யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு என்று ஒரு தனித்துவமும் வரலாறும் இருக்கிறது. அதற்காக பல மாணவர்களும் பேராசிரியர்களும் பல தியாகங்களை செய்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஜனநாயக அறிவுத் தளமாக யாழ் பல்கலைக்கழகம் பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது. பொங்கு தமிழ் என்ற உயரிய போராட்டத்தின் வழியாக ஈழ விடுதலைக்கு பலம் சேர்த்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை என்பது பெரும் சோகத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த எட்டாம் திகதி இரவு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக திருட்டுத்தனமாக அழிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வாசலில் சிங்கள அதிரடிப்படையினர் குவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை உள்ளே அனுமதிக்காது நினைவுத் தூபியை ஜேசிபி கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசும் அதன் படைகளும்தான் நினவுத் தூபியை அழித்துள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஸ்ரீலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்புக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று சொல்லியுள்ளார். அத்துடன் நினைவுத் தூபியை அழிக்கும் தீர்மானத்தை எடுத்தது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருக்கிறார். சிங்கள மாணவர்கள் அங்கு கல்வி கற்பதற்காக இந்த முடிவை சற்குணராஜா எடுத்திருப்பதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சொல்ல வைக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்கள் சுயாதீனத் தன்மை கொண்டவை. அப்படியான பல்கலைக்கழகங்களால்தான் நாட்டுக்குரிய சிறந்த பட்டதாரிகளை உருவாக்க முடியும். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சற்குணராஜா தனது அற்ப பதவிக்காக மாபெரும் துரோகத்தைப் புரிந்துள்ளார். உண்மையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களத்திற்கு ஆதரவாக துரோகம் புரிவதைத்தான் தனது பணி என சற்குணராஜா கருதுகிறார் போலிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி என்பது போரில் கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அவர் தம் உறவினர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. அங்கே, மாணவர்கள் கண்ணீர் விட்டு வண ங்கி தமது உள்ளத்தை ஆற்றுப்படுத்துகின்றனர். இது சற்குணராஜாவுக்கும் சிங்கள அரசுக்கும் எந்த வகையில் எதிரானது? அல்லது எந்த வகையில் இன நல்லிணக்கத்திற்கு எதிரானது? இந்த நினைவுத் தூபியை அழிப்பதன் மூலம் போரில் பல இலட்சம் மக்களை தாம் கொன்று இன அழிப்பு செய்தோம் என்பதை சிங்கள அரசு ஒப்புக் கொள்ளுகின்றதா?
போருக்குப் பின்னர், தமிழர்களின் தாயகத்தை கைப்பற்றிய சிங்கள அரசு, பல போர் வெறியை தூண்டும் நினைவுத் தூபிகளை தமிழர்களின் மண்ணில் அமைத்துள்ளது. கிளிநொச்சி டிப்போ சந்தியில், மாபெரும் போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுமாத்தளனின் போர் வெற்றி வெறியுடன் துடிக்கும் சிங்கள இராணுவத்தின் மிகப் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதைப்போல ஆனையிறவிலும் போரில் தமிழ் மக்களை அழித்த வெற்றியை வெளிப்படுத்தும் பாரிய தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழர் நெஞ்சில் முள்ளாய் குத்திக் கொண்டிருக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு மாண்ட போராளிகளின் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றும் உரிமையை இந்த ஆண்டு சிங்கள அரசு தடை செய்தது. நவம்பர் 27 அன்று எமது உறவுகள் கண்ணீர் விட்டு அழுது ஒரு தீபம் ஏற்றுவதால் புதைக்கப்பட்ட புலிகள் எழுந்து வருவார்கள் என்ற அச்சத்தில் மாவீரர் நாளை சிங்கள அரசு தடை செய்தது. இப்போது போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியையும் அழித்துள்ளது இலங்கை அரசு.
தமிழ் மக்களை இலங்கையர்கள் இல்லை என்று வெளிப்படுத்தும் இந்தப் போக்கு, தமிழ் மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பு அரசுக்குள் அடிமை கொள்ளப்பட்டுள்ளார்கள் என்பதையும் அவர்களுக்கு எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதையும் நன்றாக வெளிப்படுத்துகின்றது. இத்தகைய ஜேசிபிக்கள் நாளை கிராமங்களுக்குளற் நுழைந்து ஈழத் தமிழ் மக்களையும் மண்ணோடு மண்ணாக புதைத்து இன அழிப்பு செய்கின்ற இழிநிலைக்கு தள்ளப்பட்டாலும் எந்த ஆச்சரியமும் இல்லை என்பே இங்கே புலனாகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் உயிர்தியாகம் செய்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் அவர்கள் தம் உயிரை ஈந்துள்ளனர். அதைப் போல பல பேராசிரியர்கள் தமது அறிவுழிப் பாதையில் நின்றபடி தேசியப் போராட்டத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புக்களும் அதற்காக சந்தித்த நெருக்கடிகளும் பலவுண்டு. துரைராஜா என்ற மாமனிதரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆளுமை மிக்க துணைவேந்தராக பணியாற்றி தனது பெயரை வரலாறாகப் பதித்துள்ளார்.
அத்தகைய மாமனிதர்களின் மத்தியில், ஒரு மனிதராக கூட இருக்கத் தவறியுள்ளார் சற்குணராஜா. அப்படி இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அழிப்பதற்கு அனுமதித்திருக்க மாட்டார். தனது அற்ப பதவிக்காக ஈழத் தமிழர்களின் இதயங்களை நொருக்கிய சற்குணராஜா தனது பதவிக்காக மாபெரும் துரோகத்தை இழைத்து தன் பெயரை தானே அழித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கு மாத்திரமின்றி, ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்திற்கே துரோகம் இழைத்த சற்குணராஜா உடனடியாக பதவி விலக வேண்டும்.
கடந்த காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்களின் காப்பரணாக விளங்கியது. பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களுக்கு பாதுகாப்பு இருந்தது. முன்னர் இருந்த துணைவேந்தர்கள் மாணவர்களை காக்கும் காவலரணாக செயற்பட்டுள்ளனர். ஆனால் சண்குணராஜாவோ, காட்டிக் கொடுக்கும் வேலையை செய்திருக்கிறார். சற்குணராஜாவை முழுச் சமூகமும் புறக்கணிக்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அவரை பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
அதேபோல இனிமேல் எந்தவொரு சமூக நிகழ்வுகளுக்கும் சற்குணராஜாவை அழைக்காமல் அவரை தனிமைப்படுத்த வேண்டும். இனத்திற்கு எதிரான, நினைவுகொள்ளுகின்ற பண்பாட்டுக்கு எதிரான ஒருவர் எந்த வித்திலும் முன்னூதாரணமற்றவர். அவரை புறக்கணிப்பதே அவருக்கான தண்டனை. தமிழ் சமூகம் வழங்கும் தண்டனைகளை கண்டு பதவிக் கதிரையில் இருக்காமல் சற்குணராஜா பதவி விலகுகின்ற நிலைக்கு அவரை தள்ள வேண்டும்.
அத்துடன் அழிக்கப்பட்ட கற்களை கொண்டு மீண்டும் நினைவுத் தூபி ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பதுடன் வடக்கு கிழக்கு முழுவதும் இதுபோன்ற நினைவுச்சின்னங்களை அமைக்க வேண்டும். பாடசாலைகளிலும் நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் இன அழிப்பின் சின்னங்களை அமைத்து சிங்கள அரசின் இன அழிப்பை இந்த உலகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய போராட்டங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத் தலைவர்கள் பலரும் இந்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித தன்மையற்ற இந்த செயலை மனிதமுள்ள எவரும் கண்டிப்பர். சர்வதேச சமூகம் இதுபோன்ற செயல்களை வேடிக்கை பார்ப்பது வருத்தம் தருகின்றது. சிங்கள அரசின் கொடுமைகளுக்குள் ஈழத் தமிழினம் சிக்கி அழிவதை வேடிக்கை பார்க்காமல் உண்மையான மனிதாபிமானம் கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுகின்ற தேவை அவசியமாகியுள்ளது. 2009இற்குப் பிறகு அப்படி பல அனுபவங்களை தமிழ் மக்கள் கண்ட போதும் அதற்கு எந்தவொரு தீர்வுகளும் முடிவுகளும் காணப்படவில்லை.
ஈழத் தமிழினம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தகர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது. கற்களுக்கும் கட்டிடங்களுக்கும் இந்த நிலை என்றால் இங்குள்ள மனிதர்கள் எத்தகைய ஆபத்தின் மத்தியில் வாழ்கிறார்கள் என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களுக்கான எதனையும் அனுமதிக்காத ஸ்ரீலங்கா அரசுடன் ஈழத் தமிழர்கள் ஒருபோதும் சேர்ந்து வாழ முடியாது. தம்மை தாம் ஆளுகின்ற தமது மகிழ்ச்சியையும் துயரங்களையும் வெளிப்படுத்துகின்ற ஒரு வாழ்வு என்பது வடக்கு கிழக்கு என்ற தமிழர் மண்ணில் தனி ஆட்சியில்தான் சாத்தியம். இதுபோன்ற கொடூரச் செயல்களின் மூலம் சிங்களமும் அதையே உணர்த்துகிறது.
தீபச்செல்வன்