மலேசிய மடல்
– நக்கீரன்
கோலாலம்பூர், ஜன.14:
மலேசியாவிற்கும் அவசரகாலச் சட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பும் பரிச்சயமும் உண்டு. பொதுவுடை(கம்யூனிச) இயக்கத்தையும் அதன் நடவடிக்கையையும் முறியடிப்பதற்காக பிரிட்டீஷ் மலாயாவில் 1948-இல் அவசகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டதுதான் நாடு எதிர்கொண்ட முதல் அவசரகாலச் சட்ட அமலாக்கம்.
மலாயா, மலேசியாவாக பரிமாணம் அடைந்தபின், பல்வேறு காலகட்டங்களில் இந்த அவசரகால சட்டத்தை எதிர்கொண்டுவந்த நிலையில் தற்பொழுது 2021-ஆம் ஆண்டு மலர்ந்துள்ள இந்த வேளையில் தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் சார்பில் இப்போது அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
இருந்தாலும் இராணுவத்தின் ஆதிக்கமோ, காவல்துறையின் மேலாதிக்கமோ என எதுவும் இருக்காது என்றும் சட்டத்தின் ஆட்சியும் நீதி பரிபாலன கட்டமைப்பும் எவ்வித இடையூறும் இன்றி வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் நாடாளுமன்றமும் மாநிலங்களின் சட்டமன்றமும் முடக்கப்பட்டிருக்கும் என்று அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்றைய முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் தத்தம் கருத்தை மக்கள் ஓசை இதழுக்காகப் பதிவு செய்துள்ளனர்.
கங்காதரன் – வழக்கறிஞர்
ஒன்பதாவது முறையாக தற்பொழுது பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தால், நாட்டில் நடைபெற்றுவரும் சட்டத்தின் ஆட்சிக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. அரசியல் சாசனத்தில் சட்டப் பிரிவு 1.0-இன் படி பிரதமரின் ஆலோசனையை ஏற்று மாமன்னர் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார். இந்த சிறப்பு சட்டத்தை அறிவிக்க அவருக்கு மட்டுமே அதிகாரமும் சிறப்புரிமையும் சட்டத்தின்படி உள்ளது.
தற்போதைய சூழலில் கொரோனா நச்சுயிரியின் தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்காக இந்த அவசர காலச் சட்டம் என்று அறிவிக்கப் பட்டாலும் இதில் பொதிந்துள்ள அரசியல் கூறு, பொதுமக்களின் எண்ணம், எதிர்பார்ப்பு என்பதெல்லாம் போக போக தெரியவரும் என்று வழக்கறிஞரும் சமுதாயப் போராளியுமான கங்காதரன் கருத்து தெரிவித்துள்ளார்.
முத்தரசன் – செல்லியல்(இணைய இதழ்) நிருவாக ஆசிரியர் & அரசியல் விமர்சகர்
கோவிட்-19இன் தாக்கத்தை மலேசியா மட்டுமல்ல; உலக நாடுகள் அனைத்துமே எதிர்கொண்டுள்ளன. ஆனால், எந்த நாடும் இதற்காக அவசரகால சட்டத்தைப் பிரகடனப்படுத்தவில்லை. கொரோனா பரவல் கடந்த ஆண்டில் ஒரு கட்டத்தில் முழு கட்டுப்பாட்டிற்கு வந்தபோது, அதைத் தற்காக்க அரசு தவறிவிட்டது.
பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவே அவசரகால சட்டத்தைப் பற்றி சிந்திக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரு கட்டுக்குள் வந்துள்ளது. அதைவிட, அசோக சாம்ராஜியமும் மௌரியப் பேரசும் ஒரு காலத்தில் முரசு கொட்டிய பாடலிபுத்திரம் நகரை(பாட்னா) தலைநகராகக் கொண்ட பீகார் மாநிலத்தில் பொதுத் தேர்தலும அண்மையில் நடத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் அந்த நாடு அவசரகால சட்டத்தைப் பற்றி சிந்திக்கவில்லை.
நம் அண்டை நாடான சிங்கப்பூர்கூட, இந்தக் கொரோனா பருவத்தில் பொதுத் தேர்தலையே நடத்தி முடித்துவிட்டது. அந்த நாடும் அவசரகால சட்டத்தைப் பற்றி கருதவில்லை.
கொரோனா பரவலை மட்டுப்படுத்தவும் கட்டுக்குள் கொண்டுவரவும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையே போதுமானது. மலேசியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் முடக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நாட்டு அரசியலை உற்று நோக்கி வருபவர்களுக்கு நன்கு தெரியும். இது, அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று வழக்கறிஞருமான முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ச.த. அண்ணாமலை, தலைவர்-திராவிடர் கழகம்
மககளின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அவசரகாலச் சட்டம் நாட்டில் அறிவிக்கப்பட்டாலும், சபா மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர்தான் தீபகற்ப மலேசியாவில் கோவிட்-19 இன் தாக்கம் இந்த அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. சபா மாநிலத் தேர்தல், தேவையின்றி தலைவர்களே உருவாக்கியது. எது எவ்வாறாயினும் அவசர காலச் சட்டம் மாமன்னரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் மதிப்பளிக்கத்தான் வேண்டும். ஆனாலும், இந்த நிலை நீடிப்பது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல என்றார்.
மோகன்ஷான், தலைவர்-இந்து சங்கம்
மாமன்னரின் அறிவிப்புக்கு மாற்று ஏது? நாட்டு மக்களையும் மக்களின் சுகாதார அம்சத்தையும் கருத்தில் கொண்டு நாட்டில் அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதை அனைவரும் ஏற்று, பின்பற்ற வேண்டும். அதேவேளை, சமய வழிபாட்டிற்கோ ஆன்மிக நடவடிக்கைக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை. மலேசிய இந்துக்கள் அனைவரும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்கு மதிப்பளித்து தங்களின் இறைக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சுப. நாராயணசாமி, நிருவாகச் செயலாளர்-நேதாஜி மையம்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை என்பதே பாதி அவசரகால சட்டம் போன்றது. இப்படிப்பட்ட நிலையில், முதல் நாள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை அறிவித்துவிட்டு அடுத்த 17 மணி நேரத்தில் அவசரகால சட்டத்தை தேசியக் கூட்டணி முன்னெடுத்ததில் நிச்சயம் அரசியல் தன்மை உள்ளது.
நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் முடக்குவதற்காக மட்டும் அவசரகால சட்டம் என்றால், இதில் மக்கள், குறிப்பாக வாக்காளர்கள் அடுத்துவரும் பொதுத் தேர்தலில் முடிவெடுப்பார்கள் என்றார்.
வே.விவேகானந்தன், மூத்த பத்திரிகையாளர்.
கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக நாட்டில் அவசரகால சட்டத்தை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது இல்லாமலேயே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் அதன் அமலாக்கத்தையும் துணைகொண்டே இந்தக் ஆட்கொல்லி கிருமியின் பரவலின் சங்கலித் தொடர்பை அறுக்க முடியும். உண்மை நிலை இப்படி இருக்கும்பொழுது, நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் முடக்கத்தை மட்டும் இலக்காகக் கொண்டு இப்படி அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால், தற்போதைய தேசியக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் எதிர்கொண்டுள்ள பின்னடைவு, சிக்கலின் விளைவாகத்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக பொதுமக்களிடையே பரவலாக கருத்து நிலவுகிறது.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24