2021 புத்தாண்டு பிறந்தவுடன் மிகுந்த ஆர்வத்துடன் இலங்கைக்கு ஓடோடிச் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் அங்கு என்ன விடயங்களை பேசப்போகின்றார் என்பதை தமிழர் தரப்பு எதிர்பார்த்து காத்திருப்பதாக கொழும்பிலிருந்து கிடைத்த செய்தியொன்று தெரிவிக்கின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த பயணத்தின் மூலம் இந்திய அமைச்சர் ஒருவர் அல்லது வெளிநாட்டு அரசியல் தலைவர் ஒருவர் புத்தாண்டு பிறந்து இலங்கைக்கு பயணித்த முதலாமவர் என்ற பெருமையை எஸ். ஜெயசங்கர் பெறுகின்றார் என்று எமது கொழும்புச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இந்திய விமானப் படையின் விசேட விமானம் மூலம் கொழும்பைச் சென்றடைந்த அவரை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் தார பாலசூரிய மற்றும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்னர்.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கரின் இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றது என்று கூறப்பட்டாலும், இந்தியத் தரப்பும் குறிப்பாக இந்திய பிரதமர் மோடி அவர்களும் இதனை விரும்பியதாகவும், எனவே அதனை ஏற்று இலங்கைக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாவும் கூறப்படுகின்றது அவர், நாளை மறுதினம் 7ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரென இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்காலப் பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட தலைவர்களையும், வர்த்தக தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக, இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.