில் சபை அனுமதி பெறப்படவில்லை எனவும் உள்ளுராட்சிக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தினை மத்திய அரசாங்கத்தின் நிறுவனம் ஏற்றுச் செயற்படவில்லை என்ற நிலையில் அவ் வீதி அமைப்பிற்கான பதாகையினை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியிருந்தார்.
இவ்வாறு அகற்றப்பட்டமையை அடுத்து மத்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல் நெருக்குவாரங்களால் தவிசாளரைக் கைதுசெய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. அரசியல் பழிவாங்களில் இருந்து தப்பிப்பிப்தற்காக தவிசாளர் நீதிமன்ற முன்பினைக்கு விண்ணப்பித்து முன்பினை பெற்றிருந்தார்.
இப் பிரச்சினை மத்திய அரசுக்கும் உள்ளுராட்சி மன்றம் ஒன்றிற்குமாக அதிகார பிரச்சினையாக பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டது. இந் நிலையில் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளரினால் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு குறித்த வீதிக்கான விளம்பரப்பதாகையை போடுவதற்கு அனுமதி தருமாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து தவிசாளர் கருத்துரைக்கையில், விளம்பரப்பதாகை அகற்றப்பட்டவுடன் ஊரெழு அம்மன் வீதியை புனரமைப்பதற்கான தெரியப்படுத்தல் கடிதங்கள் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டன. நாளை (23) திகதி இடம்பெறும் மாதாந்த அமர்வில் அனுமதி பெற்று வீதி அமைத்தலுக்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அவ் வீதி அமைவதற்கான சபை அனுமதி பெறப்பட்ட பின் என்னால் விளம்பரப் பலகைக்கான அனுமதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்படும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்