பொங்கலுக்கு முன்தினம்,
‘கூவடா! தம்பி கூவு!
குரோனாவை விரட்டி விட்டேன் என்று”,
கரும்பை கடித்துக் குதப்பும்
இளங்கன்றை நோக்கிக் கூறுகிறாள்,
அந்த குலவிளக்கு!
கொழுநனோ….
உடைத்தெடுத்த தேங்காயின் வெண்மை
எப்படி ஒட்டிற்று…!
என் பைங்கிளியின் பல் வரிசையில் என
காளையவன் அவள் முகத்தை
வியந்து நோக்க…
கட்டாணி முத்தழகி அருகில் வந்தாள்
காதருகே கிசுகிசுத்து அத்தான் என்றாள்,
மோதி வந்த தென்றலிலே சரிந்தது மாராப்பு,
மாதுளை உதடுகளால் தந்திட்டாள் முத்தமழை!
விடிந்தது இரவு…
கங்குலிலே துயில் நீங்கி
கங்கையில் நீராடி
மங்கையவள் பொன்மேனி
மணக்கோலம் தாங்கி வர
மார்பகத்தில் தாலி கொஞ்ச
மான்விழியாள் மணிக்கரத்தால்
மண்மகளின் மேனியிலே
வெண்ணிறத்தில் கோலமிட
செந்நிற கதிரவனும்
சிரித்த முகம் காட்டி நின்றான்!
பொங்கற் புதுநாள்; தமிழர் திருநாள்!
எங்ஙனமோ ஓர் விழாக்கோலம்!
நாடெங்கும் நேற்றுவரை வந்த சங்கடம்
ஓய்வு எடுத்துக் கொள்கிறது!
எங்கிருந்தோ ஓர் மகிழ்ச்சி!
இல்லம் புகுந்து இதயம் புகுந்து,
தமிழரைப் பொலிவுள்ள,
பேசும் பொற்சித்திரமாக்கி விடுகிறது!
புத்தாடை! பாற்பொங்கல்! புன்னகை!
மழலை! கொஞ்சும் மொழி! கனிவு!
மகிழ்ச்சி! தாய்மையின் அழகொளி!
குடும்பப் பாசம்! விழாக்கோலம்!
அட்டியின்றி அரும்பும் மலர்களின்
பட்டியல் கூறின் விரியும்!
வறுமை ஒழிந்து விடுவதில்லை,
அன்று தலைகாட்ட அஞ்சுகிறது!
விசாரத்திலிருந்தும் மக்கள் விடுபடுவதில்லை!
அன்று ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள்!
உருமாறும் குரோனோக்கள்
உருக்குலைந்து சாம்பலாக…
சிறுபிறையின் நுதலுடையாள்,
செங்கரத்தால் தீ மூட்டி
நெருப்பு சுவாலையிலே
தீயவற்றை பொசுக்கிவிட்டு…
மண்ணில் நெல் விளைத்த
மாந்தர்தம் உழைப்பதனை
பொங்கலோ பொங்கலென்று…
பூரித்துப் பாடுகையில்…!
மஞ்சள் இலை செவ்விளநீர்
மணம் வீசும் மலர் கொத்து
மா பலா வாழையுடன்
கற்கண்டு கரும்பு கருணை நிறை பசும்பால்,
புதுப்பானை ;புத்தரிசி
புதுப்பயறு; புதுவெல்லம்
புத்தாடை அணிந்த
பூவிழியால் புன்னகை
எல்லாமே புதுசு இங்கே!
எங்களில் பலருக்குப்
பொங்கலின் தத்துவம்
புரியாமல் போனதேனோ!
பழமையை விரட்டி விடு!
புதுமையை சேர்த்துவிடு!
புதிய சிந்தனைக்குப்
புதுப் பாதை அமைத்து விடும்
பொங்கல்விழா இது!
புதுமையின் பிறப்பிடம்!
புதுடெல்லியில் கூடிய
உழைப்பவன் உழுபவன்
சிந்திடும் வியர்வையின்
முளைக்கின்ற பயிர் இது! முற்றிய கதிர் இது!
விளைநிலத்தில் களை அகற்றிக் காத்திடும் உழவரிவர்,
கவலைகள் அகலட்டும்; கடுந்துயர் நீங்கட்டும்!
வேளாண் சட்டங்கள் விதி வழி மாறட்டும்!
கதிரவன் ஒளி பட்டு காரிருள் மறையட்டும்!
அன்பும் அறனும் எங்கும் பொங்குக!
கல்வியின் பயன் பெற கற்றவர் பொங்குக!
சூதும் வாதும் சூழ்ச்சியும் அழியட்டும்!
ஒற்றுமை பொங்கி ஓருருக் கொண்டு,
ஒன்றே குலமென ஓங்குக பொங்கல்!,
நன்றே நாமினி நன்மைகள் பேசி
நாட்டு நலனில் நாட்டங் கொண்டு
வாடிய பயிருக்கு வான்மழை போன்று
பாடிடும் பொங்கலில் பகமைகள் விலகட்டும்!
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை
பல்கலைக்கழக முன்றலில் மீண்டும்
எழுப்பி நிற்கப் பொங்குக பொங்கல்!
தேசமைந்தன் சிந்திடும் வியர்வையும்
செந்நிற இரத்தத் துளிகளின் மண்ணையும்,
சிவசிவ என்றே நெற்றியில் பூசு!
பாசம் நேசம் பற்றுக்கொண்டு
பசியும் பிணியும் பறந்திடச் செய்து
பார் சிறக்க பொங்குக பொங்கல்!
வெள்ளி விழாவினை காணப்போகும்
‘உதயன்’ ஏட்டின் எல்லாப்பக்கமும்
இனிய தமிழே என்றும் பொங்குக!
– வீணை மைந்தன்