இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த 2004ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்டோரின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.
கடந்த 2004 டிசம்பர் 26ஆம் திகதி காலை 8 மணியளவில், இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை, ஆசிய நாடுகளில் வரலாறு காணாத பேரழிவினை ஏற்படுத்தியது.
அதாவது, ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக அந்த நில அதிர்வு பதிவாகியதுடன், இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 100 அடி உயர்த்திற்கு ஆழிப்பேரலை உருவாகியது.
இதனால், இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களில் இந்த ஆழிப்பேரலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த அனர்த்தத்தினால், ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 898 உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை நிர்க்கதிக்குள்ளாகினர்.
மேலும், 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துகள் மற்றும் உடைமைகள் சேதமாகின.
அந்தவகையில் இந்த ஆழிப்பேரழையில் சிக்கி இலங்கையில் மாத்திரம், 30 ஆயிரத்து 196 உயிர்கள் இலங்கையிலும் காவுகொள்ளப்பட்டன.21 ஆயிரத்து 411 பேர் காயமடைந்தனர்.
மேலும், ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதிக்குள்ளாகினர்.
மேலும், இந்த சுனாமி என்னும் ஆழிப்பேரலையை தொடர்ந்தே அதுதொடர்பான அச்சமும் விழிப்புணர்வும் உலக மக்களிடம் ஏற்படத் தொடங்கின.
அதனைத் தொடர்ந்தே ஆழிப்பேரலை அனர்த்தத்தை முன்கூட்டியே கண்டறிவதற்காக பல்வேறு உலக நாடுகளில் கண்கானிப்பு மையங்கள் நிறுவப்பட்டு சமுத்திரப்பரப்பும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், ஆழிப்பேரழையின் தாக்கம் இன்னும் மக்களின் மனங்களில் அழியா சுவடுகளாக பதிவாகியுள்ளதுடன், பலர் இதன் தாக்கத்தில் இருந்து இத்தனை வருடங்கள் கடந்த போதிலும் மீளமுடியாமல் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.