எகனடாவிலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகையானது தனது 25வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் முகமாக 2021 ம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த வேளையில், தனது வெள்ளி விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் முகமாக, அதற்கு முன்னோட்டமாக, எதைக் கொண்டு வருகின்றாய் இனிய புத்தாண்டே? என்னும் கவியரங்கத்தை , கனடா உதயன் வாசகர் வட்டம் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை 26ம் திகதி நடத்தியது.
இணையவழி ஊடாக நன்கு திட்டமிட்ட வகையில் நடத்தப்பெற்ற மேற்படி கவியரங்கிற்கு கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கவிஞருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் தலைமை தாங்கினார்.
முன்னரெ ஏற்பாடு செய்யப்பட்ட வண்ணம் கவியரங்கில் பிரதானமாக கவிதை வாசிக்க, ஏழு கவிஞர்கள் பல நாடுகளிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள்.
அவர்களில் கவிஞர் தமிழரசி (தமிழ்நாடு) கவிஞர் ஜவாத் மரைக்கார் (இலங்கை)
கவிஞர் ஞான கணேசன் (கனடா) கவிஞர் வீணா பிரவீணா (சுவிற்சலாந்து)
கவிஞர் கணபதி ரவீந்திரன் (கனடா) கவிஞர் மகேந்திரன் பெரியசாமி(அமெரிக்கா)
கவிஞர் கோவிலூர் செல்வராஜா (இங்கிலாந்து) ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் கனடாவின் மொன்றியால் மாநகர் வாழ் எழுத்தாளரும் கவிஞருமாகிய வீணைமைந்தன் அவர்கள் கவிதா வாழ்த்து நிகழ்வை வழங்கி கவியரங்கத்தை நிறைவு செய்தார்.
முதலில் உதயன் மற்றும் நண்பன் இணையத்தளங்களின் தொழில்நுட்பப் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றும் விக்னேஸ் அவர்கள் தொடக்கி வைத்து அனைவரையும் வரவேற்று பின்னர் அங்குரார்ப்பண வைபவத்தை நடத்த எழுத்தாளரும் கவிஞருமான குயின்றஸ் துரைசிங்கம் அவர்களை அழைத்தார்.
தனது அங்குரார்ப்பண உரையை கவித்துவமாகச் படைத்து அதனை பலரும் இரசிக்கச் செய்தார் குயின்றஸ் அவர்கள். அவரது அந்தப் பங்களிப்பை பலரும் இன்று வரை பாராட்டிய வண்ணம் உள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அடுத்த கனடாவில் வாழ்ந்து வருபவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் மற்றும் கனடா கவிஞர்கள் கழகம் ஆகியவற்றின் ஸ்தாபகராக விளங்கும் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட வாழ்த்துச் செய்தியை கம்பீரமாக வழங்கினார்.
அவரது அந்த உரையை அனைவரும் இரசித்து அவரது வாழ்த்துக்களால் பூரிப்படைந்தனர்.
தொடர்ந்து திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், கவியரங்கை தலைமை தாங்கி நடத்தினார். அனைவரையும் வரவேற்றும், வாழ்த்தியும் தனது தலைமைக் கவிதையை வழங்கிய அவர்கள் பங்குபற்றும் கவிஞர்கள் பற்றிய அறிமுகத்தையும் செய்து சிறப்பாகச் ஒவ்வொருவரையும் வரிசையாய் அழைத்தார்.
அழைக்கப் பெற்ற ஏழு கவிஞர்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தார்கள்.
பார்வையாளர்களாக 60இற்கும் மேற்பட்டவர்கள் உலகின் பல நாடுகளிலிருந்தும் பங்குபற்றினார்கள்.
இறுதியில் கவிதா வாழ்த்து வழங்கிய வீணை மைந்தன் சிறப்பாக கவிதை வடிவில் கவிஞர்களை பாராட்டு வாழ்த்துரைத்தார். எங்கு கவிதைத் தமிழின் வாசம் இணையவழியாக வீசிய வண்ணம் இருந்தது என்றால் அது மிகையாகாது.
கவியரங்கம் அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றது. மேற்படி கவியரங்கை சிறப்பாக நடத்துவதற்கு கனடாவின் ‘ரூபம்’ இணையவானொலியின் அதிபர் திரு சங்கர் பல வழிகளிலும் உதவியாக இருந்தார்.
கவியரங்கம் நிறைவுற்றதும். பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் போன்ற பலர் பல நாடுகளிலிருந்தும் வந்து உரையாற்றினார்கள். பலரும் அனைத்தையும் பாராடடி இந்த வருடத்தில் உலகெங்குமிருந்த இடம்பெற்ற இறுதிக் கவியரங்கு என்ற பாராட்டை எமது இந்த கவியரங்கம் பெற்றதாக பாராட்டிச் சென்றார்கள்.
சத்தியன்- கனடா