*மலாக்கா பரமேஸ்வர மன்னர் பரம்பரை வீழ்ந்ததற்கும்*
*வேளாங்கண்ணியில் புனித தேவாலயம் எழுந்ததற்கும்*
*காரணமானவர்: வாஸ்கோட காமா*
*-நக்கீரன்*
மலாயா மண்ணிலும் மக்களிடத்தும் முதன் முதலில் ஐரோப்பியக் கலப்படம் செய்தவர்கள் போர்த்துகீசியர்கள். 15-ஆம் நூற்றாண்டில் ஏறக்குறைய இந்த மண்டலம் முழுவதும் இஸ்லாம் பரவி வேர் விட்டு, கிளை விட்டு, விழுதும் விட்டு முழு மறுமலர்ச்சியை எட்டியிருந்த வேளையில், அடுத்த நூற்றாண்டே கிறிஸ்துவத்தை முதன்முதலில் இங்கு பரப்பியவர்கள் போர்த்துகீசியர்கள்.
மலாக்காவை உருவாக்கிய சோழ பாரம்பரிய சுமத்திரா மன்னர் பரமேஸ்வரரும் இஸ்லாத்தைத் தழுவி, இஸ்கந்தர் ஷா என்னும் பெயருடன் ஆட்சிபுரிந்து வந்த நிலையில், 1424-இல் அவர் காலமானார். அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் ஸ்ரீ மகாராஜா எனும் முகம்மது ஷா சுல்தானை நிம்மதியாக ஆட்சி செய்ய விடாமல் காடுகளுக்குள் ஓடும்படி செய்து, கடைசிவரை அவர் நாடோடியாகவே வாழ்ந்து மறைய நேரிட்டதற்கும் காரணம் போர்த்துகீசியர்கள்தான்.
16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலைக் கலாச்சாரத்தையும் கட்டடக் கலையையும் கிறிஸ்துவ சமயத்தையும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் முதலில் அறிமுகம் செய்தவர்கள் போர்த்துகீசியர்கள். 1511 முதல் தொடர்ந்து 130 ஆண்டுகளுக்கு அந்நிய சாம்ராஜ்யத்தை இங்கு முதலில் நடத்தியவர்களும் அவர்கள்தான்.
இதற்கெல்லாம் வழிகோலிய மனிதர் வாஸ்கோட காமா; தமிழகம் வேளாங்கண்ணியில் புனித மாதா தேவாலயம் உருவானதற்கும் இந்த மனிதர்தான் காரணம்.
மலேசியாவின் பன்முக பண்பாட்டு நுழைவாயில் நகரமும் வரலாற்றுப் பட்டணமுமான மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைபற்றிய பின்னர் அதன் வாணிபச் சூழ்நிலை அடியோடு மாறிப்போனது. சீன வணிகர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் நிறைந்த ஆதிக்கம் அடியோடு அற்றுப்போனது.
ஐரோப்பாவில் பண்டைய கிரேக்க அரசு தங்களை எப்படி கடல் வாணிகத்தில் ஒடுக்கியதோ அதைப் பாணியில் சீனர்களை ஒதுக்கி வைக்க போர்த்துக்கீசியர்களுக்கு துப்பாக்கியும் பீரங்கியும் பெரும் உதவி புரிந்தன.
இங்கு முதல் தடவையாக துப்பாக்கிகளைக் கொண்டு ஆதிக்கம் செலுத்திய போர்த்துகீசியர்கள், சீன வணிகர்களையும் மக்களையும் அனுசரித்தும் அரவணைத்தும் நடந்திருந்தால் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்தைப் போலவோ அல்லது சோழ வளநாட்டின் பூம்புகார் பெரும்பட்டணத்தைப் போலவோ மலாக்கா இன்னும் செல்வச் செழிப்பில் உயர்ந்திருக்கும்.
ஆனால், வறண்ட பூமியில் புரண்டு கிடந்த போர்த்துக்கீசியர்களுக்கு அந்தப் பாங்கு ஒட்டவில்லை. அதேவேளை, மலாக்காவை நிருவாகம் செய்வதிலும் அவர்களுக்கு பற்பல தடங்கள் ஏற்பட்டன.
பரமேஸ்வர மன்னனின் மகன் முகமட் ஷா சுல்தானின் ஆட்சியின்கீழ் இருந்தபோது பலதரப்பட்ட மக்களும் பாரபட்சம் இல்லாமல் மலாக்காவில் வியாபாரம் செய்துவந்தனர். ஆனால், போர்த்துகீசியர்கள் வந்த பின்னர் மற்ற சமூகத்தினர் மலாக்காவிற்கு வரவே தயக்கம் காட்டினர். காரணம், மற்ற மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் நிலவியது.
பன்னாட்டு கடல் வாணிகத்தினர்கூட, அந்தக் காலக்கட்டத்தில் மலாக்கா நீரிணையை ஒதுக்கிக் கொண்டுதான் தங்களின் பயணத்தை மேற்கொண்டனர். அந்த அளவிற்கு ஆதிக்க மனப்பான்மை கொண்டிருந்தும் போர்த்துகீசியர்களுக்கு மலாக்காவில் வணிக ரிதியிலான வளர்ச்சியோ வேற்றியோ கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த ஆசிய வாணிபத்தை தங்களின் பிடிக்குள் கொண்டுவர நினைத்த அவர்கள், கடைசியில் ஆசிய பன்முக வணிகக் கட்டமைப்பை அடியோடு குலைத்ததுதான் மிச்சம்.
ஆனாலும் அவர்களின் ஆதிக்கம், இவர்களைப் போன்ற இன்னொரு ஐரோப்பிய ஆதிக்கக் குழுவினரான டச்சுக்காரர்கள் வந்து மடக்கும்வரை 130 ஆண்டுகளாக நீடித்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், மலாக்காவை ஏறக்குறைய ஓர் ஐரோப்பிய முனையமாகவே மாற்றி இருந்தனர் போர்த்துகீசியர்கள். அந்த அளவுக்கு தேவாலயங்கள், போர்த்துகீசிய-ஆங்கில மொழிச் சாலைகள், அரக்கு வண்ணத்தில் எழுப்பப்பட்ட தங்களின் பாரம்பரிய கட்டடங்கள் என்றெல்லாம் மலாக்காவையே முழுதாக உருமாற்றி இருந்தனர்.
அதன் பிறகு ஜப்பானியர்கள் படையெடுத்தனர்; தொடர்ந்து ஆங்கிலேயர்கள் வந்ததெல்லாம் நாம் அறிந்தது.
இதில் வேடிக்கையும் வினோதமும் என்னவென்றால், மலாயாவின் தென் புலத்தில் இருந்த ஒரு வணிக மையமான மலாக்காவை முற்றுகையிடுவதற்-காக வந்த போர்த்துகீசியர்கள், ஐரோப்பாவில் இருந்து வரவில்லை. அவர்கள், இந்தியாவில் இருந்துதான் மலாயாமீது படையெடுத்தனர்.
மொகலாய சாம்ராஜியம் உச்சத்தில் இருந்த இந்தியாவில், அதன் மேலைக் கடல் ஓரத்தில் அமைந்திருந்த உல்லாச நகரான கோவாவில் தங்களுக்கான ஆட்சியை நிறுவி வலுவுடன் திகழ்ந்த போர்த்துகீசியர்கள் அங்கிருந்துதான் மலாக்காவை நோக்கி படையெடுத்தனர்.
இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் வாஸ்கோடகாமா என்னும் கடலோடிதான்.
சின்ன வயதிலிருந்தே அவருக்கு கடல்மீது அலாதியான ஆர்வம் எழுந்து எழுந்து தணிந்தது. கணிதத்தில் வல்லானான வாஸ்கோடகாமா, வானியலையும் கற்று கடல் பயணத்திலேயே குறியாக இருந்திருக்கிறார்.
அப்படிப்பட்ட வாஸ்கோடகாமாதான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். அரபு நாடுகளின் ஊடாக பயன்படுத்தப்பட்ட தரை மார்க்கத்தைவிட, தங்களுக்கென்று தனியாக ஒரு கடல்வழி காணப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்த போர்ச்சுகல் மன்னன் 2-ஆம் ஜோன், வாஸ்கோடகாமாவிற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து கடலில் வழி அனுப்பி வைத்தான்.
மிகவும் குறுகில காலத்திற்குள் இன்றைய கேரள மாநிலத்தின் கோழிக்கோடு என்னும் கடற்கரை நகரை அடைந்த காமா, வெற்றிக் களிப்பில் மிதந்து, சுமார் மூன்று மாதங்களாக இந்தியாவில் நோட்டமிட்டுக் கொண்டு தாயகம் திரும்பினார்.
ஏலக்காய், இலவங்கம், மிளகு உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் நிரம்பிய கப்பலுடன் தாயகத்திற்குத் திரும்பிய வாஸ்கோடகாமாவின் புகழ் போர்த்துகீஸ் நாட்டில் பரவியது.
எல்லா வகையாலும் தன்னிறைவு தேசமாக ஐரோப்பியர்களின் வாசமே இல்லாமல் விளங்கிவந்த இந்தியாவிற்கு அதுமுதல் கேடு விளைய ஆரம்பித்தது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் மீண்டும் இந்தியப் பயணம் மேற்கொண்ட பொழுது, இந்தியாவில் ஓர் ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற திட்டத்துடன் வந்த வாஸ்கோடகாமா, தான் எண்ணியபடியே இந்தியாவின் மேற்குக் கடல்(அரபிக் கடல்) ஓரத்தில் போர்த்துகீசிய அரசாங்கத்தை நிறுவினார்.
இதைப் பாராட்டிய போர்த்துகீசிய அரசு, காமாவை இந்தியாவின் ஆளுநராக(வைசிராயாக) நியமித்தது. அந்த வகையில், கோவாவை மையமாகக் கொண்டு நிறுவப்பட்ட போர்த்துகீசிய அரசாங்கத்தின் சார்பில்தான் மலாக்காமீது போர் தொடுக்கப்பட்டது.
1511 ஏப்ரல் மாதம் அல்ஃபான்சோ என்பவரின் தலைமையில் 18 கப்பல்கள், 1200 போர் வீரர்களுடன் வந்து மலாக்கா நீரிணைப் பகுதியில் முகாமிட்டு துப்பாக்கி, பீரங்கிகளுடன் போர் தொடுத்தனர்.
அப்போது மலாக்காவின் சுல்தானாக இருந்த முகமது ஷா, தாக்குப்பிடிக்க முடியாமல் தன் அரச விசுவாசிகளுடன் பகாங் காட்டிற்குள் ஓடி மறைந்தார்.
பின்னர் பிந்தாங் தீவில் தஞ்சம் அடைந்த சுல்தான் முகமது ஷா அவ்வப்பொழுது, நேரம் பார்த்து மலாக்கா போர்த்துகீசியர்கள் மீது சின்னச் சின்னத் தாக்குதல்களை நடத்தி வந்தார். இந்த அச்சுறுத்தலை சகித்துக் கொள்ளாத போர்த்துகீசியர்கள் 1526-இல் ஒரு பெரும்படையுன் சென்று பிந்தாங் தீவையே அழித்தனர்.
அதனால், அங்கிருந்து சுமத்ரா தீவுக்கு தன் குடும்பத்தோடு தப்பிச் சென்ற முகம்மது ஷா சுல்தான், அதே ஆண்டின் பிறப்குதியில் மறைந்தார்.
பரமேஸ்வர மன்னனின் அத்தியாயமும் அத்துடன் அற்றுப்போனது. அந்தக் கொடிய வேலையை செய்த கொடுங்கோலர்கள் போர்த்துகிசியர்கள். வணிகத்தின் பெயரில் நுழைந்தவர்கள், நாட்டையும் பிடித்தனர்.
இந்தியாவின் மேற்குக் கரைப் பக்கமாகவே பயணத்தைத் திட்டமிட்ட இவர்கள், ஒரு மாற்று ஏற்பாடாக தென்பகுதிக் கடல்(வங்காளக் கடல் என்று பெயர் மாற்றப்பட்ட குமரிக் கடல்) வழியாக புது மார்க்கத்தைக் காண முயன்று புயலில் சிக்கி, அரண்டு-மிரண்ட நிலையில் மாதாவை வேண்டிக் கொண்டு வேளாங்கண்ணியில் கரை சேர்ந்தனர். அப்படி கரைசேர்ந்த போர்த்துகீசியர்கள் எழுப்பியதுதான் கிறிஸ்துவர்களின் புனித தலமாக தமிழ் நாட்டில் விளங்கும் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம்.
இவ்வளவுக்கும் காரணமாக இருந்த கடலோடி வாஸ்கோடகாமா இறந்த நாள் டிசம்பர் 24(1524). இவர் பிறந்த காலம் குறித்து சரியான தகவல் இல்லை.