இலங்கையில் வழக்கு கிழக்கு ஆகிய பிரதேசங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்தில் இயங்கிவந்த சில உள்ளூராட்சிமன்றங்கள் அவர்கள் கைகளிலிருந்து கைநழுவிச் செல்லும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை அண்மைக்காலத்தில் தமிழ் மக்கள் கண்டு வருகின்றார்கள்.
இந்த வகையில் பிரதேச சபைக்கான தேர்தல் அறிமுகப்பட்டுத்தப்பட்டு கடந்த 25 வருடகாலமாக திருகோணைமலை நகரத்திற்கு மிகவும் அருகில் இயங்கிவரும் உப்புவெளி ‘பட்டினமும் சூழலும்’ பிரதேச சபையின் அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இருந்து வந்த நிலையில் முதல்முறையாக சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தொடர்ச்சியாக தோல்விகள் கிட்டுவதை தமிழ்மக்கள் கண்டு வருகின்றார்கள்.
இந்த தோல்வி இடம்பெற்ற சம்பவத்தின் படி அங்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்.ஏ.டி.எஸ்.டி.ரத்நாயக்க சபையின் தலைவராக நேற்று முன்தினம் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சிமன்றங்கள் உள்ளன. உப்புவெளி ‘பட்டினமும் சூழலும்’ பிரதேச சபையானது 22 உறுப்பினர்களை கொண்டது. 2018ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 07 ஆசனங்களை கைப்பற்றியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சபையின் அதிகாரத்தையும் கைப்பற்றியிருந்தது. சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீது நடத்தப்பட்ட இரண்டு வாக்கெடுப்புகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி கண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் சபைத் தலைவருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் சபைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.ஏ.டி.எஸ்.டி.ரத்நாயக்க வெற்றிபெற்றதை தொடர்ந்து சபையின் அதிகாரம் பொதுஜன பெரமுனவின் வசமானது.
பொதுஜன பெரமுனவின் தரப்பு 12 வாக்குகளையும் கூட்டமைப்பின் தரப்பு 10 வாக்குகளையும் பெற்றிருந்தன.
பொதுஜன பெரமுன சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அக்கட்சியின் 05 உறுப்பினர்களும், சு.கவின் 2 உறுப்பினர்களும் ஐ.தே.கவின் 02 உறுப்பினர்களும் ஆதரவளித்ததுடன், ஈ.பி.டி.பி, தமிழ் சமுதாய ஜனநாயக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவர் வீதம் தெரிவாகியிருந்த மூவரும் ஆதரவளித்தமையாலேயே உப்புவெலி ‘பட்டினமும் சூழலும்’ பிரதேச சபையின் அதிகாரம் பொதுஜன பெரமுனவின் வசமாகியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.