மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தரப்படும் இவ்விருது பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக கொண்டது. (இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாய்) இவ்விருது பற்றிய அறிவிப்பினை சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் அறிவித்தார்.
சு.வெங்கடேசன் எழுதிய முதல் நாவலான காவல்கோட்டம் 2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றது. மதுரை மக்களவை உறுப்பினராக செயல்படும் சு.வெங்கடேசனின் ”வீரயுகநாயகன் வேள்பாரி” நாவலுக்கு மலேசியாவில் பெரும் வாசகர் வட்டம் இருப்பதும், மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் புலனத்தின் பாடநூலாக வேள்பாரி நாவல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மலேசிய நாட்டின் சிறந்த படைப்பாக சை.பீர்முகம்மது எழுதிய “அகினி வளையங்கள்” என்ற நாவல் பெற்றுள்ளது. பெருந் தொற்று காலமாக இது இருப்பதால் விருது விழா நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே விருது தொகை ஆசிரியருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.