(மன்னார் நிருபர்)
(31-12-2020)
கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை (31) காலை மன்னாரில் அமைதி கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
-குறித்த போராட்டமானது காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
-குறித்த போராட்டத்தில் மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள்,சட்டத்தரணிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதி நிதிகள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சிறுபான்மை இன மக்களின் மரணத்திற்கு இறுதி மரியாதை கொடு, ஜனாதிபதி அவர்களே எங்களது ஜனாசாவை புதைக்க அனுமதி தாருங்கள்,ஜனாசாவை பலாத்காரமாக எரிப்பதை நிறுத்து, இனவாத நீ அனையட்டும் இன்றுடன், பிறக்கும் தையோடு தீவைப்பதை முடித்து விடு, எமது நாட்டில் சிறுபான்மை மக்களின் உரிமையை பரிக்காதே உள்ளிட்ட பல்வேறு வசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கண்டன போராட்டத்தை மேற்கொண்டனர்.
-போராட்டத்தை தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக சென்று ஜனாதிபதிக்கு கொடுக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.