நக்கீரன்
தமிழின் பெருமையையும் பெருமையுடைத் தமிழரையும் இரட்டடிப்பு செய்யும் போக்கு காலமெல்லாம் அரங்கேறி வருகிறது. ஆரிய தகவல் ஊடகம் இதை அப்பட்டமாக அரங்கேற்றி வருகிறது. இதில் மிக அண்மைய இருட்டடிப்பு, விவேகானந்தரின் வரலாற்றில் இராநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதியைப் பற்றியது.
திருவள்ளுவரின் பிறப்பை இழிவாக சித்தரித்தல், திருமுறைப் பாடல்கள் பதிக்கப்பெற்ற ஓலைச் சுவடிகளை கரையானுக்கு அதுவும் சிதம்பர ஆலயத்திலேயே இரையாக்கியது, வேலு நாச்சியார் வரலாற்றை மறைத்தது, குமரிக் கடலுக்கு வங்காள விரிகுடா என்று பெயர் சுட்டியது; அதைப் போல மேலைக் கடலை அரபிக் கடல் என்றது; குமரி மலை முகட்டை விவேகானந்தர் பாறை என மாற்றியது என்றெல்லாம் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான இருட்டடிப்புப் பட்டியல் நீளமானது.
சேதுபதி மன்னர் தாயில்லாப் பிள்ளையாக ஆங்கிலேயரின் கண்காணிப்பில் வளர்ந்தவர். இருந்தாலும் தமிழிய மரபு சிதையாமல் வளர்க்கப்பட்ட அவர், தமிழ்-ஆங்கில மொழிகளில் புலமைப் பெற்றதுடன் சைவ நெறியில் உன்னத நிலையை எட்டியிருந்தார். இளைஞர் சேதுபதி சைவ சமயத்தைப் பற்றியும் சிவநெறி குறித்தும் மணிக்கணக்கில் ஆங்கில மொழியில் ஆற்றும் உரையை ஆங்கில ஆதிகாரிகளே வியப்புடன் கேட்டு மகிழ்வார்களாம்.
சேதுபதி வளர்ந்து ஆளாகி, இராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னராக விளங்கிய காலத்தில், இந்திய விடுதலைப் போர் உச்சத்தை எட்டியிருந்தது; தவிர, பாண்டித்துரை தேவருடன் இணைந்து மதுரை நான்காவது தமிழ்ச் சங்கப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நேரம் அது.
அந்தக் காலக்கட்டத்தில்தான் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் நடைபெற்ற உலக சமய பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவும் சமய உரை நிகழ்த்தவும் சேதுபதி மன்னருக்கு அழைப்பு வந்தது.
சேதுபதி மன்னர் அதில் கலந்து கொள்ள விரும்பினாலும் நாட்டுப் பணியும் நெருக்கடி சூழலும் அவரைத் தடுத்து நிறுத்தின. இருந்தாலும், அழைப்பிதழை வீணடிக்க விரும்பாத அவர், இந்தியாவெங்கும் சுற்றி வந்த துறவி விவேகானந்தரை சிக்காக்கோ சமய மாநாட்டிற்கு அனுப்பி வைக்க விரும்பினார்.
அதற்கேற்ப விவேகாந்தரும் அந்த நேரத்தில் மதுரை, இராமநாதபுரப் பகுதிகளில் கால் நடைப் பயணம் மேற்கொண்டிருந்தார். உடனே, விவேகானந்தரை அரண்மனைக்கு அழைத்து, உபசரிப்பு நல்கி, தனக்கு வந்த அழைப்பிதழையும் கப்பல்வழிப் பயணத்திற்கான செலவுத் தொகையையும் கொடுத்து அனுப்பினார்.
இந்த உண்மைச் சம்பவங்களை எல்லாம் இப்போது மறைத்து, சென்னை வாலிபர்கள்தான் விவேகானந்தரை சிக்காக்கோவிற்கு அனுப்பி வைத்ததாக ஒருசாராரும் இல்லையில்லை, அமெரிக்க இந்துசபையுடன் தொடர்புகொண்டிருந்த பார்த்தசாரதி ஐயங்காரும் அவரின் மருமகன் சிங்கபெருமாளும் சேர்ந்துதான் விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர் என்றும் தற்பொழுது புரளித் தகவலை இணைய மற்றும் அச்சு ஊடகங்களில் பரப்பும் கயமைத்தனம் அரங்கேறி வருகிறது.
காரணம், விவேகாந்தரின் பிறந்த நாள் ஜனவரி 12-ஆம் நாள் என்பதுதான்.
பொதுவாக இந்து சமயத்தைப் பற்றியும் இந்து சான்றோர்களைக் குறித்தும் இளப்பமாகவும் அது சாமியாடிகளின் கூட்டம் என்றும் எண்ணி இருந்த ஆங்கிலேயர்களின் மத்தியில் இந்து சமயத்தைப் பற்றி உயர்வான எண்ணம் ஏற்படும் வண்ணம் விவேகானந்தர் ஆற்றிய உரை மிடுக்காக அமைந்தது. குறிப்பாக, மேலை நாட்டு சமய மேதாவிகளின் மமதை எண்ணத்தை அடித்து நொறுக்கிய ஆன்மிக மேதை விவேகானந்தர்.
மேலை நாடுகளிலும் கீழை தேசங்களிலும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது, இந்த மலேசியத் திருநாட்டிற்கும் வருகை மேற்கொண்டவர் விவேகானந்தர்.
பெற்ற தாயிடம் எந்தக் குழந்தை ஞானம் பெறுகிறதோ, பாடம் படிக்கிறதோ, அறிவு பெறுகிறதோ அந்தக் குழந்தை எதிர் காலத்தில் புகழின் உச்சத்தைத் தொடும்.
கரிகால சோழ மன்னன், மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, நேதாஜி சந்திர போஸ், அண்ணியின் அரவணைப்பில் வளர்ந்த வள்ளலார் சுவாமிகள், சிவண்டியார் நந்தன் போன்றோரெல்லாம் வீட்டையே குருகுலமாகக் கொண்டவர்கள். நரேந்திர தத்தாவாகப் பிறந்த விவேகானந்தரும் அவ்வாறுதான்;
இளைய சமுதாயத்தின் எழுச்சிதான் இந்த மானிட சமுதாயத்தை மாற்றி அமைக்கும் என்று முழங்கிய அந்த ஆன்மிக மேதை, ஆலயங்களை மட்டும் சுற்றி வருவதால் இந்த சமுதாயம் மாற்றம் பெறாது; கோடிக் கணக்கான மக்களை, எதிர்காலத்தில் காக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருப்பதால், தொழிற்சாலைகள் பக்கம் தங்களின் கவனத்தை இளைஞர்கள் திருப்ப வேண்டும் என்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே குரலெழுப்பிய அவர், இளைஞர்கள் தேனீக்களைப்போல செயல்பட்டு பொருளீட்ட வேண்டும் என்றார்.
1863-ம் ஆண்டு சனவரித் திங்களில் பிறந்த விவேகானந்தர், மாந்தநேயம் கொண்டவராகவும் சிறந்த சிந்தனையாளராகவும் பரிணமித்தார். இந்து சமயத்தவரை ஆன்ம பலம் கொண்டவர்களாக மாற்றவும் மக்கள் தொண்டே இறைத்தொண்டு என்பதால் அனைவரும் தொண்டறத்தில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அதிகமாக பாடாற்றியவர் விவேகானந்தர்.
விவேகானந்தரின் வீட்டுக்கருகில் வசித்து வந்த சுரேந்திரநாத் மித்திரர் என்பவர் தனது வீட்டு விழாவிற்கு தவத்திரு இராமகிருஷ்ண பரமஹம்சரை அழைத்தபோது, பக்திப் பாடல்கள் பாடும்படி நரேந்திரனை கேட்டுக் கொண்டார். நரேந்திரனின்(விவேகானதரின்) பக்தி பாடலை மெய்மறந்து கேட்டார் பரமஹம்சர். இதுதான் பரமஹம்சருக்கும் விவேகானந்தருக்கும் இடையே ஏற்பட்ட முதல் சந்திப்பாகும். விவேகானந்தரின் ஆன்மிகப் பயணத்தின் தொடக்கப் புள்ளியும் இதுதான்.
நாற்பது ஆண்டுகள்கூட இந்த மண்ணில் வாழாத வீரத் துறவியான விவேகானந்தர் பெற்ற புகழ் உலகளாவியது.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24