வள்ளல் ரெனா
-நக்கீரன்
மலேசிய இந்திய சமுதாயத்தில் வள்ளல் என்னும் அடைமொழியுடன் அழைக்கப்படும் ஒரே மனிதர் ‘நினைவில் வாழும்’ நா. ரெங்கசாமி பிள்ளை.
நாடு விடுதலை அடைந்த காலக் கட்டத்தில், தோட்டத் தொழிலில் தூள் கிளப்பிய வர்த்தகப் புள்ளியான இவர், ‘தவணை முறை’ என்னும் புதிய நுட்பத்தை வர்த்தகத்தில் அறிமுகப்படுத்தி இளந்தோட்ட முதலாளியர் ஏராளமானோரை உருவாக்கினார்.
இத்தனைக்கும் 1950-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில்தான் சிவகங்கை சீமையிலிருந்து, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ஔவை மூதாட்டியின் வாக்கிற்கு இணங்க இம்மலாயாவிற்கு வந்தவர் இவர். வந்த சூட்டோடு, மண் வாசனைக்கும் மண்வாழ் மக்களின் இயல்புக்கும் ஏற்ப தன்னை தக அமைத்துக் கொண்டு ஆங்கிலேயர், சீனர், மலாயர் என அனைத்துத் தரப்பினருடனும் ஊடாடி, உறவாடி வர்த்தகக் கொடியை நன்றாக பறக்கவிட்டவர் வள்ளல் ரெனா.
பொருள் சேர சேர, இவரின் கொடைக் குணமும் பரந்து விரிந்தது. இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில் ஆசிரியர் தொழிலுடன் வாழ்க்கைப் பயணத்தை இவர் தொடங்கிய நேரத்தில், எவரோ ஒரு முதியவர் உதவி கேட்டதற்காக தன்னிடம் இல்லாத நிலையிலும் கடன்பெற்று உதவிக்கரம் நீட்டியவர் ரெங்கசாமி.
குடும்பத்தாரை நன்கு வாழ வைக்கவும் நலிந்த மக்களுக்கு கொடை அளிக்கவும் நிறைந்த பொருளீட்ட வேண்டும் என்று கனவிலும் நனவிலும் என எந்நேரமும் மனதிற் கொண்டிருந்த அந்த எண்ண ஊற்றுதான், வள்ளல் ரெனா-வை சிவங்கையிலிருந்து பெயர்த்து வந்து இம்மலையகத்தில் சேர்த்தது.
மலேசியத் திருநாட்டின் முதல் ஆறு பிரதமர்களுடன் குடும்ப உறவைப் பேணி வரும் தாமரைக் குழுமத்தின் அடித்தள நாயகரான வள்ளல் ரெங்கசாமி, அரசியல் ஈடுபாடும் மொழி-சமுதாயப் பற்றும் மிகக் கொண்டிருந்தார்.
மிகமிக நல்லபொழுது ‘இந்தப் பொழுது’
உயர்வுக்கு வழி ‘உழைப்பு’
நழுவவிடக்கூடாதது ‘வாய்ப்பு’
வணங்கத்தக்கவர்கள் ‘தாயும் தந்தையும்’
வந்தால் போகாதது ‘புகழும் பழியும்’
போனால் வராதது ‘மானமும் உயிரும்’
தானாக வருவது ‘இளமையும் முதுமையும்’
அனைவருக்கும் பொதுவானது ‘பிறப்பும் இறப்பும்’
கடைத்தேற வழி ‘உண்மையும் உழைப்பும்’
வருவதும் போவதும் ‘இன்பமும் துன்பமும்’
மிகப்பெரும் தேவை ‘சூழ்நிலை அறிவு’
போன்ற சிந்தனை சொற்றொடர்களை வேளை வாய்க்கும்பொழுதெல்லாம், குடும்ப உறுப்பினர்கள், வர்த்தக நண்பர்கள், தோட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரெங்கசாமி.
வள்ளல் ரெனா என்று சுறுக்கமாக அழைக்கப்படும் ரெங்கசாமியின் குடும்ப முன்னோர் தஞ்சை மண்டலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். மன்னர் ஆட்சி நடைபெற்ற அக்காலத்தில், பிற மன்னர்களின் ஆதிக்கமும் படையெடுப்பும் அடிக்கடி இடம்பெற்று வந்ததால், பொது மக்களும் தங்களின் வாழ்க்கைச் சூழல், தொழில் முறைக்கு ஏற்ப அவ்வப்பொழுது இடம்பெயருவது அந்நாட்களில் வாடிக்கையானது.
அந்த வகையில் தஞ்சை மண்ணில் இருந்து திருப்புத்தூருக்கு குடிபெயர்ந்த ரெங்கசாமியின் முன்னோர், சிவ கங்கைச் சீமையின் கோட்டை கொத்தளப் பகுதியில் வாழ்ந்த நேரத்தில் நாகப் பிள்ளை-தங்கம்மாள் இணையரின் நான்காவது மகனாகப் பிறந்தார் ரெங்கசாமி.
அதிக பொருள் தேடும் எண்ணத்தால் ஆசிரியர் தொழிலைவிட்டு, உணவுப் பண்டக விநியோகம், கனரக வாகன முதலாளி என்றெல்லம் அனுபவம் பெற்று பினாங்கில் நகரத்தார் பெருமக்களுடன் சேர்ந்து பண பரிவர்த்தனைத் தொழில் புரிந்து அதன் பிறகுதான் தோட்ட முதலாளியாகவும் தோட்ட வணிகராகவும் உருவெடுத்தார்.
வலுவான குடும்ப பின்னணி அமைந்தபின், ஏறக்குறைய ஒரு தலைமுறைக் காலத்திற்குப் பின் தமிழகம் திரும்பி 79 வயது வரை வாழ்ந்த வள்ளல் ரெனா-விற்கு ஜனவரி முதல் நாள்(1918) பிறந்த நாள்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24