சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
தன்மானமுள்ள எந்த ஜனநாயக நாடும் இதுவரை செய்திராத அல்லது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு முன்னெடுப்பை இலங்கை செய்துள்ளது பல நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
வெளிநாடுகளில் உயிரிழந்தவரின் சடலத்தைக் கூட தாய்நாட்டிற்குக் கொண்டுவந்து இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கு பல நாடுகளின் அரசுகள் தீவிர முயற்சிகளை எடுக்கின்றன. ஆனால் இலங்கை அரசோ தமது நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களைப் புதைக்க மாலத்தீவை அணுகியுள்ளது.
அப்படியான ஒரு முன்னெடுப்பு தனக்குத் தெரியாது என்று அமைச்சரும் அரசாங்கப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல கூறினாலும், மாலத்தீவு வெளியுறவு அமைச்சரின் ட்வீட் இதை உறுதி செய்கிறது. இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளை தமது அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Good that Maldives & Sri Lanka trying to address this issue. 🇱🇰 is our most valued friend and our cousin. We stick together in sickness and & health. 🇱🇰 Muslims can be buried in 🇲🇻. There r burial grounds for Maldivians in 🇱🇰- Jawatha mosque has 4 generations of Maldivian leaders https://t.co/g9T8zFZOpW
— Mohamed Nasheed (@MohamedNasheed) December 15, 2020
மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹிதின் டிவீட்
உலகளவில் பல நாடுகள் தமது பொருட்களையும், தயாரிப்புகளையும் ஏற்றுமதி செய்து நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றன. அவ்வகையில் இலங்கையும் தனது தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் நன்மதிப்பைப் பெற்றிருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த அரசுகள்- தங்களது உடம்பையே உரமாக்கி `சிலோன் டீ` எனும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த- மலையகத் தோட்டத் தொழிலாளர்களை இன்றளவும் நவகாலனித்துவ அடிமைகளாக வைத்துள்ளனர் என்பது வேறு கதை. அதைப் பற்றி விரிவாக பின்னர் எழுதுவேன்.
தேயிலை மூலம் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருந்த இலங்கை அரசு தற்போது `உடல்களை ஏற்றுமதி` செய்ய விழைகிறது.
உலக சுகாதார நிறுவனம் சரியா–இலங்கை சரியா?
கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களைப் புதைப்பதன் மூலம் அந்த நோய்த் தொற்று பரவாது என்று உலக சுகாதார அமைப்பு உட்பட பல அமைப்புகள் கூறினாலும், அதை ஏற்க மறுத்த ராஜபக்க்ஷ அரசு தமது சொற்படி ஆடும் `சுயாதீனக் குழுவொன்றை` அமைத்து தமக்குச் சாதகமான அறிக்கையொன்றைப் பெற்று அதன்படி கோவிட்-19 காரணமாக மரணமடைந்தவர்களை- அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் உடல்களைப் புதைக்க அனுமதிக்காமல் அவற்றைத் தகனம் செய்தே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக உள்ளனர்.
சிறுபான்மையினர் மீது தொடர்ந்து வன்மத்துடன் நடந்துகொள்கிறது எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வரும் இலங்கை அரசு தற்போது கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை மாலத்தீவில் புதைக்க அந்நாட்டு அரசிடம் கோரி அதை மாலே அரசு ஏற்றுக் கொண்டுள்ளதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
On special request from Sri Lankan President @GotabayaR, President @ibusolih is consulting stakeholder authorities of the Government of Maldives to assist Sri Lanka in facilitating Islamic funeral rites in the Maldives for Sri Lankan Muslims succumbing to COVID19 pandemic. pic.twitter.com/EPj6TCCLLp
— Abdulla Shahid (@abdulla_shahid) December 14, 2020
மாலத்தீவு அதிபரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ட்வீட்
எதன் அடிப்படையில் மாலத்தீவு அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது என்பதற்கு எவ்வித விளக்கமும் இல்லை. தன்மானமுள்ள நாடா எனும் கேள்வி மாலத்தீவுக்கும் இந்த விஷயத்தில் பொருந்தும்.
மாலத்தீவு அரசுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை
மாலத்தீவு அரசு இலங்கையின் வேண்டுகோளுக்கு அளித்த அனுமதியை மீளப் பெறவேண்டும் என்று பிரிட்டனிலுள்ள 18 முஸ்லிம் அமைப்புகள் கோரியுள்ளன.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள அந்த இலங்கை முஸ்லிம் அமைப்புகள் இதை வலியுறுத்தி லண்டனிலுள்ள மாலத்தீவு தூதருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.
இலங்கை அரசுக்கு `ஜனாசாக்கள்` தொடர்பில் அளிக்கும் ஆதரவை மாலத்தீவு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரியுள்ளன. மறைமுக செயல்திட்டம் ஒன்றுடன் இலங்கை அரசு செயல்படுகிறது, அது நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் மீது அரசியல் மற்றும் சமூக ரீதியில் பாரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்களின் கடிதம் கூறுகிறது.

பிரிட்டனிலுள்ள முஸ்லிம் அமைப்புகளின் கடிதம்
உலகின் முன்னணி இஸ்லாமிய நாடுகளான சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான், வங்கதேசம், இரான் போன்ற நாடுகளில் கூட கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களை இஸ்லாமிய மரபுகள் படி நல்லடக்கம் செய்கிறார்கள். எனவே நோய் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களைப் புதைத்தால் நிலம் மற்றும் நீரின் மூலம் அந்த நோய்க் கிருமி பரவும் எனும் இலங்கை அரசின் வாதம் அடிபட்டுப் போகிறது.
மாலத்தீவு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரிட்டனின் முஸ்லிம் அமைப்புகள் “இறந்தவர்களை புதைக்க இந்த உபாயம் ஒரு வழியல்ல, அது அரசியல் யாப்பில் அளிக்கப்பட்டுள்ள உறுதிகளுக்கு முரணானது“ என்று கூறியுள்ளனர்.
`அடிப்படை உரிமை மீறல்`
முறையான இஸ்லாமிய முறையிலான அடக்கத்திற்காக இலங்கை உயிரிழந்தவர்களின் சடலங்களை மாலத்தீவுக்கு அனுப்பும் பிரேரணையானது அப்பட்டமான அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்று அந்த 18 முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
“அப்படிச் செய்வதன் மூலம் இறந்தவர்களின் குடும்பத்தார் உயிரிழந்த நபருக்குச் செய்ய வேண்டிய மதரீதியிலான உரிமைகளை மறுப்பதாகும், மேலும் இறுதி கிரியைகளுக்குப் பிறகு அஞ்சலி செலுத்த அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் செல்ல முடியாத சூழலை உருவாக்கும்“ என்று கூறும் அந்த அமைப்புகள் இது முஸ்லிம்களுக்கு மீள முடியாத மனவுளைச்சலை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன.
தற்போதுள்ள சூழலில் இறுதிக் கிரியைகளுக்காக ஒருவர் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்குச் சென்று வருவதும் இயலாத ஒன்று என்று அந்தக் கடிதம் கூறுகிறது
“கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கையிலுள்ள கடும்போக்கு சிங்கள பௌத்த அமைப்புகள், உள்நாட்டு முஸ்லிம்களை `மண்ணின் மைந்தர்கள்` என ஏற்க மறுக்கின்றன“. முஸ்லிம்களை `வந்தேறிகள்` என்று குற்றஞ்சாட்டும் சிங்கள பௌத்த அமைப்புகள் அரசின் ஆதரவுடன் சிறுபான்மையினரை அச்சுறுத்தி அவர்களின் மதச் சுதந்திரத்தை ஒடுக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என நாள்தோறும் முழங்கும் பௌத்த அமைப்புகளும் அதனை வழிநடத்தும் குருமார்களும் அரசை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விழைகின்றன. அவர்களின் அழுத்தம் காரணமாக இலங்கையில் சிறுபான்மையினர் மீது `அரச பயங்கரவாதம்` கட்டவிழித்துவிடப்படுகிறது என்று தொடர்ச்சியாக அரசியல் அவதானிகள் கூறி வந்துள்ளனர். ஆனால் வழக்கம்போல தம்மீதான குற்றச்சாட்டை அரசு மறுக்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோவொரு காரணத்திற்காக `பேரினவாத சக்திகள்` தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக சுயலாப நோக்குடன் சிறுபான்மையினர் மீது நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதலை முன்னெடுத்து வருவது இலங்கையில் ஒரு சாபக்கேடாகவே உள்ளது என்று மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் ஆதங்கப்படுகின்றனர்.
இலங்கையில் வெளிப்படையாக தம்மை சிங்கள பௌத்தர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் புத்த பகவானின் சிந்தனைகள் மற்றும் உபதேசங்களை வாசித்துள்ளனரா எனும் கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
கோவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களைப் புதைக்க மாலத்தீவை வேண்டியுள்ள அரசு, இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் இந்தக் கொடிய நோயினால் மரணமடைய நேர்ந்தால் என்ன செய்வார்கள்? இந்தியாவிடமும் இதர மேற்குலக கிறிஸ்தவ தேசங்களிடமும் இறந்த எமது பிரஜைகளை நல்லடக்கம் செய்ய உங்கள் நாடுகளில் இடம் கொடுங்கள் என்று கேட்க முடியுமா? அப்படியே கேட்டாலும் அந்த நாடுகள் எப்படியான பதிலளிக்கும் என்பதை நாம் அறிவோம்.
மாலத்தீவும் ஒரு முஸ்லிம் நாடு. அந்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களைப் புதைக்க முடியுமென்றால் ஏன் இலங்கையிலேயே அவர்களைப் புதைக்க முடியாது? இப்படி ஏராளமான கேள்விகள் இருந்தாலும், இலங்கை அரசிடமிருந்து எந்தவொரு பதிலும் இதுவரை இல்லை.
Dear Minister Shahid, I’m attaching my mail to your High Commissioner in Colombo on this issue for your attention.
Regards and best wishes,
Rauff pic.twitter.com/SPajRpWmYC— Rauff Hakeem (@Rauff_Hakeem) December 14, 2020
மாலத்தீவில் புதைப்பதற்கு ரவூப் ஹக்கீமும் ஆதரவு?
இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் கட்சிகள் அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகளால் ஏதும் காத்திரமான தமது சமூகத்துக்கு செய்ய முடியவில்லை. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் கணிசமானவர்கள் அரசின் பக்கம் தாவி விட்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்களுக்கு தமது இருப்பையும் கட்சியைக் காப்பாற்றுவதுமே பெரும் சவாலாக இருக்கிறது. பெயரளவுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதைவிட அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு தமது அடிப்படை மதவுரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபைகளின் பிரதிநிதிகளும் குரல் கொடுக்கின்றனர். `ஜனாசாக்களை` புதைப்பதற்கு பதிலாக எரிக்க வேண்டும் என்று கூறும் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஏன் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகி அழுத்தம் கொடுக்கக் கூடாது? அதற்கு யாரும் பதில் சொல்வதற்குத் தயாராக இல்லை. அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு. பழிவாங்கும் அரசிடன் பணிந்து செல்வதே மேல் என்று அவர்கள் நினைக்கக் கூடும்.

வடக்கு கிழக்கு இலங்கையில் சிறுபான்மை மக்கள் போராட்டம்
இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும் போது அவர்களுக்குத் தமிழ் மக்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது ஆறுதலாகவுள்ளது. வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்களும் மத குருமார்களும் பங்கு பெற்றனர்.
நிறைவாக ஒரு கேள்வி. அரசின் உயர் பதவி அல்லது அமைச்சரவையில் இருக்கும் முஸ்லிம்கள் யாரேனும் துரதிருஷ்டவசமாக கொரோனா காரணமாக உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் இறுதிக் கிரியைகள் இலங்கையில் நடக்குமா அல்லது அவர்களது ஜனசாக்களும் மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படுமா?