மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்.
(மன்னார் நிருபர்)
(30-12-2020)
நாங்கள் தொலைத்தது விலை மதிக்க முடியாத எமது உறவுகளை.அவர்களை தொலைத்து விட்டு இன்று அவர்களை நாங்கள் தேடிக் கொண்டு வீதிகளில் நிற்கின்றோம். எனவே சர்வதேச விசாரனை வேண்டும் என்றே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கேட்கின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் இன்றைய தினம் புதன் கிழமை (30) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரியும்,காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் சர்வதேச விசாரனை மேற்கொள்ள வேண்டும் என கோரியும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா,,,,,,
நாங்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டு பிடிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
தொடர்ந்தும்,ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் ஒரு தீர்வுமே எமக்கு கிடைக்கவில்லை. தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காக எமது போராட்டங்களை நாங்கள் கைவிட்டு இருக்கப்போவதும் இல்லை.
-நாங்கள் தொலைத்தது விலை மதிக்க முடியாத எமது உறவுகளை.அவர்களை தொலைத்து விட்டு இன்று அவர்களை நாங்கள் தேடிக் கொண்டு வீதிகளில் நிற்கின்றோம்.
சர்வதேச விசாரனை வேண்டும் என்றே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கேட்கின்றோம். எதிர் வரும் வருடம் 2 ஆம் மாதம் ஜெனிவா பேச்சுவாத்தை இடம் பெற உள்ளது.
அதன் போது கால அவசாசம் வழங்கப்பட உள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக்கூடாது. மூன்று தடவைகள் கால அவகாசம் வழங்கியும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை (ஓ.எம்.பி) கொண்டு வந்தனர். ஆனால் ஒன்றுமே நடைபெற இல்லை. எங்களை ஏமாற்ற அரசாங்கள் இவ்வாறு நடந்து கொள்ளுகின்றது.அதனை எமது அரசியல் வாதிகள் நம்ப வேண்டும்.
-உங்களை நம்பியே நாங்கள் வாக்களித்தோம்.உங்களை நம்பியே நாங்கள் போராட்டங்களையும்,ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கின்றோம். எத்தனை வாக்குகளினால் வெற்றி பெற்றிர்கள், எத்தனை வாக்ககளினால் தோல்வி அடைந்துள்ளீர்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
-ஆனால் எத்தனை உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியாது.அதனை பற்றி யோசிப்பதற்கு உங்களுக்கு நேரம் இல்லை.
-நாங்கள் வீதிகளில் நின்று போராடுகின்ற போதும் அரசியல் வாதிகள் யாரும் எங்களிடம் வந்து எதுவும் கேட்பது இல்லை. இனியாவது கேட்பீர்களா?என்று தெரியாது.
-தொடர்ந்தும் ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுப்போம். உங்களினால் முடிந்தால் எமது போராட்டத்தில் கலந்து கொண்டு எமது உறவுகளை கண்டு பிடிக்க குரல் கொடுக்குமாறு கேட்டு நிற்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.