இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடக்கு-கிழக்கு இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன. இந்த கவனயீர்ப்புப் போராட்டங்களில் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்குபற்றினர்.
குரலற்றவர்களின் குரல் எனும் அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டங்கள் மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரையிலும், மட்டக்களப்பு மற்றும் அப்பாறையிலும் நடைபெற்றன.
இலங்கைச் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளில் 16 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
அவர்கள் குறித்த எந்தத் தகவல்களும் தமக்குக் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் கூறுவதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
யாழ்ப்பாண சட்டத்தரணியான கனகரட்னம் சுகாஸ்,“ அரசியல் கைதிகளின் உயிருடன் அரசு விளையாடுகிறது“ என்று எச்சரித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட ஊட்டச்சத்து உணவு அந்தக் கைதிகளுக்கு கிடைக்கவில்லை, அது அவர்களின் உடல் நிலையில் பாரியத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார் சுகாஸ்.
குறிப்பாக 300 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரகுபதி சர்மாவின் உடல் நிலை 10 கிலோ குறைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய சுகாஸ் இதுபோன்று பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் வட மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட பலர் பங்குபற்றினர்.