கதிரோட்டம் 24-12-2020
இதுவரை காலமும் வடக்கு அரசியலிலும் தமிழர் விடயங்களிலும் கண்களை மூடிக்கொண்டு செயற்பட்ட தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இது வரை மக்களை ஏமாற்றிய வண்ணம் செய்த அரசியல் ‘பணிகள்’ அவர்களை பொருளாதார ரீதியாக வளர்த்து விட்டுள்ளன என்றே கூற வேண்டும். இதனால் மேற்படி இரண்டு தமிழர்கள் சார்ந்த கட்சிகளும் வடக்கு அரசியலில் ஆட்டம் நிலைக்கு வந்துள்ளதை எமது மக்கள் கண்களால் நிதர்சனமாகப் பார்க்கின்றார்கள். மேலும் தற்போதைய அரசியல் தளத்தில் யாழ்ப்பாண மாநகர சபையும் நல்லூர் பிரதேச சபையும் இந்த வீழ்ச்சிக்கு நல்ல உதாரணங்களாகத் தெரிகின்றன.
ஆனால் இந்த வீழ்ச்சி பற்றியும் தாழ்வை நோக்கிச் செல்லும் நிலை பற்றி கட்சியின் தலைவர் சம்பந்தர் ஐயாவிற்கு ஒன்றுமே தெரிவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. அவரது கண்பார்வை அற்றுப்போய்விட்டது. முதுமை அவரை இயங்கவிடாமல் செய்து விட்டுது.
ஆனால் அவர் தலைமையில் சுமந்திரன், ’மாவை’ சேனாதிராஜா மற்றும் ஸ்ரீதரன் சிவஞானம் போன்றவர்கள் திட்டமிட்டு செயற்பட்டு தங்கள் நலன்களை கவனித்துக் கொண்டு நடத்திய அரசியல் செயற்பாடுகள், எமது மக்களுக்கு ஒன்றையுமே பெற்றுத் தரவில்லை. ஆனால் சுமந்திரனுக்கு மட்டும் பத்து இராணுவத்தினர் எந்நேரமும் பாதுகாப்பு வழங்கும் ‘இலாபத்தை’ மட்டும் தந்திருக்கின்றது.
எமக்கு ஆச்சரியமாக உள்ளது. எப்படி இவர்கள் மக்கள் விரோத அரசியலையும், தர்மத்திற்கு எதிரான காரியங்களையும் செய்யத் துணிந்தார்கள் என்பது மக்களுக்குப் புரியவில்லை.
ஆனால் அது அரசியலில் அவதானிப்புக் கொண்டவர்களுக்கு நன்கு புரிந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் தனது அரசியலை ஆரம்பிக்க ரணிலோடு இணைந்த அவரை சம்பந்தரோடு ‘பேசி’ தமிழ்க் கட்சியின் பக்கம் அனுப்பி வைத்தார் ரணில். அதன் தாக்கம் தான் கடந்த மைத்திரி ஆட்சியில் ரணில் பிரதமராக இருந்து நடத்திய தமிழர் விரோத அரசியல். ஆதனால் பலனடைந்தவர்கள் சம்பந்தர் ஐயா தொடக்கம் அடிமட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் வரையும்.
ஆனால் கடந்த தேர்தலின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன, யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டைத் தவிர வேறு ஒருவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தினால் ஆதரிக்கத் தயாரென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
அத்தோடு, நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய வேட்பாளரை நியமித்தால் அவரையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு கூட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபை விவகாரம் தொடர்பாக தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபை முதல்வருக்கு இ.ஆர்னோல்ட்டை தவிர இன்னொருவரையும், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு தியாகமூர்த்தி தவிர்ந்த இன்னொருவரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக அறிவித்தால் அவர்களை ஆதரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராக இருக்கிறது.
அதேநேரம், இரண்டு சபைகளிலும் பதவி விலகிய ஆர்னோல்ட், தியாகமூர்த்தி இருவரையுமே வேட்பாளர்களாக நிறுத்தினால் எமது கட்சி அவர்களை எதிர்க்கும். அதேநேரம், எமது எதிர்ப்பையும் மீறி அவர்கள் வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும் அவர்கள் சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்தையும் எதிர்ப்போம்.
இதன்மூலம், இரண்டு சபைகளும் கலையும் நிலைமை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஒரு நிலைக்கு வடக்கு தமிழர் அரசியலை கொண்டு வந்த தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்து ஏமாற்று அரசியலையே செய்யத் துணிந்து நிற்கின்றது. சுமந்திரனும் ‘மாவை’யும் இதற்கு நல்ல உதாரணங்கள். மாவை தேர்தலில் தோற்றுப் போனாலும் தானாகவே வந்து பல பதவிகளில் அமர்ந்து கொண்டுள்ளார். இன்னும் பதவிகளை அவர் ‘குறி’ வைத்துள்ளார் என்பதும் வெளிச்சமாகத் தெரிகின்றது.
மேலும், சுமந்திரன் இவ்வளவு விமர்சனங்களைச் சந்தித்த பின்னரும் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து காப்பாற்றுவதற்கு முனைவதை சாதாரண தமிழ் மக்கள் மட்டுமல்ல, இரண்டு தலைவர்களான விக்கினேஸ்வரன் அவர்களும் கஜேந்திரகுமார் அவர்களும் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அனைவருமே மிகக் கவனமாக இருந்து சுமந்திரனையும் மாவையையும் கண்காணித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் இருவரினதும் ‘சுயநல’ அரசியல் தொடராமல் இருக்க…