இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில் முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை இஸ்லாமிய நாடுகளின் கவனத்திற்கு உள்ளூர் முஸ்லிம் மக்களும், தலைவர்களும் கொண்டுசெல்ல வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் போர்க் காலத்தில் நடைபெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது, அதற்கு அனைத்து தமிழ் தரப்பும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் சாணாக்கியன் கேட்டுக் கொண்டார்.
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் அதற்கான முன்மொழிவை சகல தமிழ் தரப்புடன் இணைந்து முன்வைக்க கூட்டமைப்பு விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் காலஅவகாசம் கேட்டுள்ளதாக வந்த கருத்துக்கள் உண்மையில்லை என்றும் தெரிவித்த சாணாக்கியன் போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.