சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் நல்லூரில் போராட்டம் நடைபெறுகிறது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புறமாகவுள்ள நல்லை ஆதீன முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
“சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், அவர்களின் உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
எமது உறவுகளின் விடுதலைக்காக இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றுதெரிவித்து குரலற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்புவிடுத்திருந்தது.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டத்தில்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
சமூக இடைவெளியுடன் சுகாதாார நடைமுறைகளுக்கு ஏற்ப போராட்டம் நடைபெற்றுவருகிறது.