2009 மே, ஈழத்தமிழர் தேசம் பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக சிங்கள அரச கட்டமைப்பினால் ஆக்கிமிக்கப்பட்டுள்ள நிலையில், தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை எனும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகளுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்துள்ளது.
இப்பத்தாண்டுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்தது வந்த செயல்வழிப்பாதை தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடர்பில் அரசவை அமர்வின் போது ஆற்றிய உரையின் முக்கிய குறிப்புகள் :
நாடுகடந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டு இவ் வருடம் மே மாதத்துடன் பத்தாண்டுகள் நிறைவு பெற்றன. இப் பத்தாண்டுகளிலும் நாம் ஜனநாயகத் தேர்தல்முறையின் ஊடாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக, ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டுச் செயற்படும் அமைப்பாக தொடர்ச்சியாக இயங்கி வருகிறோம்.
அரசற்ற ஒரு தேசத்துக்கான அரசினை உருவாக்குவதனை இலக்காகக் கொண்டு உலகளாவிய ரீதியில் நாடுகளின் எல்லைகளைக் கடந்த ஒரு உயர்ந்த பார்வையுடன் செயற்படும் அமைப்புகள் இவ்வுலகில் உண்டென்றால் அவை எல்லாவற்றுக்கும் ஒரு முன்னுதாரணமாகவும் நாம் செயற்பட்டு வருகிறோம் என்பது இவ்விடத்தில் குறித்துக் கொள்ளப்பட வேண்டியது.
2009ம் ஆண்டு மே மாதத்தில் பெரும் தமிழன அழிப்புக்கூடாக ஈழத் தமிழர் தேசத்தை சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் முழுமையாக ஆக்கிரமித்தபோது தமிழர் தேசத்தின் சுதந்திரவேட்கையினை முழுமையாக நசுக்கி விடலாம் என்றே நம்பியது.
சிங்களத்தின் எதிர்பார்ப்பை முறியடித்து தமிழர் தேசத்தினது சுதந்திர வேட்கையின் குறியீடாக நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கி 2010 ஆண்டு மே மாத முள்ளிவாய்க்கால் முதல் ஆண்டு நினைவுடன் உலகுக்கு அறிமுகம் செய்தோம்.
கடந்த 10 வருடங்களாக அரசியல், இராஜதந்திர வழிகளில் ஈழத் தமிழர் தேசத்தின் இறைமையினை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் மக்கள் தமக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசினை உருவாக்கும் மாவீரர்களது விடுதலைக்கனவை தமது உள்ளங்களில் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதன் சாட்சியாக நமது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
நமது செயற்பாடுகளை நாம் பல்வேறு அரசியற் களங்களில் மேற்கொண்டு வருகிறோம். நீதி மன்றங்களையும் அரசியற்களங்களாகப் பயன்படுத்தும் அணுகுமுறையினையும் முன்னெடுத்து செயற்பட்டு வருகிறோம். இவ்வகையான எமது தொடர்ச்சியான செயற்பாடுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அங்கீகாரத்தையும் ஏற்புடைமையினiயும் வளர்த்து வருகின்றன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது எம்மைப்பார்த்து ஏதோ ஒரு வகை உணர்ச்சி வசப்பட்டநிலையில் இதனை இவர்கள் உருவாக்குகிறார்கள் – ஓரிரண்டு ஆண்டுகளில் செயலிழந்து போய்விடுவார்கள் என எதிர்பார்த்த பல அரசுகளும் எமது தொடர்ச்சியான செயற்பாடுகளின் காரணமாக இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
கிழக்குத் தீமோர், கயானா போன்ற நாடுகளின் முன்னாள் அரசதலைவவர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்முயற்சிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டமையும் இவ் அமர்வில் கொசாவா நாட்டின் முன்னாள பிரதி அரசதலைவர் பங்கு கொள்வதும் நமக்குக் கிடைத்து வரும் அங்கீகாரத்தின் பிறிதொருவகை அடையாளங்களாக இங்கே வெளிப்படுகின்றன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர் தேசம் பின்பற்றவேண்டிய அரசியற்பாதையினை வகுப்பதில் முன்னோடியாக இயங்கி வருகிறது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள முடியும்.
ஈழத் தமிழர் தேசிய அரசியலும், தமிழர் இறையாண்மை மீட்புப் போராட்டமும் தென்னாசியாவினதும் இந்து மகாசமுத்திரத்தினதும் புவிசார் அரசியல் பொருளியலுடன் நெருங்கிப் பின்னிப் பிணைந்தவை என்பதனையும் இவற்றைக் கையாள ஈழத் தமிழர் தேசத்துக்கான வெளியுறவுக்கொள்கை அவசியம் என்பதனையம் வெளிப்படுத்தி அச் சிந்தனைகளுக்குக்கமைய நாம் செயற்பட்டு வருகிறோம்.
இச் சிந்தனை தற்போது தாயகத்திலும் வளர்ச்சி அடைந்து வருவதனை நாம் கவனிக்க முடிகிறது. இது நம்பிக்கை தரும் ஒரு விடயமாகும்.
தமிழீழ மக்களுக்கெதிரான சிங்களத்தின் இனவழிப்பினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாலோ அல்லது அதற்கிணைவான ஓர் அனைத்துலக பொறிமுறையின் ஊடாகவோ விசாரணை செய்து தமிழ் மக்களுக்கு ஈடு செய் நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே முன்வைத்துச் செயற்பட்டு வருகிறோம்.
இந் நிலைப்பாடடை வலியுறுத்தி நாம் ஒரு மில்லியனுக்கும் மேற் பட்ட மக்களின் கையொப்பங்களைச் சேகரித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு அனுப்பியிருந்தோம்.
ஆரம்பத்தில் இந் நிலப்பாட்டை ஏற்கத் தயங்கிய பலரும் இந் நிலைப்பாட்டை பின்னர் ஏற்றுக் கொண்டதும் அத்தோடு தமிழ்நாடு சட்டசபை மற்றும் வடமாகாணசபை உட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அவைகளும் அதனை வலியுறுத்தித் தீரமானங்கள் நிவைறவேற்றிய நிகழ்வுகளும் எமக்கு நிறைவத் தந்த விடயங்களாகும்.
தமிழர் தலைவிதி தமிழர் கையில் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தை உருவாக்கி தமிழீழத் தனியரசு என்ற தீர்வினையும் உள்ளடக்கிய பொது வாக்கடுப்பின் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற கருத்துவாக்கத்தை ஏற்படுத்த நாம் செயற்பட்டு வருகிறோம். பொதுவாக்கெடுப்புக் கோரிக்கைக்கு ஆதரவாகத் தமிழ்நாடு சட்டசபை தீர்மானத்தை நிiவேற்றியிருக்கிறது.
தமிழ் மக்களைக் காயப்படுத்தும் வகையிலும் தமிழர் அடையாத்துக்கு ஒரு பயங்கரவாத விம்பம் கொடுக்கும் வகையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது பயங்கரவாத முத்திரை குத்தி சட்டரீதியாக விடுதலைப்பலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து நாம் செயற்பட்டு வருகிறோம்.
அண்மையில் பிரித்தானியாவில் நாம் மேற் கொண்ட நடவடிக்கை முன்னேற்றம் கண்டிருக்கிறது. பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது பயங்கரவாதப் பட்டம் சூட்டித் தடை விதிக்கப்பட்ட முறை பிழை எனத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இது ஒரு சிறிய வெற்றிதான். ஆனால் அரசொன்றின் முடிவு தவறு என வெளிப்படுத்தப்பட்ட முக்கியமானதொரு வெற்றி என்பனை நாம் இங்கு கவனத்திற் கொள்ள முடியும்
இந் நடைமுறையின் இதன் இறுதி முடிவு முறித்து வாதப்பிரதிவாதங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமது நடைமுறையைக் கையாள மூன்று மாத கால அவசாசம் தருமாறு பிரதிதானிய அரசு கோரியுள்ளது. இதன் இறுதி முடிவு பிரத்தானிய அரசு சார்பாக போகவும் கூடும்.
இருப்பினும் அரசுகளின் தமிழர் விரோத முடிவுகளை தொடர்ச்சியாக் கேள்விக்குள்ளாக்கி அரசியல் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் உத்தி சாரந்த செயற்திட்டத்தை நாம் வகுத்துச் செயற்பட்டு வருகிறோம். இந்தியா உட்பட ஏனைய தடை விதிக்கப்பட்ட நாடுகளிலும் அத் தடையை அகற்றுவதற்கான முயற்சிகள் வளர்ச்சியடைய எமது நடவடிக்கைகள் வழிகாட்டுபவை யாகவும் அமைந்து வருகின்றன.
இவற்றையெல்லாம் கூறும்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இப்பணிகளை முன்னெடுக்கும்போது எதிர் கொள்ளும் சவால்களையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
நாம் அரசியல் இராஜதந்திர வழிகளில் போராடுதல் எனும் போது அரசுகளின் நலன்களையும் தமிழ் மக்களின் நலன்களையும் ஒருங்கிசைய வைப்பது என்பதன் ஊடாகவே நாம் முன்னோக்கிய பாய்ச்சலை மேற் கொள்ள முடியும்.
உலக அரசியல் ஒழுங்கு அரசுகளை மையம் கொண்டதாக இருப்பதாலும் அவை நலன்கள் என்ற அச்சில் சுற்றிச் சுழல்வதாலும் அரசற்றதோர் தேசமாகவுள்ள நமது குரல்கள் இந்த அரசுகளின் காதுகளில் இலகுவில் வீழ்ந்து விடாது என்பதைன நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடிக்கு மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்ற தமிழ் முதுமொழிக்கேற்ப நாம் தொடர்ச்சியாக செயற்படுவது மட்டுமல்ல இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் நலன்களையும் தமிழர் நலன்களையும் ஒத்திசைய வைக்கக்கூடிய வாய்ப்புக்களையும் உய்த்துணர்ந்து செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம்.
மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் தடைசெய்யுப்பட்ட அமைப்பாக இருப்பதனால் தாயகத்தில் எமது செயற்பாடுகளை நாம் விரிவுபடுத்துவதிலும் தாயகத்துடனான தொடர்புகளைப் பேணுவதிலும் எமக்கு வரையறைகள் உள்ளன.
இத்தகை வரையறைகளை நாம் தகவல் தொழில்நுட்பவளர்ச்சியின் உதவியுடன் இயன்றவரை கடந்து தான் செயற்பட்டு வருகிறோம்.
நாம் இலங்கைத்தீவில் சிங்கள பௌத்த பேரினவாதம் தனது உச்ச அதிகாரத்தை எட்டியிருக்கும் காலகட்டத்தினை நாம் இப்போது கடந்து வருகிறோம்.
இக் காலகட்டத்தின்போது தமிழர் தேசத்தின் மீதான இனவழிப்பினை உச்சப்படுத்த சிங்களப் பேரினவாதம் மேற்கொள்ளும் என்பதனை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இதனால் இனி வரும் காலங்களில் ஈழத் தமிழர் தேசம் தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழர்கள் துணையுடன் தனது சக்தியெல்லாவற்றையும் திரட்டி சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவழிப்புக்கு எதிராகப் போராடியாக வேண்டும்.
இதற்கான வியூகங்களை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும். இதில் அடிப்படையானது ஈழத் தமிழர் தேசம் தனக்னெ பொது மூலோபாயத்துடனும் பல்வேறு தந்திரோபாயங்களுடனும் கூடிய பொது வேலைத் திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகையதொரு பொது வேலைத்திட்டம் தமிழரது இறைமை தமிழர்களின் கைகளில் உள்ளது என்ற நோக்குநிலையில் இருந்து வகுக்கப்பட வேண்டும்
தென்னாசியாவின், இந்து மகாசமுத்திரத்தின் புவிசார் அரசியல் சமன்பாட்டின் பங்காளர்களாகத் தமிழ் மக்களை உருவெடுக்க வைக்க வேண்டிய தேவையினையும் இப் பொது வேலைத் திட்டம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இத்தகையதொரு பொது வேலைத்திட்டம் உருவாக்கப்படுவது மட்டமல்ல இத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஓர் ஐக்கிய முன்னணியினை தமிழர் தேசம் உருவாக்கிக் கொள்வதும் இன்றைய காலகட்டத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது என தனதுரையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.