யாழ்ப்பாண பல்கலைக் கழகம் நிறுவப்பட்ட காலம் தொடக்கம் அது உலகத் தமிழர்களின் அடையாளச் சின்னமாக விளங்குகின்றது. ஒரு உயர்ந்த சிகரத்தைப் போன்று அதனை நாம் கற்பனை செய்து பார்த்தால் அந்த சிகரத்தின் உச்சியில் நின்று உலகத்தைப் பார்ப்பது போன்றும் நாம் உணர்ந்து கொள்ளலாம். அதற்கு மேலாக கல்விச் சமூகக் கடலில் மிதந்து வரும் படகுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஒரு கலங்கரை விளக்கு போன்றது என்றும் நாம் கற்பனை செய்து திருப்தியடையலாம். இவையெல்லாம் யதார்த்த்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் நம்பிக்கைகளோடு, பிணைந்த உண்மைகள் என்றும் கூறலாம்.
இவ்வாறன கம்பீரமான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டு திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தற்போது எல்லாப் பக்கங்களிலும் உதையும் அடியும் வாங்கும் ஒரு பந்தை போன்று சுழன்று கொண்டிருக்கின்றது. அறிவியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தரரீதியாகவும் பல வெற்றிகளை ஈட்டிய எமது பல்கலைக் கழகம் தொடர்ச்சியாக இவ்வாறு உதையும் அடியும் வாங்குவதற்குக் காரணம், அது ஒரு தமிழர் மண்ணுக்குரிய கல்விச் சாலை விளங்குவதே ஆகும்.
தமிழ் மண்ணில் நிமிர்ந்து நிற்கும் இந்த கல்விச்சாலையை எமக்கு ஆலமரமாகவும் நாம் கொள்ளலாம். இலங்கையின் எந்தப் பாகத்திலிருந்து இருந்து வந்து இங்கு கற்பதன் மூலம், பலதுறைகள் சார்ந்த வெற்றியாளர்களாகவும் நிபுணர்களாவும் வெளியே பூமியின் மேற்பரப்பரப்பெங்கும் தகைசாரந்தவர்களாக நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் இலட்சக் கணக்கான எம்மவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமது கலங்கரை விளக்கின் மீதே பார்வையைச் செலுத்தியவர்களாக உள்ளார்கள்.
யாழ்ப்பாண பல்கலைக் கழகம் எத்தனையோ பட்டமளிப்பு விழாக்களைக் கண்டது. ஆயிரக்கணக்கான கலை இலக்கிய நாடக அரங்குகளைக் கண்டது அங்கிருக்கும கைலாசபதி அரங்கம். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பல மண்டபங்களும் விசாலமான விளையாட்டு மைதானமும் பல வெற்றிவிழாக்களையும், அரசறிவியல் கருத்தரங்குகளையும் கண்டவை. அறிவின் சுவாலைகளும் மொழி உணர்வுப் பிளம்புகளும் அங்கு ஔிர்ந்த வண்ணமே காணப்படும் .அங்குள்ள அனைத்து பீடங்களின் கல்வித் தரம் என்பது மிகவும் உயர்ந்தது.
ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை அடிப்பதும் உதைப்பதுமாக ஆட்சி பீடம் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றது. தெருவில் முட்டாய் விற்கும் சிறுவர்களைப் போல அந்த பல்கலைக் கழக மாணவர்கள் ஆயுதப்படையினராலும், அரச அதிகார பீடத்தில் உள்ளவர்களாலும், சில வேளைகளில் அங்குள்ள தன்னலம் கருதிய பேராசிரியர்களினாலும் நடத்தப்படுகின்றார்கள். அங்கிருக்கும் பரமேஸ்வரன் ஆலயத்தை ஒரு திருக்கோவில் என்று அவர்கள் பார்ப்பதில்லை. அங்கிருக்கும் சிலைகளை கற்களாக மட்டுமே பார்க்கின்றார்கள். இதைப்போன்றே அங்குள்ள சில நினைவுத் தூபிகளையும் அவர்கள் பார்த்திருக்கவேண்டும்.
இவ்வாறான பார்வைகளின் வெளிப்பாடே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மிகவும் மூர்க்கத் தனமான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீதான தகர்ப்பு நடவடிக்கை. இரவோடிரவாக அந்த உயிருள்ள கற்களை கதறக் கதற இடித்து தகர்த்தார்கள் அரசின் ஏவலாளர்களான பல்கலைக் கழக நிர்வாகிகள். சில நிமிடங்களில் பல்கலைக் கழகத்திற்கு வெளியே பூட்டப்பட்டிருநத இருப்புக் கதவுகளுக்கு அப்பால் ஆக்ரோசத்துடன் கூடினார்கள், பல்கலைக் கழகத்தின் மாணவச் சமூகமும், அரசியல் செயற்பாட்டாளர்களும், பொது மக்களும்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் என்னும் சிவந்த மண்ணில் இரத்தம் தோய்ந்த சதைகளாய் மடிந்த நூற்றுக்கணக்கான பல்கலைக் கழக மாணவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் அநியாய இழப்பின் அடையாளமாக விளங்கிய அந்த நினைவுச் சின்னத்திற்கு ‘அஞ்சலி செலுத்துவது போல வெளியே ஆவேசக் குரல்களும் “ஐயோ” “ஐயோ” என்ற அழுகை ஒலியும் வானப் பிளந்து சென்று தேவலோகம் வாழ் தெய்வங்களுக்கு கொடிய செய்தியைக் கொண்டு சென்றன.
அங்கு கூடி நின்ற மாணவச் செல்வங்கள் வீரத்தாய்மார் பெற்ற பிள்ளைகள் போன்று குமுறினார்கள். மகாத்மாக்கள் போன்று மன்றாடினார்கள். ‘அந்நியன்’ படத்தின் விக்ரம் போன்று மாறி மாறி கோபத்தையும் அவமானத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்தினார்கள். உணவை மறுத்து நோன்பிருந்து அந்த சோகங்களின் அடையாளக் குறிக்காக அஞ்சலி செலுத்தினார்கள். உலகெங்கும் உள்ள தமிழர் நெஞ்சங்கள் நொந்துபோனவையாக நொடிந்து போயிருக்கும் அந்த மண்ணில் நின்றவர்கள் தொடர்ந்து போராடினார்கள்.
எப்படிச் சாத்தியமானதோ? நாம் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு ‘இறங்கி; வந்த துணைவேந்தர் மாணவர்களோடு சேர்ந்து நின்று அவர்களின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அஞ்சலி செலுத்த வேண்டிய நினைவுத் தூபியை அழித்து நொருக்கிய அவரது கையாலேயே மீண்டும் அடிக்கல்லை நாட்டினார். திங்கட்கிழமை நாள் இவ்வாறு சற்று தெளிந்த நிலையில் இருளைத் தழுவியது.
ஆனால் நாளை என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு நாமும் உறங்கச் செல்வோம். நாளை ஒரு விடியல் இருக்கின்றதே என்ற நம்பிக்கைகள் எம்மை வரவேற்கட்டும். ஓரு நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது! 11-01-2021 திங்கட்கிழமை