இலங்கையின் வடக்கு கிழக்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மைப் பணியாகக் கருதிச் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் தைமாதம் பாடசாலை ஆரம்பமாகும்போது வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழுகின்ற மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வருகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாடு கருதித் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுத்து வருகின்ற இத்திட்டத்துக்கு கனடாவின் ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பு இந்த ஆண்டு ஆறு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. மரநடுகை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒளிப்படங்கள் மற்றும் மேற்கோள்கள் அட்டையில் அச்சிடப்பட்ட அப்பியாசப் புத்தகங்கள் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடக்க நிகழ்ச்சி அண்மையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.