பேய் ஓட்டுதலுக்கும் வீட்டுச் சிறைக்கும்
ஆளான அறிவியல் மேதை: கலீலியோ
-நக்கீரன்
“இதுவரை நாமெல்லாம் நம்பிக் கொண்டிருந்ததைப் போல இந்தப் பூமி, தட்டையானதல்ல; அதைப்போல, பூமியை 12 இராட்சச தூண்கள் தாங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதும் உண்மையல்லை. மாறாக, இந்தப் புவி கோள வடிவிலானது. அத்துடன், இது ஓரிடத்தில் நிற்பதுமில்லை; நிலைப்பதும் இல்லை; மாறாக, சூரியனை சுற்றி வருகிறது. அவ்வாறு சூரியனை சுற்றி வரும்பொழுது, தன்னைத் தானேயும் வலப்புறமாக சுற்றிக் கொள்கிறது” என்று சொன்ன வானியல் அறிவியல் மேதை கலீலியோவை அதற்கு மேல் பேச விடாத 17-ஆம் நூற்றாண்டு மதவாதிகள், அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று முத்திரைக் குத்தினர்.
பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலத்தைதான் ஓர் ஆண்டு என்கிறோம்; மேலும் பூமியானது காலம் தப்பாமல் தன்னைத் தானேயும் சுற்றிக் கொள்கிறது. அதற்கான கால அளவைத்தான் ஒரு நாள் என்கிறோம் என்றெல்லாம் வானியல் சார்ந்த உண்மைத் தகவலை ஒவ்வொன்றாக கலிலியோ வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
அதனால் வெறுப்படைந்த மதவாதிகளும் திருச்சபைக் கூட்டத்தினரும் ஒன்று சேர்ந்து, ‘கலிலியோ திருந்துவதைப் போல தெரியவில்லை. சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதால் இவருக்குப் பேய் பிடித்து விட்டது; இனியும் கலிலியோவை விட்டு வைத்தால் அவரைப் பிடித்துள்ள பேய் ஊர் மக்களையும் ஆட்கொள்ளும் என்பதால் உடனே அந்தப் பேயை ஓட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டவனுக்கும் சமயத்துக்கும் எதிரான கருத்தை சொல்லிக் கொண்டு பாவக் கணக்கை ஏற்றிக்கொண்டே இருக்கிறார். இதற்கெல்லாம் ஒரேத் தீர்வு கலிலியோவைப் பீடித்துத்துள்ள பேயை விரட்டுவதுதான் என்று முடிவெடுத்த மதவாதிகள் கலீலியோவை, அவர் பிறந்த இத்தாலி, ஃபீசா நகரத்து தேவாலயத்தின் நுழைவாயில் அருகே கட்டிப்போட்டு பேய் ஓட்டும் சடங்கை நடத்தியுள்ளனர்.
கலீலியோ வாழ்ந்த காலம் வானியல், பூமி அமைப்பு யாவும் மதத்துடன் பின்னிப் பிணைந்திருந்தது. பூமிதான் அண்டத்தின் மையம் என்றும் அதனைச் சுற்றித்தான் பிற கோள்கள் வலம் வருகின்றன என்றும் கூறப்பட்டு அது மத நம்பிக்கையாகவும் பின்பற்றப்பட்டு வந்தது. புதிய சிந்தனையை யார் வெளிப்படுத்தினாலும் அவை மதத்திற்கு எதிரானவை என குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இந்த நிலை ஏறக்குறைய 1500 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது.
பேய் ஒட்டும் சடங்கு நிறைவேறிய பின்னும் அவரை விட்டுவிடாமல், சமயத்துக்கும் மதநம்பிக்கைக்கு எதிராகச் செயல்பட்டதாக குற்றம் சுமத்தி அன்றைய கத்தோலிக்க திருச்சபையினர், 1633-ம் ஆண்டு முதல் கலீலியோ 1642-ம் ஆண்டில் இருதயக் கோளாறு காரணமாக இறக்கும் வரை வீட்டுச்சிறையில் அடைத்தனர்.
கலீலியோ சிறைவைக்கப்பட்ட ஒன்பதாண்டுக் காலத்தில்தான் பொருள்களின் இயக்கம் குறித்த சோதனைகளை (Motion Of Experiments) எழுதி வைத்தார். அவரின் குறிப்புகள் அறிவியலின் மறுமலர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தது. அத்தகைய மேதைக்கு ஜனவரி 8 நினைவு நாள்.
இந்த இத்தாலிய மேதைதான் அறிவியலின் மறுமலர்ச்சிக்குக் காரணம். முதலில் கணிதம்மீது ஆர்வம்கொண்ட இவர் மெல்ல மெல்ல வானியல் மேல் ஆர்வம்கொண்டு வானியல் ஆய்வுகளை மேற்கொண்டார். கலீலியோவின் ஆய்வுக்கு அவரே உருவாக்கிய தொலைநோக்கிக் கருவி பெரிய உதவியாக அமைந்தது. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொலைநோக்கிக் கருவியைக் கண்டுபிடித்த அறிவியல் மேதையும் இவர்தான்.
1610-இல் சனிக் கோளை சுற்றியுள்ள வளையத்தைக் கண்டுபிடித்த இவர்தான் நெப்டியூன் கோளையும் கண்டறிந்தார்.
புவிமையக்கோட்பாட்டை உருவாக்கிய கலீலியோ பிறந்த நேரத்தில் ஃப்ளோரன்ஸ் என்னும் மன்னன் இத்தாலியை ஆண்டு வந்தார். ஆனால், தெளிவும் ஞானமும் பெற்ற பிந்தைய சமயவாதிகள் கலீலியோவிற்கு இழைத்த அநீதிக்காக வருந்தினர்.
வாட்டிகன் நகரத்து போப்பாண்டவர்கூட, 1992-இல், கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து கலிலியோவைத் தண்டித்தது தவறு என ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார். அறிவியல் உண்மைகள் அவை வெளியிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24