(மன்னார் நிருபர்)
(28-12-2020)
மன்னாரில் அவுஸ்திரேலியா நாட்டினை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று கனியவள மண் அகழ்விற்கான ஆய்வினை முடித்து தற்போது மண் அகழ்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த கனிய வள மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அமைப்பும் இணைந்து மன்னார் நகர பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் இன்று திங்கட்கிழமை(28) காலை 11 மணியளவில் கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
-குறித்த கண்டன போராட்டத்தில் சர்வ மத தலைவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள்,பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக மன்னாரின் சுற்றுச் சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம்,கடலில் தாழும் மன்னார் தீவை பாதுகாப்போம், அதி மேதகு ஜனாதிபதி அவர்களே எமது மன்னார் தீவினை கடலில் தாழாது பாதுகாருங்கள்,வெள்ளம் வரும் முன்னர் அணைகட்டுவோம், உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-இதன் போது கணிய வள மண் அகழ்விற்கு எதிராக கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்டது.
குறித்த கண்டன போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை பேணி சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.