நாட்டின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் அடுத்த 6 மாதங்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை கூறியுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், தமது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும் கொரோனா தொற்றை வெற்றி கொள்வதற்கு பொதுமக்களின் அர்ப்பணிப்பு அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் முப்படையினர் உட்பட முழு நாட்டு மக்களும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.