கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 10 பேர் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த 5 ஆம் திகதி அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் 82 ஆவது பிறந்ததின கொண்டாட்ட நிகழ்வுகள் நீர் வழங்கல் அமைச்சில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ் எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப்ஹக்கீமுடன் தொடர்புடையவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 17 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்புடையவர்களுள் ஒருவராக குறிப்பிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தமக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை பி சி ஆர் பரிசோதனையூடாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியேல்லவிடம் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் தொடர்புடையவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப்ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் தொடர்புடைய 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.