அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –
தமிழின அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தான் இரவோடு இரவாகச் சத்தம் சந்தடி இல்லாமல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்மூலமாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்குள் பொங்குதமிழ் தூபி, மாவீரர் தூபி, முள்ளிவாய்க்கால் தூபி என மூன்று நினைவுத்தூபிகள் உள்ளன.
சிங்களத்தின் அடிவருடிபான துணைவேந்தருக்கு பதவிவழங்கிய போது முன்வைக்கப்பட்ட நிபந்தனையின் வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு. இன்று விலைபோகும் ஒருசில தமிழர்களை வைத்தே தமிழன அழிப்பைக் கச்சிதமாகச் செய்யும் சிங்கள அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
பொங்குதமிழின் பிறப்பிடமான யாழ் பல்கலைக்கழகம் தமிழ் உணர்வுள்ள பல தலைமுறைகளை அறுவடை செய்த நாற்றுமேடையாகும். அடுத்த தமிழ்த்தலைமுறைகள் தமிழ் உணர்வாளர்களாகத் துளிர்விடக் கூடாது என்பதில் சிங்களம் மிகவும் கவனாமாகச் செயற்படுகின்றது.
கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக்கட்டமைப்பை தாங்கி நிற்கும் தூண்கள். இந்தத் தூண்களைத் தகர்த்துவிட எதிரி முனைகிறான். இனத்தனித்துவத்தை அழிப்பது அவனது நோக்கம்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் –
வடக்குக் கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்து தனது கலாச்சார எச்சங்களாக மாற்றிவரும் இனவாத சிங்கள அரசு இலங்கைத்தீவில் தமிழர்களின் அடையாளங்களே இருக்கக்கூடாது என்ற வன்மமான சிந்தனையுடன் காய் நகர்த்தி வருகின்றது. தூபிகளையும் நினைவுச்சின்னங்களையும் அழிப்பதால் தமிழரின் விடுதலை வேட்கையையும் தமிழ் உணர்வையும் இல்லாது ஒழித்துவிடலாம் என்று கனவு காணும் சிங்களத்தின் கொட்டத்தை அடக்க மக்கள் புரட்சி வெடிக்கட்டும் பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்.
-தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்-
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –