உலகத்திலேயே கொரோனா தடுப்புக்கு இராணுவத்தை பயன்படுத்துகின்ற ஒரே அரசு இலங்கை இராணுவமாகத்தாக் இருக்க வேண்டும். உண்மையில் ஒரு நோயை கட்டுப்படுத்துகின்ற பொறுப்பு சுகாதாரத்துறைக்குத்தான் இருக்கிறது. “புலிகளை ஒழித்த எமக்கு கொரோனாவை ஒழிப்பது பெரிய வேலையல்ல..” என்று இலங்கை அமைச்சர் ஹெகலிய கூறிய கருத்துக்களை ஊகடங்களும் குறிப்பாக சமூகவலைத்தள வாசிகளும் கிண்டல் செய்ததும் இங்கே நினைவுகொள்ளத் தக்கது. அப்படி சொன்னவர்கள் இன்று கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறார்கள். நாற்பதாயிரத்தை கடந்த தொற்றும் 200ஐ கடந்த மரணங்களும் இலங்கையில் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில் புலிகளை அழித்ததுபோல் கொரோனாவையும் அழிப்போம் என்ற அமைச்சரின் பேச்சு என்ன மனநிலையை வெளிப்படுத்துகிறது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். சிறுபிள்ளைத்தனமான இந்தப் பேச்சில், தமிழர்களுக்கு எதிரான, புலிகளுக்கு எதிரான இனவாதம் வெளிப்படுவதும் கவனிக்க வேண்டிய விசயம். தமிழர்களை ஒடுக்குவதைப் போல, புலிகளை அழித்ததைப்போல கொரோனாவையும் அழிப்போம் என்கிற அரசின் போக்கு இந்த நாட்டில் தமிழர்களின் பாதுகாப்பும் அவர்களின் வாழ்க்கை நிலையும் எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளச் செய்கிறது.
உலகில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. கொரோனா பல படிப்பினைகளை நமக்கு தந்திருக்கிறது. ‘நீ பெரிது, நான் பெரிது’ என்று வாழ்கிற வாழ்க்கையை மற்றவர்களினுடைய ஆக்கிரமிக்கிற வாழ்க்கையை அது கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. எந்தப் பாதுகாப்பையும் கடந்து கண்ணுக்குத் தெரிய நுண்கிருமி உள் நுழைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனித இருப்பே கேள்விக்கு உள்ளான இந்த சமயத்தில்கூட, இலங்கையில் இராணுவ ஆட்சியை அதிகரிக்கும் முயற்சிகள் செவ்வனே நடந்து கொண்டிருப்பதுதான் ஆச்சரியமும் அதிர்ச்சியும்.
அதிலும் கொரோனாவின் பெயரால் இராணுவமயப்படுத்தும் முயற்சிகள் சிறப்பாகவே நடக்கின்றன. அதன் முதல் வேலையாக, இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, கொரோனா தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு இராணுவ சிரேஷ்ட அதிகாரி விகிதமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் இருபத்தைந்து மாவட்டங்களும் இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் தள்ளப்பட்டுள்ளன.
கொரோனாவை தடுக்கும் தேசிய அதிகாரிய சவேந்திர சில்வாவை நியமிப்பதும், 25 மாவட்டங்களையும் இராணுவத்தின் கைகளில் கொடுப்பதும் எதனை வெளிப்படுத்துகின்றது? உண்மையில் இலங்கையின் சுகாதாரத்துறை செத்துவிட்டதா? இலங்கையின் பொதுநிர்வாகத்துறை செத்துவிட்டதா? அதனால்தான் இந்த அரசு இராணுவ நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துகிறதா? நாட்டில் ஜனாதிபதியாக இருப்பவர், முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் முன்னளாள் பாதுகாப்பு செயலாளர், நாட்டின் பாதுகாப்பு செயலாளராக இருப்பவர், முன்னாள் இராணுவ அதிகாரி.
உண்மையில் நோய்மையை குணப்படுத்துகின்ற, கட்டுப்படுத்துகின்ற சக்தி வினைதிறனான சுகாதாரத்துறைக்கே உரியது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதேபோல தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளின் உலக நாடுகளின் சுகாதரத்துறை கடும் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழிக்க, உடல் நலத்தை பாதிக்கின்ற நோயை ஒடுக்க துப்பாக்கிளும் இராணுவ சீருடைகளும் அணிந்து கொள்ளுகின்ற பெருமை மிக்க நாடு இலங்கைதான்.
இவர்கள் எல்லோருமே கடந்த காலத்தில் ஈழப் போரின் இழைக்கப்பட்ட இனப்படுகொலை குற்றங்களுடன் தொடர்புடையவர்கள். இனப்படுகொலை புரிந்த இராணுவத்திற்கு நற்பெயரை சம்பாதிக்கும் முயற்சியாகவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இந்த வேலைகளை செய்கிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில், தமது இராணுவப் படைகள் போர்க்குற்றங்கள் எதனையும் செய்யவில்லை என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்தின கூறியுள்ளமை தமிழர் தரப்பினால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவும் முன்னர் சொல்வதைப் போல, ஸ்ரீலங்கா இராணுவப் படைகள் ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் மனிதாபிமானத்தை தூக்கிக் கொண்டு போருக்குச் சென்றவர்களாகவே இருக்கட்டும். ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும் இன்றைய மற்றும் கடந்தகால ஆட்சியாளர்களும் மிகவும் உத்தமர்களாக இனப்படுகொலைக் குற்றங்கள் புரியாதவர்களாகவே இருக்கட்டும். அதை இங்கே சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது.
சர்வதேச அரங்கில், ஐ.நாவின் சர்வதேச விசாரணையில், சர்வதேச நீதிமன்றத்தில் சென்று தாம் உத்தமர்கள் என்பதை இலங்கை அரசு நிரூபிக்க வேண்டும். ஏனெனில் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாகவும், இனப்படுகொலை செய்ததாகவும் சில உலக நாடுகளும் உலக நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் ஈழத் தமிழ் மக்களும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றால் ஏன் இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்? ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் வந்தால் ஏன் இலங்கை அரசு பதற்றம் அடைய வேண்டும்?
இலங்கை அரசு நிகழ்த்திய இனப் படுகொலையின் ஆதாரங்கள் பலவும் வெளியில் வந்திருக்கின்றன. சரணடைந்தவர்களை திட்டமிட்டு கொன்றழித்தமை, பெண்களை பாலியல் வல்லுறவு செய்து இனவழிப்பு செய்தமை, மக்களை போர் தவிர்ப்பு வலயங்களுக்குள் வரச் செய்து, அவர்கள்மீது குண்டுகளை கொட்டி கொலை செய்தமை, தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை மக்கள்மீது வீசியமை, நச்சு வாயு செலுத்தி மக்களை அழித்தமை என இலங்கை அரசுமீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
கடந்த காலத்தில் சனல் 4 தொலைக்காட்சி, பல ஆவணப்பட்டங்கள் வாயிலாக இக்குற்றச் சாட்டுகள் குறித்த ஆதாரங்களை வெளியிட்டது. அதேபோல அல்ஜசீரா மற்றும் தி கார்டியன் முதலிய அனைத்துலக ஊடங்களும் கூட பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. அவை கண்டு ஏன் இலங்கை அரசு அஞ்சியது? ஏன் பதற்றம் கொண்டது? ஈழத்தில் இனப்படுகொலை நிகழவில்லை என்றால், சிங்கள இராணுவம் இனஅழிப்புக்கான போர்க்குற்றங்களை செய்யவில்லை என்றால் அதனை ஒருமுறையான சர்வதேச விசாரணை மூலம்தான் இலங்கை அரசு நிரூபிக்க வேண்டும். ஈழப் போரின் இறுதியில் என்ன நடந்தது? என்ற உண்மையே ஈழப் பிரச்சினைக்கு தீர்வா அமையும். அதுவே ஈழ மக்களின் மனங்களுக்கும் மருந்தாகவும் அமையும்.
தீபச்செல்வன்