சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இன்று (2021.01.13) யாழ் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக கருத்தோவியக் கவனயீர்ப்பு ஒன்றினை நடாத்தியிருந்தனர்.
இது தொடர்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. மு.கோமகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இந்த தைப்பொங்கலுக்கேனும் அரசியல் கைதிகளான எமது உறவுகள் சிறை மீண்டு வருவார்கள் என நம்பியிருந்த குடும்ப உறவுகளின் கனவுகள் பொய்த்துப் போனதையிட்டு எம்மால் இவ் கருத்தோவியக் கண்காட்சி நடாத்த வேண்டியதொரு தேவை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் 64 வயதான கனகசபை தேவதாசன் என்ற வயோதிப தமிழ் அரசியல் கைதி ஏழு நாட்களாக தொடர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றார். கொரோனா தொற்றுக்குள்ளாகிய இவர் தொடர்ந்து இன்னும் சில நாட்கள் உணவு தவிர்ப்பை நீடிப்பாரானால் கவலைக்குரிய விளைவுகள் ஏற்படலாம்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள்ஆட்சிப்பீடம் ஏறிய நாள்முதல் பல அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி வருகின்றார். கடந்தவாரம் கூட ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதி ராஜ ராம விகாரை விகாராதிபதி ஊவத்தேனை சுமணதேரர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி ஜனாதிபதி அவரை விடுதலை செய்துள்ளார். ஆனாலும்கூட தமிழ் அரசியல் கைதியான இந்துமதகுரு ரகுபதி சர்மா அவர்கள் கடந்த ஆண்டுகளாக சிறையில் வாடுவதை ஜனாதிபதி மறந்துவிட்டாரா என்கிற விடயம் கவலையளிக்கிறது.
ஆகவே ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே நீதி என்று அடிக்கடி கூறும் அரசாங்கம் பன்நெடுங்காலமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி மீதும் கருணை காட்டவேண்டும்- என அவர் மேலும் தெரிவித்தார்.