(மன்னார் நிருபர்)
(24-12-2020)
‘பிரஜா ஹரித்த அபிமானி’ தேசிய மர நடுகை திட்டம் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை 9.34 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் எண்ணக்கருவிற்கு அமைய தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் நீர் மூலங்களை பாதுகாப்பதற்கு என நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் மரங்களை நடும் வேலை திட்டத்தின் கீழ் மரம் நடும் தேசிய நிகழ்வு தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.எம்.முஹமட் ஸஹீ தலைமையில் நானாட்டான் அறுவைக்குன்று பகுதியில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமேல் , கௌரவ விருந்தினர்களாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாலர் எஸ்.கிறீஸ்கந்தகுமார், தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.
அதனை தொடர்ந்து தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பாகவும் மர நடுகை திட்டத்தின் நோக்கம் பற்றியும் பிரதேச மக்களுக்கு தெளிவு படுத்தல் இடம் பெற்றமை குறிப்பிடத்தகக்து.