ஊடக அடக்குமுறையை அரசு உடன் நிறுத்த வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் உதயன் பத்திரிகை மீதான பயங்கரவாத தடைச்சட்ட வழக்குப் பதிவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனது ஒளிப்படத்தையும் சொற்களையும் பிரசுரித்தமைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிஸாரால் ‘உதயன்’ பத்திரிகை மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ராஜபக்ச அரசின் ஆட்சி காலத்தில் பல தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். இதை எவரும் மறந்து விடவில்லை.
தமிழ் மக்களுக்காக போராடிய ஒரு தலைவரின் ஒளிப்படத்தை பிரசுரித்தது எவ்வாறு தவறாகும்? அரசுடைய தவறான செயற்பாடுகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கின்ற ஊடகங்கள் மீது அழுத்தம் கொடுப்பது என்பது ஊடக சுதந்திரத்தை அழிப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் செய்யப்படுகின்றது. அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ததை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இந்த அரசு கடந்த கால தவறுகளிலிருந்து விடுபட்டு ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும், என்றார்