நக்கீரன்
ஊரில் உள்ள சின்னத்தம்பிக்கோ பெரியதம்பிக்கோ பேய் பிடித்தால் பூசாரி வேலனைக் கொண்டு வேப்பிலை அடித்துப் பேயை ஓட்டலாம். ஆனால் பூசாரி வேலனுக்கே பேய் பிடித்தால் யாரிடம் போவது?
நாட்டை ஆளும் தலைவரே கொலை செய்து விடுவேன் எனக் காட்டமாகப் பேசினால் குடிமக்கள் யாரிடம் போய் முறையிடுவது?
“பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது பித்திகல சந்தியில் (Piththala Handhiya or Brass Junction) வைத்து தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி (01 டிசெம்பர், 2006) , புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘வேலை’யைத் தொடங்கியதாகவும் இறுதியில் பிரபாகரனைச் சுட்டுத்தள்ளி நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து பிணமாக அவரது கதையை முடித்து வைத்தேன்” என சனாதிபதி கோட்டாபய இரசபக்ச கோபாவேசமாகப் பேசியிருக்கிறார்.
பேசிய காலம் இந்த மாதம் 9 ஆம் நாள் (சனிக்கிழமை காலை). இடம் அம்பாறை, உகுண பிரதேசத்திலுள்ள லாத்துகல கிராமம். பொருள் “கிராமத்துடன் உரையாடல்.” இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போதுதான் வி.புலிகளின் தாக்குதல் சம்பவத்தைக் கோட்டாபய இராசபக்ச குறிப்பிட்டார். இந்தத் தாக்குதலில் தற்கொலைக் குண்டுதாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். 17 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
கோட்டாபய மேலும் பேசும் போது தான் எதற்கும் தயாரானவர் என்றும், அதே போல் (மற்றவர்களையும்) அந்த நிலைக்கு கொண்டுவர தன்னால் (இப்போதும்) முடியும் என்றார்.
“எதற்கும் தயாராக இருக்கும் ஒரு கதாபாத்திரம் நான். போரில் செய்து காட்டியது போல தன்னால் அரசியல்வாதிகளுக்கும் செய்துகாட்ட முடியும்” என்பதுதான் அவரது பேச்சின் கருப்பொருள்.
2009 ஆம் ஆண்டு மே 18 அன்று இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் நடந்ததும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடல் அப்பகுதியில் கிடைத்ததாக இலங்கை அரசு தெரிவித்தது நினைவு கூரத்தக்கது.
அது சரி. அந்த “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சி ஒரு கிராமத்தில் நடந்தது. அங்கு வி.புலிகளில் தலைவர் பிரபாகரன் பற்றிப் பேச வேண்டிய முகாந்திரம் என்ன? அதுவும் கடும் கோபத்தோடு பேச வேண்டிய அவசியம் என்ன?
ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) ஓர் இளம் இலங்கை அரசியல்வாதி. ஒக்தோபர் 28, 1978 இல் பிறந்தவர். இவர் இலங்கைக் குடியரசின், 7 ஆவது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர். 2014 ஆம் ஆண்டில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார். மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரானார். 2015 சனவரி 14 ஆம் நாள் ஊவா மாகாண சபையில் ஐதேக தனது பெரும்பான்மையை நிரூபித்ததை அடுத்து இவர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஆளுநர் நந்தா மத்தியூவினால் நியமிக்கப்பட்டார். மீண்டும் நாடாளுமன்றம் சென்ற அவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொலைத்தொடர்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சனாதிபதி கோட்டாபய இராசபக்ச, ஹரின் பெர்னாண்டோ அவர்களுக்கு எதிராக நெற்றிக் கண்ணைத் திறந்ததற்குக் காரணம் ஹரின் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு. அவர் கோட்டாபய இராசபக்சாவின் பெயரைக் குறிப்பிடும் போது நந்தசேன கோட்டாபய இராசபக்சா என்று விளித்துப் பேசிவிட்டாராம். அதாவது கோட்டாபய இராசபக்ச அவர்களின் முழுப் பெயரைக் குறிப்பிட்டு விட்டாராம்.
உண்மையில் விக்கிபீடியா போன்ற ஊடகங்கள் கோட்டாபய இராசபக்ச அவர்களின் பெயரை நந்தசேன கோட்டாபய இராசபக்ச (Nandasena Gotabaya Rajapaksa, சிங்களம்: නන්දසේන ගෝඨාභය රාජපක්ෂ) என்றுதான் குறிப்பிடுகின்றன. சில ஊடகங்களும் அவரது முழுப்பெயரைக் குறிப்பிடுகின்றன. நாடாளுமன்றத்தில் பேசிய நா.உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் சனாதிபதியின் முழுப்பெயரையும் குறிப்பிட்டார்.
அப்படியென்றால் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் கோட்டாபய இராசபக்சவின் முழுப் பெயரை குறிப்பிட்டுப் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? அவருக்குக் கொலைப்பயமுறுத்தல் விடுவதற்கு என்ன காரணம்?
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்துக்கு உள்ளே பேசுவதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. நீதிமன்றங்கள் கூடக் கேட்க முடியாது. அது அந்த உறுப்பினரின் நாடாளுமன்றச் சிறப்புரிமை(parliamentary privilege) ஆகும். இருந்தும் ஹரின் பெர்னாண்டோ பொலீஸ் மா அதிபருக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளதால் தனக்குப் போதிய பாதுகாப்பினை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை நாமல் இராசபக்ச ஆதரித்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு சரியாக 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தன்னைச் சனாதிபதி அச்சுறுத்தியதைச் சுட்டிக் காட்டிய ஹரின் பெர்னாண்டோ “ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த 2.8 மில்லியன் வாக்காளர்கள் சார்பாக சுதந்திரமாக கருத்து வெளியிடுவதற்கான தனது உரிமையை பாதுகாக்குமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சனாதிபதி கோட்டாபய இராசபக்சவினால் “அவர் அவரது கடமைகளை சரியாகத் தொடர்ந்து சரிவர நிறைவேற்றாத பட்சத்தில் எனது உயிருக்கு என்ன ஆபத்து இருந்தாலும் அவர் விரும்பாவிட்டாலும் உண்மையைத் தொடர்ந்து சொல்வதன் மூலம் எனது கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவேன். எனவே, இந்த விடயத்தை உங்கள் அவசர கவனத்திற்கு நான் கொண்டு வருகின்றேன். பாதுகாப்புப் படைகளின் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான சனாதிபதி கோட்டாபய இராசபக்ச, முன்வைக்கும் அச்சுறுத்தலின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர் எனக்கு தீங்கு விளைவிக்கும் ஆற்றல் இருப்பதாகக் குறிப்பிடும்போது அவரை மேலும் ஐயப்பட எனக்கு எந்தக் காரணமும் இல்லை. ஆனால் முதல் பெயரை குறிப்பிடுவதைக் கேட்டு ஜனாதிபதி குழப்பமடைவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” எனத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீது எந்த விதமான மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி அதனைத் தம்மீதான தாக்குதலாக கருதுவார்கள் என அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய மக்கள் சக்தி வேறு அரசியல் சக்திகளைப் போன்றது அல்ல, ஐக்கியமாகவும் இணைந்தும் சகோதரத்துவமாகச் செயற்படும் அரசியல் கட்சி. ஹரின் பெர்னாண்டோ தனது உரிமையைப் பயன்படுத்தி, அவரது கருத்தை முன்வைத்தார். மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அவர் இந்தக் கருத்தினை முன்வைத்தார். நாட்டின் குடிமகனாக முன்வைத்த கருத்து. அவரது இந்தக் கருத்துக்கு அச்சுறுத்தல்கள், தடைகள், எதிர்ப்புகள், ஆத்திரமூட்டும் செயல்கள் நடக்குமாயின் அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.”
“மக்கள் பிரதிநிதிகளினது மாத்திரமல்ல மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் போராடும். அந்த உரிமையை பாதுகாக்க பற்றுறிதியுடன் செயற்படுவேன்.
“இந்த சந்தர்ப்பத்தில் ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்புக்காக கட்சி மற்றும் சக்தியாக அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த இணைந்து செயற்படுவோம். அவர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டால், அதனை எம்மீதான தனிப்பட்ட தாக்குதலாகவே கருதுவோம். அவர் முற்போக்கான தற்போதைய தலைமுறையின் தலைவர், எதிர்காலத் தலைவர். அவருக்கு ஏதோ ஒரு வகையில் சேதம் ஏற்படுமாயின் அதற்குத் தற்போதைய சனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும். இதனால், ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மனிதத்துவத்தின் பேரில் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்” என கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் போர்க் குற்றச்சாட்டுச்சாட்டுகள் இடம்பெற்றதாக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை எண்பிக்க சனாதிபதியே வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளதாகப் பௌத்த அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
“நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினரை இலக்கு வைத்து, சனாதிபதி வெயியிட்ட அச்சுறுத்தலான கருத்தானது, இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் தளபதிகள் இழைத்ததாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்களை எண்பிக்கக் கூடிய சாட்சியாக அமைந்துள்ளது” என ஹெல பொது சவிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, சனாதிபதியின் முழுப்பெயரைச் சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் கோபமாக கருத்து வெளியிட்ட சனாதிபதி, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் பித்திகல சந்தியில் தன் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் எனினும் பணிகளை ஆரம்பித்த காலத்தில் பதிலளித்த விதத்தில் செயற்படும் திறன் இன்னும் தன்னிடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
“எனினும் நான் இறுதியில் பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன். அந்த நிலைக்கு (மற்றவர்களையும்) கொண்டு வர முடியும். எதற்கும் தயாராக இருக்கும் ஒரு கதாபாத்திரம் நான். அரசியல்வாதிகளுக்காக தன்னால் இவ்வாறு செயற்பட முடியுமென்ற கோட்டாபய இராசபக்சவின் கருத்ததானது, நாட்டின் சனாதிபதி ‘இல்லாத பிரச்சினைகளை வரவழைப்பது’ போன்றது என ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவன்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய இராசபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த (2012) போது கோட்டாபய பற்றி த சண்டே லீடர் ஆசிரியர் பிரடெரிக்கா ஜான்ஸ் கடுமையாக விமர்ச்சித்துக் கட்டுரைகள் எழுதினார். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோட்டாபய இராசபக்ச உச்ச கோபத்தில் அவரை ஒரு பெண் என்றும் பார்க்காமல் தகாத வார்த்தைகளால் கடுமையாக கண்டித்துப் பேசினார். அவர் கொல்லப்படுவார் என்று ஒரு அரசாங்க அதிகாரி கூறினார். அரசாங்கத்தை விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிடுவதை நிறுத்த மறுத்ததால் பிரடெரிகா ஜான்ஸ் ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னரும், தன்னை மர்மநபர்கள் பின்தொடர்ந்ததாகவும், அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் வந்தன என்றும் ஜான்ஸ் கூறினார். கடைசியில் நாட்டை விட்டே அவர் ஓடித் தப்பினார்.
பாதுகாப்பின் அமைச்சின் செயலாளராக இருந்த போது தன்னைப் பற்றிய விமரிசனங்களை விரும்பாது ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டவர் இப்போது சர்வ வல்லமை படைத்த சனாதிபதியாக இருக்கும்போது யாராவது அவரைத் தட்டிக் கேட்க முடியுமா?
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக் கல்லை உடைக்குமாம்.
சனாதிபதி கோட்டாபய இராசபக்ச வீட்டுக் கோழி முட்டை அம்மிக் கல்லை மட்டும் அல்ல மலையையே உடைக்கும்! அவரை விமர்ச்சிப்பவர்கள் இந்தப் பழமொழியை நினைவில் வைத்திருப்பது நல்லது!