தமிழ் ஈழ மண்ணின் கலாசரா மரபுரிமைகளை அழிப்பது என்பது சிங்கள அரசால் நன்கு திட்ட மிட்ட நடவடிக்கையாகும். அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்ட நிகழ்வு உலகத் தமிழர்களை மாத்திரமல்ல, வெளிநாட்டு மக்களையும் முகம் சுழிக்க வைத்த செயலாகும். இப்படி தமிழர்களின் கலாசரா அடையாளங்களை அழிப்பது என்பது சிங்கள அரசாங்கம் முப்பது ஆண்டுகளாக செய்து வருகின்ற போர் என்று குறிப்பிடலாம். தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்போர் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
உண்மையில் நினைவுச் சின்னங்களை ஏன் அமைக்கிறோம்? நினைவு கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இப் பூமியில் நினைவுகளைப் போல வெகுமதிகள் ஏதுமில்லை. சில நினைவுகள் சுமையாகவும் சில நினைவுகள் சுகமாகவும் இருக்கின்றன. தனி மனிதர்களின் நினைவுகள் ஒரு வகையின. மண்ணின் நினைவுகளும் தேசத்தின் நினைவுகளும் வேறு வகையின. மிகப் பெரிய இன அழிப்பு போர் நடக்கின்ற மண்ணில் பாடங்களை கற்பிக்கும் நினைவுச் சின்னங்கள் தான் அவசியமானவை. அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மனவெளிப்பாடாகவும் காயங்களை ஆற்றும் நினைவுச் சின்னங்களும் இந்த மண்ணுக்கு அவசியமானவை.
கடந்த காலத்தில், அதாவது 2009இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், தமிழர்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நினைவுபடுத்தும் பல நினைவுச் சின்னங்கள் எழுப்பட்டன. போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைந்து அஞ்சலி செலுத்துகின்ற நினைவுச்சின்னங்களும்கூட ஈழ மண்ணில் உருவாக்கப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்கள், முக்கியமான போராளிகளின் நினைவுருக்கள் என்பன, எமது மக்கள் வணங்கும் ஆலயங்களாகவும் கோயில்களாகவும் இருந்தன.
2009இன அழிப்புப் போரின் போது, ஸ்ரீலங்கா அரச படைகள், ஒரு பக்கமாக முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழ் மக்களை கொன்று அழித்துக் கொண்டிருந்த போது, இன்னொரு பக்கத்தில் ஈழ மண்ணில் இருந்த நினைவிடங்கள் அனைத்தையும் அழித்துக் கொண்டிருந்தது. கிளிநொச்சி துயிலும் இல்லம் முதல், வவுனியா துயிலும் இல்லம் வரையில், பரந்தன் சந்தியில் இருந்த குட்டிசிறியின் சிலையில் இருந்து வெல்வெட்டித்துறையில் பன்னிரு வேங்கைகளுக்காக அமைக்கப்பட்ட நினைவிடங்கள் வரையில் அழிக்கப்பட்டன.
இந்த மண்ணில் பிறந்து தவழ்ந்து வாழ்ந்த எமது போராளிகள், சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிராக, இந்த மண்ணில் போராடி மடிந்தார்கள். அவர்களுக்காக இந்த மண்ணிலேயே நினைவுச் சின்னங்களை நாம் எழுப்பி இருந்தோம். அதனை ஒருபோதும் சிங்களவர்களின் தேசத்தில் எழுப்பவில்லை. ஆனால் எங்கள் மண்ணை ஆக்கிரமித்துவிட்டு, எங்கள் போராளிகளின் நினைவுச் சின்னங்களை அழித்துவிட்டு சிங்கள அரச படைகளின் நினைவுச் சின்னங்களையும் போர் வெறியை தூண்டும் நினைவுச் சின்னங்களையும் இலங்கை அரச படைகள் அமைத்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவுத் தூபியை அழித்தவுடன், சமாதானத்திற்காக நினைவுத் தூபி தேவை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் கூறுகிறார். வன்னி முழுவதும் போர் வெறியை தூண்டுகின்ற இராணுவ நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவை சமாதானத்தையா தூண்டுகின்றது? கிளிநொச்சி சந்திரன் பூங்காவில், பாரியதொரு போர் வெறி நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழீழமாக ஒரு கல்லை உருவகித்து, அதனை ஒரு துப்பாக்கி சன்னம் தாக்கி தகர்க்க அதிலிருந்து ஸ்ரீலங்கா தேசிய மலர் மலர்வதுபோல அமைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் அந்த வீதியைக் கடந்து போகும் அத்தகை தருணத்திலும் மக்களுக்கு முள்ளாய் குத்துகின்ற ஒரு போர் வெறி நினைவுச் சின்னம் அது. அதைப்போல புதுமாத்தளனில், ஒரு கையில் துப்பாக்கி, மறு கையில் சிங்கள தேசியக் கொடியுடன் போர் வெறியில் துள்ளும் சிங்கள இராணுவச் சிப்பாயின் மிக பிரமாண்டமான உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சமாதானத்தையா தூண்டுகிறது? அதேபோல ஆனையிறவில் சிங்கள அரச படைகளின் போர் வெற்றியை கொண்டாடும் மிகப் பெரிய நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் சமாதானத்தையா தூண்டுகிறது?
இறந்தவர்களின் கல்லறைகளை அழிப்பது சமாதானத்தை தூண்டும் செயலா? போரில் மாண்டவர்கள் உறங்கும் மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசரால் இடித்து அழிப்பது சாதானச் செயற்பாடா? கல்லறைகளிலும் பழி தீர்க்கின்ற இனவெறி என்பது எவ்வளவு கொடூரமானது? அதைப்போல முள்ளிவாய்க்காலில் ககொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுத்த அரசு, இப்போது அந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியையும் அழித்திருக்கிறது.
இப்படியெல்லாம் செய்துவிட்டு சமாதானத்தின் நினைவுத் தூபி தேவை என ஒரு புறம் பேசுகிறன்றனர். மறுபுறத்தில், உரிய அனுமதி எடுத்து நினைவுத் தூபி அமைக்கவில்லை என்று கூறுகின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட இராணுவத்தின் போர் வெறிச் சின்னங்கள் ஏதாவது உரிய அனுமதி எடுத்து வைக்கப்பட்டதா? உள்ளுராட்சி மன்றங்களில் அனுமதி பெறப்பட்டதா? அப்படி அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட போர் வெறிச் சின்னங்களை இப்போது அழித்து அகற்ற முடியும் என இலங்கை ஆட்சியாளர்கள் கூறுகின்றனரா?
தமிழ் மக்களின் மனங்களில் முள்ளாக குத்தும் இனவழிப்பின் கோரங்களை இராணுவத்தினர் நினைவுச் சின்னங்களாக எழுப்பி வருகின்ற நிலையில், தமிழ் மக்கள் தமக்கான நினைவுச் சின்னங்களை கூட்டாக இணைந்து உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் தமிழ் தலைமைகள் அரசியல் வேறுபாடு கடந்து ஒன்றிணைந்து அது குறித்து ஆராய வேண்டும். இன்று வரையில் முள்ளிவாய்க்காலில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படவில்லை. அது தொடர்பில் தமிழ் தலைமைகள் ஒரு முடிவு எடுக்கவில்லை.
உலகில் எந்தவொரு சமூகமும் தமக்கான நினைவுச் சின்னங்களை உருவாக்க உரித்துடையவர்கள். எமது மண்ணில் எமக்கு நடந்த அடக்குமுறைகள், அழிப்புக்களை நினைவுகூரும் மனங்களை ஆற்றுப்படுத்தும் நினைவுச் சின்னங்களை நாம் எழுப்ப வேண்டும். அவை காலக்கதியில் ஒரு இனத்தின் கலாசார மரபுரிமைச் சின்னங்களாக கொள்ளப்படும். அந்த வகையில் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னங்களை, நினைவு முற்றங்களை நாம் உருவாக்க வேண்டும்.
அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இருந்த இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலத்தில் இருந்த நினைவுத் தூபியை விட பெரியதொரு நினைவுத் தூபியை அந்த இடத்தில் அமைப்பதுடன், இன அழிப்பு குறித்தும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்பு குறித்தும் அந்த இடத்தில் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும். இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இது ஒரு முன்னூதாரணமான செயலாகவும் நினைவாகவும் வரலாறாகவும் இருக்கும்.
அத்துடன் தமிழர் தாயகத்தில் உள்ள பாடசாலைகள் தோறும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னங்களை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக இனவழிப்பு நாளில் பிள்ளைகள் அந்த இடத்தில் அழிக்கப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டியது காலத் தேவையாகும். அத்துடன் வடக்கு கிழக்கில் ஆளும் உள்ளுராட்சி மன்றங்கள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிகளை அமைக்கும் தீர்மானங்களை இயற்றி, உரிய வழிமுறையில் நினைவுத் தூபிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல இராணுவத்தினர் அனுமதியின்றி அமைத்த, தமிழ் மக்களின் மனங்களை அழிக்கும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டியதும் காலத் தேவையாகும். போரின் கொடுமைகளை தமிழ் மக்கள் மறந்து அவர்களின் மனங்கள் புதிதாக மலர வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களை மிரட்டி ஒடுக்க முனைகின்றன இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றியாக வேண்டும். அந்த அதிகாரம் வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்டு. இது தொடர்பில் தமிழ் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
நினைவு வழியாக தொடருகின்ற போரை நிறுத்த வேண்டிய காலம் இதுவாகும். தமிழர்களுக்கு தேவையான நினைவுச் சின்னங்களை அமைக்க தவறுவதனாலும், தமிழர்களுக்கு தேவையற்ற நினைவுச் சின்னங்களை அழிக்க தவறுவதனாலும், தமிழீழத் தீர்வுக்கு ஈழமக்கள் தள்ளப்படுவார்கள். ஈழத் தமிழ் மக்களை இலங்கை பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளு தவறுகின்ற ஒவ்வொரு சந்தர்பத்தையும் தமிழீழத்தை நோக்கி அவர்களை தள்ளுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இலங்கை அரசுதான் உருவாக்குகிறது என்பது இதிலும் புலப்படுகிறது.
தீபச்செல்வன்