-நக்கீரன்
கோலாலம்பூர், ஜன.12:
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிகை அலங்காரத் தொழில் இன்னும் மீட்சி பெறவில்லை. தொழில் வாய்ப்பு அதிக அளவில் குறைந்து விட்டதால், முடி திருத்தும் நிலைய உரிமையாளர்கள் நடைமுறை பராமரிப்பு செலவுக்குக்கூட அடிக்கடி கைமாற்றுக் கடன் பெறும் அளவிற்கு தொழிலில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்று மலேசிய சிலை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் முனைவர் மதிராசன் தங்கையா தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் எண்பது நாட்கள் வரை முடிதிருத்தும் நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், ஜூன் மாதம் 10-ஆம் நாள் முதல் நாடு முழுவதும் கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. அரசு வகுத்த நெறிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு அம்சங்களுடன் முடிதிருத்தும் நிலையங்கள் திறக்கப்பட்டாலும், முன்பிருந்த வழக்க நிலைக்கு இந்தத் தொழில் இன்னும் திரும்பவில்லை.
நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தால் மூன்று நாற்காலிகளுக்கான வாடிக்கையாளர்களே வருகின்றனர். ஒரு நாற்காலி மட்டும் இருக்கும் கடையில்கூட, அவ்வப்பொழுது வாடிக்கையாளர் இல்லாமல் சம்பந்தப்பட்ட தொழிலாளர் காத்திருக்கும் நிலை தற்பொழுது நிலவுகிறது.
இதனால் போதிய வருமானம் இல்லை; மூன்று மாத காலம் தொழில் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இழப்பை இன்னமும் ஈடுகட்ட முடியவில்லை. தற்பொழுது கிடைக்கிற வருமானம் வாடகை, மின்சார-தண்ணீர்க் கட்டணம், தொழிலாளர் சம்பளம் உள்ளிட்ட நடைமுறைச் செலவிற்கே போதாமல் உள்ளது. இந்த நிலை, ஏதோ ஒரு பகுதியில் மட்டும் என்றில்லை. நாடு முழுவதுமே இப்படிப்பட்ட சூழல்தான் நிலவுகிறதென்று மதிராசன் வருத்தத்துடன் கூறுகிறார்.
முடி திருத்தும் நிலையங்களை முழு நேரமும் திறந்து வைக்கவும் வசதிப்படி தொழில் செய்யவும் அரசு முழு அனுமதி அளித்துள்ள நிலையில், எதனால் இந்தத் தொழிலில் மந்த நிலை நிலவுகிறது என்று கேட்டால், “சிகை அலங்காரம் செய்து கொள்வதில் மலேசிய மக்களிடம் முன்பிருந்த ஆர்வமும் மனநிலையும் இப்போது இல்லை என்கிறார் மதிராசன். முன்பெல்லாம் வாரந்தோறும் வருகிறவர்கள் இப்போழுது இரு வாரங்கள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை என முடி திருத்திக் கொள்ள வருகின்றனர். அதைப்போல, ஒரு மாதத்திற்கு ஒரு முறை வரும் வாடிக்கையாளர்கள் இப்பொழுதெல்லாம் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்கள் கழித்தே வருகின்றனர். முகச் சவரம் மட்டும் செய்துகொள்வதற்காக வரும் வாடிக்கையாளர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது, வருமானம் பாதிக்கப்பட்டு மக்களிடம் பணப் புழக்க்கம் குறைந்து விட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது என்கிறார் மதிராசன்.
இதைவிட இன்னொரு சிக்கல், தொழிலாளர் பற்றாக்குறை என்று குறிப்பிடுகிறார் மலேசிய இந்திய முடிதிருத்தும் தொழிற்சங்க நிருவாக அதிகாரி மு.மதியழகன்.
மலேசியாவில் இருந்து வெளிநாட்டிற்கான பயணமாக இருந்தாலும் வெளிநாட்டில் மலேசியாவிற்கு வருவதாக இருந்தாலும் அதில் அதிகமான கட்டுப்பாடு இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இடைப்பட்ட காலத்தில் அதிகமான தொழிலாளர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பிவிட்டனர். குறிப்பாக தமிழக தொழிலாளர்களை அதிகமாக நம்பி இருக்கும் இந்தத் தொழில் பிரிவினர், தொழிலாளர் பற்றாக்குறையால் தங்களின் நிலையங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாற்றுத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ளலாம் என்று அரசாங்க சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் அதற்கான அமலாக்க முறை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இதனால், தொழிலாளர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள கடை உரிமையாளர்கள் பினாங்கு முதல் ஜோகூர் வரை என நாடு முழுவதிலும் இருந்து அழைத்துப் பேசுவதும் உதவி கேட்பதும் அன்றாட வழக்காகி விட்டது. இதற்கான திர்வுதான் கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை என்று காவல் துறை மன்னாள் அதிகாரியுமான மதியழகன் தெரிவித்தார்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24