வவுனியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் மேலும் 16 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நேற்று PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, குறித்த பரிசோதனையின் முடிவுகள் இன்று (13) காலை வெளியான நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய வவுனியாவின் நிலை.
வவுனியா நகரப்பகுதி மற்றும் குருமண்காடு பகுதிகளில் உள்ள வங்கிகள், பலசரக்குக் கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள், தனியார் நிறுவனங்கள், திணைக்களங்கள், பல்தேசிய அங்காடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, கந்தசாமி கோயில் வீதி, பஜார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி ஆகியன நகரில் இருந்து உட்புகாதவாறும் வெளியில் இருந்து நகருக்குள் உட்புகாதவாறும் பூட்டப்பட்டுள்ளன.
தீவிர தேவையெனின் குறித்த பகுதியில் உள்ள காவல் துறையினரின் அனுமதியைப் பெற்று உட்செல்ல முடியும்.
எரிபொருள் நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.
அதேபோல புறநகர் பகுதிகளில் அதாவது மன்னார் வீதி காமினி மகாவித்தியாலயப் பகுதி, பூந்தோட்டம் சந்தி, கோவில்குளம் சந்தி, பட்டானிச்சூர், பண்டாரிக்குளம், குட் செட் வீதி, தேக்கவத்தை போன்ற பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தைப்பொங்களுக்கான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.